தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இன்று சபை காவலர்களால் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
சட்டசபையில் நேற்று (செப்டம்பர் 7) காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வர் விஜய் பதிலளித்தார். அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்தார் முதல்வர் விஜய். அத்துடன் சர்க்காரியா ஆணையம், அமலாக்கத்துறை ஆகியவற்றின் அறிக்கைகளையும் முதல்வர் விஜய் சுட்டிக்காட்டி பேசினார்.
இதற்கு நேற்றே சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது திமுகவினருக்கு பதிலளிக்க வாய்ப்பு தரப்படவில்லை. இதனால் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு திமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கம் எழுப்பினர். பின்னர் திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று செப்டம்பர் 8-ந் தேதி காலை சட்டசபை கூடிய போது, திமுக கொறடா எ.வ.வேலு, “ சர்க்காரியா அறிக்கை, அமலாக்கத்துறை அறிக்கைகளை சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியது சபை விதி மீறல். சபையில் இல்லாத மறைந்த முரசொலி மாறன் போன்றவர்களை பற்றி முதல்வர் விஜய் பேசியதும் சபை விதி மீறல்” என சுட்டிக்காட்டி சபைக் குறிப்பில் இருந்து முதல்வர் விஜய் பேச்சை நீக்க வலியுறுத்தினார்.
இதற்கு சட்ட அமைச்சர் நிர்மல்குமார், பொதுப் பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பதிலளித்தனர். அதே நேரத்தில் விஜய் பேச்சை சட்டசபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். பின்னர் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு திமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கம் எழுப்பினர். சட்டசபை விதிகளை மேற்கோள்காட்டி திமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கம் எழுப்பினர்.
அப்போது, திமுக எம்.எல்.ஏக்களை சட்டசபையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று அவை முன்னவர் செங்கோட்டையன் வலியுறுத்தினார். இந்த அமளி நீடித்த போதும், முதல்வர் விஜய்யின் சர்ச்சை பேச்சுகளை சபைக் குறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஆனாலும் திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து சபாநாயகர் இருக்கை முன்னர் அமர்ந்து முழக்கமிட்டனர். இதனையடுத்து திமுக எம்.எல்.ஏக்களை சபையில் இருந்து வெளியேற்ற சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதனால் சட்டசபைக்குள் நுழைந்த சபைக் காவலர்கள், திமுக எம்.எல்.ஏ.க்களை வலுக்கட்டாயமாக சபையில் இருந்து வெளியேற்றினர். திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் உள்ளிட்டோர் சிலரை சபை காவலர்கள் குண்டு கட்டாக வெளியேற்றினர்.
