திமுகவின் தொடர் அமளி… கண்டித்த சபாநாயகர்: பரபரப்பான பேரவை நிகழ்வுகள்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தநிலையில் நேற்று முன் தினம் இரவு தமிழக தலைநகரை உலுக்கும் வகையில் தவெக நிர்வாகி கண்ணன் கொலை செய்யப்பட்டார்.

முதல்வர் பதிலளிக்க ஒரு நாளே இருந்த நிலையில், நடைபெற்ற இந்த கொலை தவெக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

ADVERTISEMENT

இந்தசூழலில் இன்று (செப்டம்பர் 7) காலை சட்டப்பேரவை கூடியது.

காலை 9.30 மணிக்கு அவை தொடங்கியது முதல் திமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

ADVERTISEMENT

சபாநாயகர், 2026 தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்திருத்த முன்வடிவை கொண்டு வர வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து செங்கோட்டையன் பேச ஆரம்பித்ததும், திமுகவினர் எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்குமாறு எழுந்து நின்று கோஷம் எழுப்பினர்.

ADVERTISEMENT

இதற்கு சபாநாயகர் பதிலுரைக்கு பிறகுதான் உட்காருங்கள்… அட்டவணைப்படி போலாம் என்று அறிவுறுத்தி செங்கோட்டையனை பேசுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் திமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில், ”இப்போது என்னால் மென்ஷன் செய்ய முடியாது. அரசினர் சட்ட முடிவுக்கு பிறகு… பதிலுரையை தொடர்ந்துதான். இப்போது அனுமதிக்க முடியாது” என்று சபாநாயகர் கூறிவிட்டார்.

தொடர்ந்து திமுகவினர் கோஷம் எழுப்பிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம், 2026 தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்திருத்த முன்வடிவை கொண்டு வர செங்கோட்டையன் அனுமதி கோரினார். குரல்வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் நிறைவேறியது.

2026ஆம் ஆண்டு ஊராட்சிகள் இரண்டாம் திருத்த சட்ட முன்வடிவை நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் முன்மொழிந்தார். இந்த தீர்மானமும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

அதுபோன்று தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி சட்ட முன்வடிவு ஆகியவை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து முதல்வரை பதிலுரை ஆற்ற சபாநாயகர் அழைப்பு விடுத்தார். இதற்கு தவெகவினர் மேசையை தட்டி வரவேற்ற நிலையில், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து நின்று கொண்டே அமளியில் ஈடுபட்டனர்.

திமுக எம்.எல்.ஏ மார்க்கெண்டேயனின் பேச்சை சுட்டிக்காட்டிய முதல்வர் விஜய், ’சட்டப்பேரவைக்குள்ளேயே எலும்பை உடைப்பாராம்… அவர் என்ன ஆர்த்தோ டாக்டரா. இப்படியெல்லாம் பேசுவதுதான் அரசியலா. இப்படி பேசுவதை மக்கள் பார்த்ததால்தான் அவர்கள் எதிர்க்கட்சியில் உட்கார்ந்துள்ளனர்” என்று கூறினார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் எழுப்பிய திமுகவினர் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டாம் என்று கூறிய நிலையில், ”இந்த பிரச்சினையை அவை உரிமை குழுவுக்கு அனுப்பியிருக்கிறேன் ” என்று பதிலளித்தார் சபாநாயகர். உடனே முதல்வர் விஜய், உங்களுக்கு அட்வைஸ் பண்ண நான் வரவில்லை என்று குறிப்பிட்டார்.

மக்களை விடவா, நாங்கள் உங்களை பற்றி கமெண்ட் செய்திட போகிறோம் என்று திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசிக்கொண்டிருந்தார். அமலாக்கத் துறை கடிதம், டெண்டர் விவகாரம் ஆகியவை சுட்டிக்காட்டி பேசினார்.

இதனால் உட்காராமல் தொடர்ந்து திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். எழுந்து நின்றவாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் பேசுவதை கவனித்துக்கொண்டே இருந்தார். திமுகவின் மூத்த உறுப்பினர்களான கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் குழுவாக நின்று ஆலோசித்துக்கொண்டிருந்தனர்.

அதுவே ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி முதல்வர் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தனர். குறிப்பாக அமைச்சர் ஸ்ரீநாத் எழுந்து நின்று கைத்தட்டினார்.

தொடர்ந்து பார்டி பண்ட் குறித்து பேசிய விஜய் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு பேசினார். இதையும் உதயநிதி, முதல்வர் விஜய்யை பார்த்தவாறே கவனித்துக்கொண்டிருந்தார்.

டாஸ்மாக் ஊழல், செந்தில் பாலாஜி மற்றும் அவர் தம்பி மீதான அமலாக்கத் துறை வழக்கு ஆகியவற்றை குறிப்பிட்டும் முதல்வர் பேசினார்.

பதிலுரை முடிந்ததும், மீண்டும் அரசினர் தீர்மானங்களை சபாநாயகர் வாசித்தார். ஆனால் திமுகவினர் கோஷம் எழுப்பி, எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டனர்.

இதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், ”முதல்வர் பேசும்போது பல ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். எதிர்க்கட்சி பொறுப்பில் இருக்கிறவர்கள் மக்கள் மன்றத்தின் முன்பாக அவருடையை பேச்சு நேரலை செய்யப்படும் போது அமைதியாக இருக்க வேண்டும். நீங்கள் பேசும்போது அமைச்சர்கள் எப்படி பதில் சொல்லி, அதற்கு நீங்கள் மீண்டும் பதில் சொன்னீர்களோ… அதுபோன்ற வாய்ப்புகள் எல்லாம் இருந்தது.

ஆனால் என்னுடைய அனுமதி இல்லாமல் போஸ்டரை கொண்டு வந்து காட்டுவது, குரல் கொடுப்பது ஆகிய செயல்களில் ஈடுபடுகிறீர்கள். அவருடைய பேச்சு வெளியில் போகாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக உங்கள் செயல்பாடுகள் இருந்திருந்தால், நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவே முடியாது.

அவர் பேச்சை ஆரம்பித்தது முதல், நீங்களே அழுத்து போகிற அளவுக்கு குரல் கொடுத்துக்கொண்டே இருந்தீர்கள். ஆனால் அவர் தனது பேச்சை முழுமையாக நிறைவு செய்திருக்கிறார்.

முதல்வர் எப்போது பேசுவார், பதில் சொல்லுவார் என்று கேட்ட நீங்கள் அமைதியாக இருந்திருக்க வேண்டும். விளக்கமளிக்க கூடிய வாய்ப்பும் உங்களுக்கு இருந்திருக்கும். அதையெல்லாம் இழந்துவிட்டீர்கள்.

என்னை பொறுத்தவரை, முதல்வர் பேசும்போது ஆரம்பத்திலிருந்தே கூச்சல் குழப்பம் செய்தது தவறு என்று கருதுகிறேன். போஸ்டர்ஸை எல்லாம் தூக்கி காட்டுகிற நேரம் இல்லை இது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

கூச்சலும் குழப்பமும், முதல்வர் பேசுவதை தடுக்க வேண்டும். அவரது பேச்சு மக்களிடம் சென்றுவிடக் கூடாது என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்திருக்கிறீர்கள். இதற்கு முன் இப்படி நடந்தது இல்லை. ஒரு நிமிடமாவது அமைதியாக இருந்திருந்தால் உங்களை அனுமதித்திருப்பேன்” என்றார்.

உடனே முதல்வர் விஜய், அவர்களை பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனால் எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கிறேன் என்றார் சபாநாயகர். அப்போது எதிர்க்கட்சியினர் இருக்கைகளில் இருந்து முன்னால் வந்து கோஷம் எழுப்பினார்.

இதனால் சபாநாயகர், ”இல்லைங்க… அனுமதி இல்லை. இதுதான் பேரவை தலைவரின் முடிவு. வனத்துறையை பேச நான் அனுமதியளித்துவிட்டேன். நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம்” என்று கூறி அலுவல் பணிகளுக்கு அனுமதித்தார்.

இதற்கிடையே சபாநாயகர் இருக்கைக்கு முன் தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share