சட்டப்பேரவையில் திமுக தர்ணா: சபாநாயகர் இருக்கை முற்றுகை

Published On:

| By Pandeeswari Gurusamy

சட்டப்பேரவையில் இன்று முதல்வர் விஜய் பதிலுரைக்கு பின்னர் திமுகவினரைப் பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்ததால் திமுகவினர் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் 18 நாள்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், செப்டம்பர் 3-ஆம் தேதி முதல்வர் விஜய்யின் பொறுப்பில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இன்று அதற்கான பதிலுரையை முதல்வர் விஜய் பேரவையில் ஆற்றினார். அப்போது பேசிய முதல்வர் விஜய், திமுகவினரின் சட்டமன்ற செயல்பாடுகள் மற்றும் திமுக ஆட்சியில் நடந்த குற்றங்களைப் பட்டியலிட்டார்.

இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு குரலைப் பார்த்துச் சிரித்தவாறே முதல்வர் விஜய் தனது பதிலுரையை முடித்த நிலையில், திமுக தரப்பில் பேச வாய்ப்பு கோரப்பட்டது.

ADVERTISEMENT

திமுகவினரைப் பேச அனுமதிக்க முடியாது என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் அவையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். மேலும், சபாநாயகர் இருக்கைக்கு முன் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், “உங்கள் உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்படுகிற இடம் இது அல்ல; நான் அப்படிப்பட்ட ஆளும் இல்லை, அனுமதிக்க முடியாது. முதல்வர் பேசும்போது நீங்கள் அமைதியாக இருந்திருந்தால், இப்போது உங்களை பேச அனுமதித்திருப்பேன். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள், நேரலையிலும் சென்று கொண்டிருக்கிறது. யார் யார் எப்படி என்று மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை.

ADVERTISEMENT

‘முதலமைச்சர் எப்போது பேசுவார், எப்போது பேசுவார்’ என்று சபாநாயகரிடம் கேட்டீர்கள்; முதல்வர் பேசினார். அவர் பேசும்போது நீங்கள் அமைதியாக இருந்திருந்தால் நான் வாய்ப்பு கொடுத்திருப்பேன். ஆனால், அவர் பேசுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே நீங்கள் வந்ததாக எனக்குத் தோன்றியது. அதனால் நீங்கள் பேச நான் அனுமதிக்க மாட்டேன்” என்று தெரிவித்தார்.

அப்போது குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் காலையிலிருந்து முதல்வர் பேசுவதற்குத் தடையாகவும், தொடர்ந்து சட்டமன்ற விதிகளுக்கு மாறாகவும் நடந்து கொண்டிருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய் திமுகவினரை பேச அனுமதி அளிக்குமாறு தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share