சர்க்காரியா, அமலாக்கத்துறை அறிக்கைகள்.. விஜய் பேச்சை சபை குறிப்பில் இருந்து நீக்க எ.வ.வேலு வலியுறுத்தல்- சபாநாயகர் மறுப்பு!

Published On:

| By Mathi

EV Velu Urges Removal of Vijay's Speech

தமிழக சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்த முதல்வர் விஜய் சபை மரபுகளை மீறி பேசியதை சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக கொறடா எ.வ.வேலு வலியுறுத்தினார். ஆனால் இதை ஏற்க சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மறுத்துவிட்டார்.

சட்டசபையில் இன்று (செப்டம்பர் 8) எ.வ.வேலு பேசியதாவது: மானியக் கோரிக்கையை அமைச்சர்கள் பேரவையில் தாக்கல் செய்கிறபொழுது, விவாதத்திற்குப் பின் பதிலளிக்கும்போது அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட துறை சம்பந்தப்பட்ட பதில்கள்தான் இதுவரைக்கும் அளித்ததாக நாம் பார்த்திருக்கிறோம்.

ADVERTISEMENT

என்னுடைய சட்டமன்ற வாழ்க்கையில் இந்த அவையிலே முதலமைச்சராக இருந்த மாண்புமிகு கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அம்மையார் ஜெயலலிதா, நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கக்கூடிய அன்புத் தலைவர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின், நம்முடைய மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்கள், அதைப் போன்று ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் எல்லாம் இந்த மாமன்றத்திலே முதலமைச்சராக இருந்து பணியாற்றியிருக்கிறார்கள்.

நான் காவல்துறை மானியத்திலே நிறைய பேசியிருக்கிறேன். நீங்களே அவைக் குறிப்புகளை எடுத்துப் பார்த்தால் அவைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். ஆனால் கண்ணியமிக்க பதில்களைத்தான் அவர்கள் அளிப்பார்கள். நாங்களும் எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் சில குறைகளைச் சுட்டிக்காட்டித்தான் பேசுவோம். அதற்குத்தான் அந்த வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது.

ADVERTISEMENT

எனவே நேற்றைய தினம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பேசுகிற வரை ஏறத்தாழ நாங்கள் 26 நிமிடம் அமைதிதான் காத்தோம். அதில் ஒன்றும் மாற்றமில்லை.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எங்களுக்கு நீங்கள் தந்திருக்கிற இந்த விதி புத்தகத்திலே 92-ல், “நீதி விசாரணையிலே இருக்கும் எப்பொருள் மீதும் தன்னுடைய கருத்தைச் சொல்ல முடியாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நேற்றைய நம்முடைய முதலமைச்சர் பேசிய போது, “ED அனுப்பிய ஆவணத்திலிருந்து சில தகவல்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது அல்லவா?” என்று வழக்கு முழுமையும் இந்த அவையிலே அவர் படிக்கிறார்.

அது அவையினுடைய மரபுக்கு மீறிய செயல்தான். அது கண்ணியத்துக்குரிய செயல் அல்ல. எனவே அது விதிக்கு உட்பட்டதாக இல்லை என்பதே எங்களுடைய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கருத்து.

அதோடு மட்டுமல்ல, மிசா என்பது அனைவருக்குமே தெரிந்தது. தமிழ்நாட்டிலே அந்த மிசா என்கிற கொடுமை ஜனநாயகத்திற்கு எதிராக வந்ததுதான். அந்த மிசாவில் கிட்டத்தட்ட தமிழ்நாட்டிலே 500-க்கு மேற்பட்டோர் சிறைக்குப் போனார்கள். கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை ஏராளம்.

அந்த வகையில்தான் அன்றைக்கு இந்த ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக நம்முடைய தலைவர், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின், அவர் 60 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர், அவர் இந்த மிசா கொடுமையிலே ஆளாக்கப்பட்டு ஓராண்டு காலம் சிறையிலே இருந்தார்கள்.

ஏனென்றால் அப்படிப்பட்ட அந்த ஜனநாயகப் போராட்டத்திலே ஜனநாயகத்தை தமிழ்நாட்டிலே காப்பாற்ற வேண்டும் என்பதற்காக. அதோடு மட்டுமல்ல, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரை ஏற்றுக்கொண்டாரோ, அந்த பெரியாருடைய கொள்கையை ஏற்றுக்கொண்டு இன்றைக்கு அதற்குப் பின்னால் திராவிட இயக்கத்தை நடத்திக்கொண்டிருக்கிற நம்முடைய ஆசிரியர் வீரமணி அவர்கள் கூட இந்த மிசா கொடுமையிலே அவரோடு இருந்தார்கள்.

அடுத்து அப்பொழுது இந்த மார்க்சிய கம்யூனிஸ்ட் தோழர்களும் எங்களோடு விசாரணையிலே இருந்தார்கள்.

நேற்று சர்க்காரியா கமிஷனைப் பற்றி இங்கே பேசப்பட்டது. சர்க்காரியா கமிஷனைப் பற்றி இந்த அவையிலே எத்தனை வருடமாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். அது அவைக் குறிப்பிலே இருக்கிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சர்க்காரியா கமிஷன் இந்த சட்டமன்றத்திலே பலமுறை பேசப்பட்டு, கலைஞர் அவர்கள் முதலமைச்சராக அவரே பதில் சொல்லியிருக்கிறார். அதிலிருந்தும் மறுக்க முடியாது.

ஆனால் அந்த சர்க்காரியா கமிஷனைப் பேசுகிறபொழுது இந்தியாவிலே, உலகத்திற்கே இந்தியாவுக்குப் புகழ் சேர்த்த அண்ணன் மாறனுடைய பெயர் நேற்று இங்கே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பொதுவாக வெளியில் இருக்கிற யாருடைய பெயரும் சட்டமன்றத்திலே பேசக்கூடாது. அவர் பதில் சொல்வதற்கு வாய்ப்பு இல்லை. பேசக்கூடாது என்று ஒரு விதியே இருக்கிறது. அதோடு மட்டுமல்ல அவர் இறந்தவர்.

அந்த சர்க்காரியா கமிஷனில் என்ன நடந்தது என்று சொன்னால், விசாரணைக்குக் கூப்பிடுகிறபொழுது மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் விசாரணைக்குப் போகிறார். போகிறபொழுது சொன்னார், “எனக்கு இதைப் பற்றி எதுவுமே தெரியாது. சேலத்தில் வழக்கறிஞரான கண்ணன் என்பவர், ஒரு இயக்கத்தைச் சார்ந்த அவர் கொடுத்தார். அதை வைத்து நான் சொல்லிவிட்டேன். இதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என்றுதான் சொல்லிவிட்டு வந்தார்.

நிறைவாக சர்க்காரியா அந்த கமிஷனை முடிக்கிறபொழுது என்ன சொன்னார் என்றால், 28 குற்றச்சாட்டுகள் எந்த விதத்திலும் நிரூபிக்கப்படவில்லை. அதனால் வழக்கு தொடர முடியாது என்றுதான் அவர் முடித்தார்.

எதற்கு கமிஷன் போடுகிறார்கள் என்றால், வழக்கு தொடர்வதற்கு முன்னால் அந்த கமிஷனில் ஏதாவது ஆதாரம் இருக்கும் என்று சொன்னால்தான் அதற்குப் பின்னால் FIR போட்டு, charge sheet போட்டு வழக்குப் போட முடியும். ஆனால் சர்க்காரியா கமிஷன் எந்தவித ஆதாரமும் முகாந்திரமும் இல்லை, வழக்கு தொடர முடியாது என்று சொல்லி அவரே முடித்துவிட்டார்.

இங்கே ஏதோ ஒன்று தவறு நடந்ததைப் போலவும், அதில் ஏதோ நம்முடைய அண்ணன் மாறன் அவர்களைப் பற்றியும்…

அண்ணன் மாறன் அவர்களைப் பற்றிச் சொல்லுகிறபொழுது தனிப்பட்ட முறையில் நான் சொல்ல விரும்புகிறேன். இன்றைய முதலமைச்சருக்கும் மாறன் குடும்பம் மிக மிக வேண்டிய குடும்பம். அந்தக் குடும்பத்தோடு இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

டெல்லியில் பிரதமராக மன்மோகன் சிங் இருக்கிறபொழுது மாறன் குடும்பம், விஜய்யை அழைத்துக்கொண்டு அண்ணன் மாறனுடைய தபால் தலையைக்கூட வெளியிட வைத்தது,

இந்த மாண்பு நிறைந்த இந்த சட்டமன்றத்திலே நேற்றைய தினம் முதலமைச்சர் எப்படி ஆதாரமில்லாமல் வெளியில் இருப்பவர்களைப் பற்றியெல்லாம், நீதிமன்றத்தில் இருந்தவைகளையும், மிசாவைப் பற்றியும், இப்படித் தனிப்பட்ட முறையிலே மாறன் போன்றவர்களைப் பற்றியும் பேசியிருக்கிறார்.

இதெல்லாம் இந்த அவைக் குறிப்பிலிருந்து நீங்கள் நீக்க வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எ.வ.வேலு பேசினார்.

சபாநாயகர் மறுப்பு

ஆனால் விளக்கம் அளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், முதல்வர் விஜய்யின் பேச்சை சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என மறுத்துவிட்டார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share