விஜய்யின் ஆலோசகர் பணி நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிட அஞ்சுவது ஏன்? – பாஜக

Published On:

| By Pandeeswari Gurusamy

முதல்வர் ஜோசப் விஜய்யின் ஆலோசகர் பணி நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிட அஞ்சுவது ஏன் என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் விஜய், ஜான் ஆரோக்கியசாமி என்பவரைத் தனது ஆலோசகராக அமர்த்தி, அவருக்கு அரசு வாகனம், காவல்துறைப் பாதுகாப்பு மற்றும் தலைமைச் செயலகத்திலேயே தனி அலுவலகம் என அரசு அதிகாரத்தை வாரி வழங்கியுள்ளார். இந்த நியமனம் குறித்த அரசாணையைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கேட்டால், முன்னுக்குப் பின் முரணான பதில்களை வழங்கி உண்மையை மூடி மறைக்கிறது தவெக அரசு. இது அரசின் வெளிப்படைத் தன்மையற்ற போக்கை அம்பலப்படுத்துவதோடு, அதன் பின்னணியில் உள்ள முறைகேடுகளை மறைக்கும் முயற்சியாகும்.

ADVERTISEMENT

ஏற்கனவே, தான் கடைசியாக நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே.நாராயணாவிற்கு டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி, தனது மேலாளர் ஜெகதீஷ் பழனிசாமிக்கு முதல்வரின் தனிச் செயலாளர் பதவி, தனது நண்பரான விஷ்ணு ரெட்டிக்கு முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ஆலோசகர் பதவி, தனது நண்பரும் ஒளிப்பதிவாளருமான மனோஜ் பரமஹம்சாவிற்கு எம்.ஜி.ஆர் அரசுத் திரைப்படக் கல்லூரித் தலைவர் பதவி, தனது திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்குக் கோவில்களுக்கான அறங்காவலர் தேர்வுக்குழு உறுப்பினர் பதவி என ஜோசப் விஜய் அவர்கள், தனக்கு நெருக்கமானவர்களுக்கு பதவிகளைத் தாரைவார்த்து வரும் நிலையில், தற்போது தவெக-வின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியின் நியமனமும் அந்தப் பட்டியலிலேயே சேர்ந்துள்ளது.

அதிகாரப்பூர்வமற்ற நபர்களையும், தகுதியைப் பார்க்காமல் தனது சினிமா உறவுகளையும், நண்பர்களையும் மட்டுமே அதிகார மையத்தில் அமர்த்தி அழகு பார்ப்பதும், அதற்காகப் பொதுமக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்துவதும் தவெக அரசு தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும். எனவே, இனிவரும் காலங்களில் அனைத்து அரசு நியமனங்களும் ஒளிவுமறைவின்றிப் பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும். தகுதி மற்றும் நேர்மையைப் புறக்கணித்துவிட்டு தனக்குத் தேர்தல் வேலை பார்த்தவர்கள் மற்றும் சினிமா நண்பர்கள் போன்றவர்களுக்கு அரசுப் பதவிகளைப் பரிசாக வழங்குவதை முதல்வர் நிறுத்திவிட்டு, தகுதியுடையவர்களுக்கு மட்டுமே பதவிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share