‘Reel ஆட்சி.. பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்ட பாக்குக்கு பதில் சொன்ன முதல்வர்’ – எ.வ.வேலு சரமாரி குற்றச்சாட்டு

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று (செப்டம்பர் 8) சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் முதல்வரின் பேச்சு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சபை காவலர்களால் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, “தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் கடந்த 116 நாட்களில் 550 குற்றங்கள் நடைபெற்றிருக்கிறது. அதில் 200 கொலைகள், 300க்கும்மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 8 காவல் மரணங்கள், 10 ஆவணக்கொலைகள் நடைபெற்றிருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாட்டினுடைய சட்டம் ஒழுங்கு பிரச்சனை பற்றி அவர் ஏற்கனவே தன்னுடைய உரையில் சொல்லியிருந்தார்.

ADVERTISEMENT

இதற்கெல்லாம் நேற்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் பதில் சொல்வார் என்று நாங்கள் எல்லாம் எதிர்பார்த்தோம். முதலமைச்சர் அவர்கள் ஏறத்தாழ 27 நிமிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் அமைதியாக அவர் பேசுவதெல்லாம் நாங்கள் கேட்டுக் கொண்டுதான் இருந்தோம். அந்த நிலையில்தான் திட்டமிட்டு குறிப்பாக சட்டமன்றத்தினுடைய விதி 92 ல் நீதிமன்றத்தில் இருக்கிற வழக்கை பொறுத்த அளவுக்கு சட்டமன்றத்தில் விவாதிக்கக் கூடாது என்று பேரவை தலைவர் கொடுத்த விதிப்புஸ்தகத்தில் உள்ளது.

ஆனால், அதை பற்றி பேசவே கூடாது என்று விதி இருக்கிற பொழுது, முதலமைச்சர் அவர்கள் அமலாக்கத்துறையை பத்தி பேச ஆரம்பிச்சார். கோர்ட்டில் இருக்கும் வழக்கின் அபிடவிட்டை முழுமையாக படித்தார். அதை சட்டப்படி படிக்கக்கூடாது. அதை படித்தார். அதோடு மட்டுமல்ல, அதற்கு அடுத்தது என்ன ஆரம்பிச்சார் என்றால் மிசா பத்தி ஆரம்பிச்சார். மிசா பற்றி பேசுவது மட்டுமில்ல.. அவர் ஏற்கனவே சிறந்த நடிகர் என்கிற காரணத்தினால், அவருக்கே உரியதான பாடி லாங்குவேஜ் எல்லாம் செய்தார். அதெல்லாம் நீங்களே பார்த்திருப்பீங்க.

ADVERTISEMENT

மிசா என்பது எல்லாருக்கும் தெரியும் நாட்டுல. ஒரு காலத்துல ஜனநாயக படுகொலை யாரும் பேசக்கூடாது, எழுதக்கூடாது என்ற நிலைமை இருந்தபொழுது 60 ஆண்டு காலம் பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான என்னுடைய கழக தலைவர் சிறையில் இருந்தார். அந்த தியாகத்தை முதல்வர் கொச்சப்படுத்தினார். அந்த தியாகத்தையே கொச்சப்படுத்தியதோடு, பாடி லாங்குவேஜ்ல சொன்னார்.

அதோடு மட்டுமல்ல, அதற்கு அடுத்தது சர்க்காரியா கமிஷன். சர்க்காரியா கமிஷன் என்பது இந்த மாமன்றத்திலே பலமுறை விவாதிக்கப்பட்டு, நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கக்கூடிய அருமை தலைவர் கலைஞர், அதற்கு பல்வேறு நிலையிலே பதில் சொல்லியிருக்கிறார். சர்க்காரியா கமிஷனில் நிலைமை என்ன?

ADVERTISEMENT

1972ல் சர்க்காரியா கமிஷன் நடந்த பொழுது, அப்போதைய கமிஷனுக்கு போனார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அந்த புகாரை கொடுத்த அன்றைக்கு கல்யாணசுந்தரம் அவர்களும், நம்முடைய மக்கள் திலகம் எம்ஜிஆர்-ம் புகார் கொடுத்தார்கள். அதனால கமிஷனில் எம்.ஜி.ஆரை விசாரணைக்கு அழைத்தார்கள்.

அப்போது எம்.ஜி.ஆர் எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. சேலத்தில் உள்ள வழக்கறிஞர் கண்ணன் என்னிடம் கொடுத்து புகார் கொடுக்க சொன்னார். நான் கொடுத்தேன் என்று சொன்னார்.

ஆக சர்க்காரியா கமிஷன் குறிப்பிடுகிற பொழுது, நம்முடைய உலக மாநாட்டிலே இந்தியாவுக்கு பெருமை சேர்த்துக்கொடுத்த தொழிலமைச்சராக இருந்த அண்ணன் மாறனைப் பற்றி குறிப்பிடுகிறார். குறிப்பிடுவது மட்டுமல்ல, அவருடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கிற அளவுக்கு சில வார்த்தைகளை முதலமைச்சர் பயன்படுத்துறார். இது ஒரு பக்கம்.

கமிஷனுக்கு போன எம்.ஜி.ஆர் என்ன சொன்னார் என்றால் வழக்கறிஞர் கண்ணன் தான் கொடுத்தார். அதை தான் நான் சொன்னேன். இதை பற்றி எனக்கு ஒண்ணுமே தெரியாது என்று சொல்லிட்டார். அதுக்கப்புறம் சர்க்காரியா கமிஷன் நிறைவடைகிற பொழுது, இந்த கமிஷன் என்ன சொன்னாங்கன்னு கேட்டீங்கன்னா, 28 குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டது. இந்த 28 குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவித முகாம்தாரமும் இல்லை. கொடுத்தவர்களால் நிரூபிக்கவும் முடியவில்லை என்று சர்க்காரியா கமிஷன் தெரிவித்தது. கமிஷன்ல ஆதாரம் திரட்ட முடிந்தது என்றால் அது நீதிமன்றத்திற்கு சென்றிருக்கும். ஆக அதில் ஒன்றுமே இல்லை.

பட்டுக்கோட்டை வழிகேட்டால் கொட்ட பாக்குக்கு தான் பதில் சொன்னார் முதலமைச்சர். அதை விட என்ன சிறப்பு என்றால், நம்முடைய அருமை அண்ணன் மாறன், அவரைப் பற்றி நாட்டிற்கே தெரியும். சுற்றுச்சூழல் ஸ்டாம்பை அண்ணன் மாறனுடன் வெளியிட்டீர்கள் இல்லையா? அந்த குடும்பத்தில் வந்து அவங்க முதலாளியாக இருந்த அந்த படத்தில் நடித்து பணம் வாங்கியவர்கள் நீங்கள். இந்த சுற்றுச்சூழல் ஸ்டாம்பு வெளியிட்ட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீங்கள், இன்றைக்கு அவரைப்பற்றி நேத்து கொச்சப்படுத்தி பேச வேண்டிய அவசியமில்லை.

ஆக, இவைகளெல்லாம் நாங்கள் இன்றைக்கு ஜீரோ ஹவர்ல பேரவை தலைவரை பார்த்து, சட்டமன்றத்திற்கு சில மாண்புகள் இருக்கிறது. விதிக்கு முரணாக அமலாக்கத்துறையில் இருந்த வழக்கை பற்றி இங்கே முதலமைச்சர் பேசுகிறார். இது தவறு. ஏற்கனவே ஒரு ஜனநாயக போராட்டம் மிசா என்பது, அதைப் பற்றி நீங்க பாடி லாங்குவேஜ்ல நீங்க கொச்சைப்படுத்தியது அது தவறு. சர்க்காரியா கமிஷனிலே எந்தவித குற்றச்சாட்டும் நிரூபிக்க இயலாத பொழுது, அதை எடுத்து நீங்கள் படித்துக் கொண்டிருப்பது தவறு.

எனவே, இந்த மூன்றையும் நீங்கள் சபை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று நான் கேட்கிறேன். ஆனால், அதை அவங்க நீக்க மறுத்துவிட்டார்கள். நான் இன்னொரு செய்தி இந்த இடத்துல சொல்ல விரும்புகிறேன் திமுக ஆட்சியை நடத்தியவர்கள் நாங்கள். திராவிட மாடல் ஆட்சியில தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த என் அண்ணன் ரியல் நடத்தினார். இப்ப தவெக ரீல் ஆட்சி நடத்துகிறார்கள். என்ன காரணம் தெரியுமா? நேத்து இதெல்லாம் பேசி ரீல் எடுத்து விட வேண்டும்.

கடந்த 4 நாட்களுக்கு முன்னால் ஒரு மாற்றுத்தலைவர் உட்கார வைக்கிறாங்க, சத்யபாமா என்கிற ஒரு சட்டமன்ற உறுப்பினர், மாற்றுத்தலைவர் உட்கார்ந்து இருக்காங்க. என்ன ரீல் போட்டாங்க தெரியுமா?

இதுவரைக்கும் சபாநாயகர் ஆசனத்திலே யாரும் பெண்கள் உட்கார்ந்தது இல்லை. ரீல் போட்டாங்களா இல்லையா? ஆனால் உண்மை நிலை என்ன என்றால், இதற்கு முன்னால் அக்கா பொன்னம்மா காங்கிரஸ் தலைவரா உட்கார்ந்திருக்கிறார்

யசோதா , பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த, சட்டமன்ற உறுப்பினரான, லீமா ரோஸ் அவர்கள் உட்கார்ந்து இருக்கிறார்கள். இப்படி பல வரலாறு உண்டு.

ஆக நேற்றைய சம்பவத்தை, நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக, ரீல் தயாரிப்பதற்காக, வெளியிடப்பட்டது. ஒரு நியாயமான கேள்வியை நாங்கள் சபாநாயகரிடம் கேட்கிறோம், ஜனநாயக ரீதியாக நான் கேட்டதை, இன்றைக்கு மறுத்து, காவல்துறை நண்பர்களை வைத்து, எங்களை வெளியே பலவந்தமாக தூக்கி போட்டு இருக்கிறார்கள்.” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share