IAS அதிகாரிகள் மீதான ஊழல் வழக்கு… கடவுளுக்குதான் வெளிச்சம் : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சலிப்பு!

Published On:

| By Kavi

எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை விசாரிக்க மத்திய அரசின் அனுமதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம் தொடர்பாக, மத்திய பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் சார்பு செயலாளர் ஆஜராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடந்து வருகிறது. 

ADVERTISEMENT

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகேயன் ஆகிய இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்க தாமதம் செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இது தொடர்பாக பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். 

இந்த நிலையில் வழக்கு மீண்டும் இன்று (செப்டம்பர் 7) விசாரணைக்கு வந்த போது, ”மத்திய அரசு சார்பில் வழக்கு தொடர அனுமதி வழங்க கோரி தமிழக அரசு அனுப்பிய விளக்க கடிதம் ஜூலை 28ஆம் தேதி கிடைக்கப்பெற்றது. அதன் மீது பரிசீலினை நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

தமிழக அரசு சார்பில், இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டது. 

இதையடுத்து நீதிபதி, ”ஊழல் வழக்கில் அனுமதி வழங்க தாமதம் ஏற்படுத்துவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். 

ADVERTISEMENT

இந்தியர்கள் ஊழலுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை என இதுபோன்ற வழக்குகளில் இருந்து தான் முடிவுக்கு வர வேண்டி உள்ளது  என குறிப்பிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ”ஒரு ஊழல் வழக்கில் ஒப்புதல் பெறுவதற்கு நீதிமன்றம் எவ்வளவு வற்புறுத்த வேண்டியுள்ளது. செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பதே சிரமமாக உள்ளது. அனுமதி பெறுவதற்கே இவ்வளவு சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும் நிலையில் இதற்குப் பின் இந்த வழக்கில் என்ன நடக்கும் என்பது கடவுளுக்கு தான் தெரியும்” என்று சலிப்புடன் கூறியுள்ளார். 

தொடர்ந்து, இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர ஒப்புதல் வழங்க தாமதம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்தும் ஒப்புதல் கேட்ட கடிதத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும்  விளக்கமளிக்க மத்திய பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் சார்பு செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். 

வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share