சட்டமன்றத்தில் இன்று ( செப்டம்பர் 7) காவல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பதில் அளித்து பேசிய முதல்வர் விஜய் சர்காரியா கமிஷன் வைத்த குற்றச்சாட்டுகளை முன் வைத்து கலைஞரையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்தார்.
இதைதொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “முதலமைச்சர் விஜய் சொன்ன குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதற்கு ஒன்றிரண்டு உதாரணங்களைச் சொல்கிறேன். அண்ணா சாலையில் அண்ணா தியேட்டர் உள்ளது. அந்த அண்ணா தியேட்டர் கலைஞர் கருணாநிதிக்கு சொந்தம் என்று சர்க்காரியா கமிஷனில் புகார் கொடுக்கப்பட்டது. அது யாருக்கு சொந்தம் என்று விஜய்… காவல்துறையை கையில் வைத்திருக்கும் விஜய்; தெம்பு, திராணி இருந்தால், சர்க்காரியா கமிஷன் பற்றிப் பேசிய விஜய் அண்ணா தியேட்டர் யாருக்கு சொந்தம் என்று சொல்ல வேண்டும்?
அந்த தியேட்டர் சக்கரியா சேட் என்ற ஒருவருக்கு சொந்தமானது. இது கருணாநிதிக்கு சொந்தமானது என்று அந்த புகாரில் எழுதிக் கொடுக்கப்பட்டது. பூந்தமல்லி ஹைரோட்டில் இருந்த அருண் ஹோட்டல் கலைஞருக்கு சொந்தமானது என சொல்லப்பட்டது. ஆனால், அந்த அருண் ஹோட்டல் யாருக்கு சொந்தம்? விஜய்க்கு தெம்பு, திராணி, தைரியம், துணிச்சல் இருந்தால் அந்த சொத்து யாரிடம் உள்ளது என்று பார்க்க வேண்டும்.
அதைவிட வேடிக்கை, கலைஞருக்கு திருவாரூரில் 15 ஏக்கர் நிலம்தான் இருந்தது. அந்த இடம்தான் இப்போது அது நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கு, லண்டனில் ஒரு டிராக்டர் அவருக்கு ஊழல் செய்ததற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும், அந்த டிராக்டரை வைத்து திருவாரூரில் கருணாநிதி தனது சொந்த இடத்தை உழுதார் என்றும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டில் இடம்பெற்ற டிராக்டரை ஓட்ட வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 50 ஏக்கர் இருக்க வேண்டும். ஆனால், கலைஞருக்கு 15 ஏக்கர் நிலம்தான் இருந்தது. இந்த உண்மையை அன்றே போட்டு உடைத்தோம். அதனால், எந்த மாதிரியான தருணத்தில் சர்க்காரியா கமிஷன் நடந்தது என்பதை முதலில் அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.
வரிக்கு வரி விவாதிக்க தயார்
எமர்ஜென்சி காலத்தில் – இப்போது அவர் சட்டமன்றத்தில் பேசினார், “உடனடியாக நான் உங்களை சந்தித்து பதில் சொல்கின்றேன். அன்றைக்கு சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டபோது எமர்ஜென்சி, பேச்சுரிமை கிடையாது, எழுத்துரிமை கிடையாது, பத்திரிகையாளர் சந்திப்பு கிடையாது, சொல்லும் செய்தி எதுவும் வெளிவராது. அப்படிப்பட்ட தருணத்தில் அந்த சர்க்காரியா கமிஷன் நடந்தபோது, அதை அமைத்த இந்திரா காந்தி அம்மையார் 1980-ல் கடற்கரையில் வந்து, “எனக்கும் தெரியாமல் எமர்ஜென்சி நேரத்தில் சில தவறுகள் நடந்துவிட்டன” என்று வெளிப்படையாகக் கலைஞரை வைத்துக் கொண்டு மன்னிப்பு கேட்டதெல்லாம் பத்திரிகை உலகத்திற்குத் தெரியும், அரசியல் தெரிந்தவர்களுக்குத் தெரியும், பாரம்பரியம் மிக்க அரசியல்வாதிகளுக்குத் தெரியும்.
திடீரென மழையில் முளைத்த காளான்களுக்கு, அரசியல் விபரம் அற்றவர்களுக்கு இது தெரிந்திருப்பதில் நியாயம் இல்லை. காரணம், இது நடந்து 55 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதை இன்று சட்டமன்றத்தில் சொல்லி இருக்கிறார். நான் ஒரே ஒரு உதாரணத்தை அவரைப் பார்த்து கேட்க விரும்புகிறேன்: உள்ளபடி அவருக்கு தெம்பு, திராணி இருந்தால், நீங்கள் சொல்லும் வார்த்தையில் உண்மை இருந்தால், சர்க்காரியா கமிஷனைப் பற்றி எங்களுடன் விவாதிக்கத் தயாரா? வார்த்தைக்கு வார்த்தை விவாதிக்க நாங்கள் தயார்.
யாரோ எழுதி கொடுத்த ஸ்கிரிப்ட்
அதற்குப் பிறகு, எம்.ஜி.ஆர் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். யார் புகார் கொடுத்தாரோ, அவர்தான் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். அப்படி நாங்கள் செய்தது ஊழல் என்று சட்டசபையில் சொல்வது போல் எம்.ஜி.ஆர் நினைத்திருந்தால், பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தபோது கலைஞர் மீது ஏன் வழக்கு போட முடியவில்லை? எந்த வழக்கும் போட முடியாத காரணத்தால்தான் அவர் அமைதியாக இருந்தார்.
77-ல் இந்திரா காந்தி அம்மையாருக்கும் எங்களுக்கும் – எமர்ஜென்சி நேரத்தில் தி.மு.க-வையும் ஜனதா கட்சியையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் திராவிடர் கழகத்தையும் சிறைச்சாலையில் பல பேரை வைத்த காரணத்தால் – அம்மையார் இந்திரா காந்தி அதன் பிறகு சென்னைக்கு வந்தபோது அக்டோபர் 30-ஆம் தேதி கருப்புக்கொடி காட்டுவது என்று கலைஞர் முடிவெடுத்தார். கருப்புக்கொடி போராட்டம் நடத்தியதில் அன்னை மணியம்மையார், கலைஞர் உள்ளிட்ட நாங்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு 45 நாட்கள் சிறையில் இருந்தோம்.
நான் விஜய்யை பார்த்து நேரடியாகக் கேட்கிறேன்; அவருக்கு ஸ்கிரிப்ட் எழுதித் கொடுத்தவரிடம் இந்த டவுட்டை அவர் கிளாரிஃபை பண்ண வேண்டும். நாங்கள் பத்து வருடம் எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தபோது கலைஞரோ தி.மு.க-வோ தவறு செய்திருந்தால் எங்கள் மீது வழக்கு போட்டிருக்க மாட்டாரா? எந்த வழக்கையும் போட முடியாத காரணத்தினால்தான், இந்திரா காந்திக்கு நாங்கள் 77 அக்டோபரில் கருப்புக்கொடி காட்டினோம். அந்த வழக்கில் நாங்கள் கைது செய்யப்பட்டு, நாங்கள் எல்லோரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டோம். இந்த வழக்கில் 1981-ல் தீர்ப்பு வந்தது
நாங்கள் தப்பு செய்ததாக இருந்திருந்தால், ஊழல் செய்ததாக இருந்திருந்தால், எம்.ஜி.ஆர்-இன் ஆட்சியில் இந்த வழக்கில் எப்படியாவது எங்களை உள்ளே தள்ள வேண்டும் என்பதற்காக உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். விடுதலை ஆனோம். பின்னர் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். 77-ல் நாங்கள் கருப்புக்கொடி காட்டியதற்கு 96 பிப்ரவரியில்தான் அந்த வழக்கு முடிந்தது. இது ஒன்று போதாதா ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதற்கு இது ஒன்று போதாதா? இந்த ஸ்கிரிப்ட் எழுதித் கொடுத்தவருக்கு கொஞ்சமாவது கடந்த கால வரலாறு தெரிந்திருந்தால் இப்படி எழுதி இருப்பாரா? இவருக்கு யாரோ ஸ்கிரிப்ட் எழுதித் கொடுத்திருக்கிறார்கள். எழுதித் கொடுத்ததை விஜய் சட்டமன்றத்தில் பேசி இருக்கிறார்.
சினிமாவில் அவரது ஆடியன்ஸை திருப்திப்படுத்தினால் எப்படி சிரிப்பார்களோ, அதே பாணியில் பேசிவிட்டுச் சென்றுள்ளார். அப்படித்தான் இதுவரை இருந்த முதலமைச்சர்கள் பேசினார்களா என்று விஜய்யின் சட்டமன்ற செய்கையை செய்து காட்டினார்.
உங்க அப்பாவிடம் போய் கேளுங்க
இதையெல்லாம் இந்த நாட்டில் பார்க்க வேண்டியது உள்ளது. இதையெல்லாம் நீங்கள் தப்பாக நினைக்கக் கூடாது. இந்த ஆக்ஷனைப் பார்த்துதான் அவருடைய ஃபாலோவர்ஸ் ஓட்டு போட்டார்கள். எம்.ஜி.ஆர் நடித்த ‘நாடோடி மன்னன்’ படம் இன்றும் பொருந்தும்; அவர் பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் அவர் இறந்து 40 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் நிற்கும். நாங்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் பாடிய தத்துவப் பாடல்கள், சமூக சீர்திருத்தப் பாடல்கள் என்று பார்த்தவர்கள். விஜய் அரை மணி நேரம் பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
நல்ல சினிமா காட்சி; அவருடைய ரசிகர்கள் எல்லோரும் கைதட்டி விசில் அடிப்பதற்கு ஒரு அற்புதமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார். அவருடைய ஆடியன்ஸை அவர் சாட்டிஸ்பை செய்துவிட்டார். ஆனால், தமிழகத்தின் தரம், தமிழ்நாட்டின் தன்மானம், தமிழ்நாட்டின் பாரம்பரியம், சட்டமன்றத்தின் மரபு அத்தனையும் இன்று மீறப்பட்டுள்ளது. 19 வருடம்… ஒரு கருப்புக் கொடி காட்டிவிட்டு, அந்த அம்மையாரே எங்கள் மேடைக்கு வந்து கூட்டணி வைத்துவிட்டார்கள். நாங்கள் தப்பு செய்திருந்தால், ஊழல் செய்திருந்தால் விட்டிருப்பார்களா? சுப்ரீம் கோர்ட் வரை சென்ற அன்றைய அரசு, கலைஞர் தவறு செய்திருந்தால் விட்டு இருக்குமா? இந்த சைக்காலஜி கூட தெரியவில்லையே? இதுகூட புரிந்து கொள்ளாமல் பேசுவதா?
இந்த, ‘புகார்’ கொடுக்கும்போது இவர் பிறக்கவே இல்லை. இது 72-ல் கொடுக்கப்பட்ட புகார். அதற்குப் பிறகுதான் உங்கள் அப்பா கலைஞர் எழுதிக் கொடுத்த வசனத்திற்கு டைரக்ஷன் செய்தார். “இல்லை இல்லை அவர் ஊழல்வாதி, எழுதித் கொடுத்த வசனங்களைத் தொட மாட்டேன்” என்று சொல்லிவிட்டுப் போனாரா? உங்கள் அப்பாவிடம் போய் கேளுங்கள்; உங்கள் அப்பாவிடம், “மாண்புமிகு முதலமைச்சர் ஏன் இவ்வளவு தப்பு செய்தவரிடம் போய் நீ டைரக்ட் செய்தாய்?” என்று கேட்கத் தயாரா? இது போன்ற கேள்விகள் எல்லாம் நாட்டிற்குத் தேவையில்லாத ஒன்று.
அரசியலை அரசியலாக பார்க்க வேண்டும் என்று இவருடைய ஆட்சியில் இல்லாத ஊழலா? இன்று காலையில் ஒரு அமைச்சர் ஜெகதீஸ்வரி காரில் ஏற்றி ஒருவர் இறந்துள்ளார். நேற்றைக்கு அவர்களது கட்சிக்காரர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதெல்லாம் இன்று சட்டசபையில் பேச வேண்டிய நேரம். உங்களது கட்சிக்காரர் கொலை செய்யப்பட்டுள்ளார். உங்களுடைய அமைச்சருக்கு சொந்தமான காரில் ஆக்சிடென்ட் ஆகி ஒருவர் இறந்துள்ளார். இதெல்லாம் சட்டமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள். இதையெல்லாம் திசை திருப்பிவிட்டு, ‘டேக் டைவர்ஷன்’ என்ற பாணியில் இப்படி விஜய் பேசி உள்ளார்.
இன்று முழுவதும் விஜய் பேச்சைத்தான் ஊடகங்கள் பேசப் போகின்றன. அதேபோல், 1989-ல் ஜெயலலிதா விவகாரம் பற்றிப் பேசுகிறார். அதைப் பற்றிப் பேசும் யோக்கியதை அவருக்கு கிடையாது. சட்டசபையில் என்ன நடந்தது என்று அவருடன் இருந்த திருநாவுக்கரசு பலமுறை தெளிவான விளக்கங்களைத் தந்து விட்டார். ஆக, திசை திருப்பும் வகையில் உதயநிதிக்கு பதில் சொல்லும் தெம்பு இல்லாமல், திராணி இல்லாமல் இன்று ஒரு கபட நாடகத்தை சட்டசபையில் அரங்கேற்றிவிட்டு ஓடிவிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் என்றார்.
முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசியபோது, “உங்களது பேச்சை விமர்சித்துள்ளார்” என்ற செய்தியாளர் அணியின் கேள்விக்கு, “அவர் எனது பெயரை குறிப்பிட்டுப் பேசவில்லை. எமோஷனலாகப் பேசுவது இயற்கைதான். அதற்கு எல்லாம் உள்நோக்கம் கிடையாது. அவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்; இது போன்ற கொடுமைகளையெல்லாம் பார்க்க வேண்டும்; இவருடைய ஆட்சியில் இருக்கும் எல்லாவற்றையும் முழுமையாக அனுபவித்துவிட்டுத்தான் போக வேண்டும். ‘செத்துப் போய்விடுவார்கள்’ என்று சொன்னால் தான் சாபம்; சாவே வராது என்றால், உங்களுக்கு சாவே வராது என்ற நல்லெண்ணத்தில்தான் சொன்னேன்” என்றார்.
“தமிழக மக்கள் குறித்தும் பெண்கள் குறித்தும் நிர்வாகம் பேசிய காரணமாகத்தான் தி.மு.க எதிரில் உட்கார்ந்து இருக்கிறது” என்று விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, “இவர் பெர்மனெண்டாக ஓட்டு போட்டு மெஜாரிட்டியோடு ஆட்சிக்கு வந்ததுபோல் பேசுகிறார். தி.மு.க-வில் இருந்து ஓட்டு போட்டு ஜெயித்து வந்திருப்பவர்கள் முட்டுக் கொடுத்து உள்ள ஒரு சர்க்கார். நூற்று நாற்பது தொகுதியில் ஜெயித்து இவர் ஆளுமையோடு ஆட்சி நடத்துகிறாரா? ஆட்கள் முட்டுக் கொடுத்துள்ளனர். அந்த முட்டை இழுத்துவிட்டால் ஆட்சி கொலாப்ஸ் ஆகிவிடும். அதன் பிறகு இவரது கட்சியும் இருக்காது, ஆட்சியும் இருக்காது” என்றார்.
“இவரை விட ஜாம்பவான்களையெல்லாம் பார்த்து வளர்ந்த கட்சி தி.மு.க. 75 ஆண்டு கால கட்சி.. நேருவையே பார்த்தவர்கள். பிரதமர் நேரு தி.மு.க-வை ஒழிக்க சட்டத்தையே திருத்தினார். இந்த வரலாறு விஜய்க்கு தெரியுமா? அண்ணா திராவிட நாடு கேட்டபோது, தி.மு.க-வை தடை செய்ய வேண்டும் என்பதற்காகவே ‘நேஷனல் இன்டகிரேஷன் கமிட்டி’ என்ற ஒன்றை போட்டு தி.மு.க-வை தடை செய்ய முயன்றனர். இது எல்லாம் விஜய்க்கு தெரியுமா என்று கேள்வி எழுப்பினார்.
