‘போதை’ முழு மரத்தை 100 நாட்களில் அகற்ற முடியாதுதான்.. விஜய்

Published On:

| By Mathi

CM Vijay Assembly Speech

“‘போதை” என்கிற முழு மரத்தையும் வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும். அது ஒரு நாளிலோ, 100 நாட்களிலோ முடியும் பணி அல்ல. இதற்காக மாநிலத்தின் 37 மாவட்டங்கள் மற்றும் 9 மாநகரங்களில் 65 போதைப்பொருள் தடுப்புப் படைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று (செப்டம்பர் 7) காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வர் விஜய் அளித்த பதில்: நான் பதவியேற்ற முதல் நாளே, தமிழ்நாட்டு மக்களுக்கு ஊழலற்ற, வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை வழங்குவதே இந்த அரசின் முதன்மையான நோக்கம் என்று தெளிவாகவும் உறுதியாகவும் கூறியுள்ளேன்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் ஊழலைத் தடுப்பதிலும், லஞ்சத்தை ஒழிப்பதிலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை மிக முக்கியமான பங்காற்றி வருகிறது.

நமது அரசு ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது குடும்பத்தையும், தனிப்பட்ட சுகங்களையும் மறந்து அரசுப் பணியை முழு அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றனர். அவர்களின் நேர்மையையும் அர்ப்பணிப்பையும் இந்த அரசு மதிக்கிறது; அவர்களுக்குத் தலைவணங்குகிறது.

ADVERTISEMENT

அதே நேரத்தில், ஒரு சிலர் தங்களது தனிப்பட்ட சுயலாபத்திற்காக லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, அவரது பெயர் நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியாகும்போது, அந்தச் செய்தி அவரை மட்டுமல்ல; அவரது குடும்பத்தினரையும் ஆழமாகப் பாதிக்கிறது என்பதை சம்பந்தப்பட்ட அரசு ஊழியரும் அவரது குடும்பத்தினரும் சிந்திக்க வேண்டும்.

எனவே, அரசு ஊழியர்கள் தங்களது பணியில் நேர்மையையும் கடமை உணர்வையும் கடைப்பிடித்து, தங்களுக்கும் தங்களது குடும்பத்திற்கும் எந்தவித அவப்பெயரும் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

ADVERTISEMENT

அதே நேரத்தில், ஊழல் தடுப்பு அமைப்புகள் தங்களது சட்டப்பூர்வமான கடமையை எந்தவிதத் தயக்கமும் இன்றித் தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்த அரசு எந்தவித சமரசத்தையும் செய்யாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜீரோ டாலரன்ஸ் டூவர்ட்ஸ் கரப்ஷன் — Zero Tolerance Towards Corruption.

ஊழல் தடுப்பு அமைப்புகள் தங்களது சட்டப்பூர்வமான கடமையை எந்தவிதத் தயக்கமும் இன்றித் தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

போதைப்பொருள் கலாச்சாரம் கடந்த ஆட்சியாளர்களால் கவனிப்பாரற்று விடப்பட்டதால், ஆழமாக வேரூன்றி மரமாக வளர்ந்து நிற்கிறது. இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாகவும் இருந்து வருகிறது.

இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை, குடும்பக் கண்காணிப்பு குறைவு, குற்ற வலையமைப்புகளின் தாக்கம் போன்றவை போதைப்பொருள் பயன்பாட்டிற்குக் காரணமாகின்றன.

போதைப்பொருள் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்காக போதைப்பொருள் தடுப்புப் படைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம், ‘போதை’ என்கிற மரத்தின் ஒரு சில கிளைகளைத்தான் வெட்டியிருக்கிறோம். ஆனால், ‘போதை’ என்கிற முழு மரத்தையும் வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும். அது ஒரு நாளிலோ, 100 நாட்களிலோ முடியும் பணி அல்ல.

இதற்காக மாநிலத்தின் 37 மாவட்டங்கள் மற்றும் 9 மாநகரங்களில் 65 போதைப்பொருள் தடுப்புப் படைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

NDPS சட்டத்தின் கீழ் 3,263 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,846 கிலோ கஞ்சா மற்றும் 1,16,159 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை மாநகரத்தில் மட்டும் NDPS சட்டத்தின் கீழ் 330 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 546 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 600 கிலோ கஞ்சா மற்றும் 65,748 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கான விற்பனை மற்றும் கடத்தல் வலையமைப்புகளை முறியடிப்பதோடு, குறிப்பாக நமது இளைஞர்களைப் போதையின் பிடியிலிருந்து பாதுகாப்பதே இந்த அரசின் முதன்மையான நோக்கமாகும்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மாண்புமிகு உறுப்பினர்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

இரண்டு பெண் தலைவர்களைக் கொள்கைத் தலைவர்களாகக் கொண்ட ஒரே அரசு நமது தமிழக வெற்றிக் கழக அரசு.

பெண்களைத் தாயாக, அக்காவாக, தங்கையாக, தோழியாகப் பார்க்கக்கூடிய அரசு இது. பெண்கள் அச்சமின்றிப் பாதுகாப்பாக வாழக்கூடிய சமூகத்தை உருவாக்குவது இந்த அரசின் மிக முக்கியமான பொறுப்பாகும்.

பாலின சமத்துவமின்மை, குடும்ப மற்றும் சமூகப் பாதுகாப்பில் ஏற்படும் குறைபாடுகள், இணையத்தின் தவறான பயன்பாடு, குடும்பத் தகராறு, காதல் மற்றும் திருமணம் தொடர்பான பிரச்சினைகள், சமூக அழுத்தம் மற்றும் போதை கலாச்சாரம் போன்ற பல்வேறு காரணங்கள் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் பின்னணியாக உள்ளன.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக எந்தவிதமான குற்றம் நடைபெற்றாலும், குற்றவாளிகள் மீது சட்டப்படி உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்குத் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வழக்குகளை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதுடன், நீதிமன்றத்தின் மூலம் உரிய தண்டனை கிடைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேபோல், குற்றம் நடைபெற்ற பின்னர் நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல், குற்றம் நடைபெறுவதற்கு முன்பே தடுப்பதே இந்த அரசின் நோக்கமாகும்.

இதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை மையமாகக் கொண்டு ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப் படை அமைக்கப்பட்டு, 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், அவர்களுக்கு 327 நான்கு சக்கர வாகனங்கள், 109 இருசக்கர வாகனங்கள் மற்றும் நவீன உபகரணங்கள் ரூ.357 கோடியில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளின் மூலம் 268 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காணாமல் போன 125 பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவர்களது குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 37,150 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, 21 குழந்தைத் திருமணங்களும் தடுக்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு உறுப்பினர்கள் பேசியபோது காவல் மரணங்கள் குறித்துத் தெரிவித்திருந்தனர்.

காவல் நிலையத்தில் ஒரு உயிரிழப்பு ஏற்படுவது என்பது சாதாரணமான நிகழ்வு அல்ல. அது ஒரு குடும்பத்தின் இழப்பு மட்டுமல்ல; காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினையாகும்.

எனவே, காவலில் எந்த ஒரு மரணம் ஏற்பட்டாலும், அதன் காரணம் குறித்து வெளிப்படையான, பாரபட்சமற்ற மற்றும் சட்டப்படியான உரிய விசாரணை நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, காவல் மரணம் தொடர்பான தகவல்கள் உரிய காலத்திற்குள் தெரிவிக்கப்படுவதோடு, தேவையான மருத்துவ உடற்கூறு ஆய்வு மற்றும் மாஜிஸ்திரேட் விசாரணை நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒரு காவலர் தவறு செய்திருந்தால், அவர் காவல்துறையைச் சேர்ந்தவர் என்பதற்காக எந்தவிதப் பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை.

தவறு செய்தவர் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையைச் சரிவரச் செய்து வருகிறது.

காவல் நிலைய மரணங்களை முற்றிலும் தவிர்க்கும் நோக்கில் CCTV கண்காணிப்பு, மருத்துவப் பரிசோதனை, தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்படும் என்பதை இந்த அவையில் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

21-ஆம் நூற்றாண்டின் குற்றங்களை 20-ஆம் நூற்றாண்டின் காவல் முறைகளால் எதிர்கொள்ள முடியாது.

இன்று குற்றம் தெருவில் மட்டுமல்ல; இணையத்திலும் நடைபெறுகிறது. எனவே, குற்றம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட, குற்றம் நடைபெறக்கூடிய சூழலை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதே நவீன காவல்துறையின் நோக்கமாக இருக்க வேண்டும்.

தொழில்நுட்பம் காவல்துறையின் கண்ணாகவும், தடயவியல் அறிவியல் அதன் கரமாகவும், மக்கள் பங்கேற்பு அதன் இதயமாகவும், சட்டத்தின் முன் சமத்துவம் அதன் முதுகெலும்பாகவும் இருக்க வேண்டும்.

குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீது அச்சமும், பொதுமக்களுக்குக் காவல்துறையின் மீது நம்பிக்கையும் ஏற்படுத்தும் சுதந்திரமான, நவீனமான, மக்கள் சார்ந்த காவல்துறையை உருவாக்குவதே இந்த அரசின் லட்சியம்.

காவல்துறை என்பது அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றும் துறை மட்டுமல்ல. காவலர்கள் பல நேரங்களில் தங்களது உயிரைப் பணயம் வைத்துக் களப்பணியில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

காவல்துறையில் பணியாற்றும் நமது காவலர்களும் காவல் பணியாளர்களும் பொது மக்களின் பாதுகாப்புக்காகத் தங்களது உயிரையும் குடும்ப நலனையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் நலனும் பாதுகாப்பும் இந்த அரசின் முக்கியமான பொறுப்புகளில் ஒன்று.

ஒரு விபத்து, கலவரம், தீ விபத்து, பேரிடர், குற்றச் சம்பவம் அல்லது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டால், மற்றவர்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்கும்போது காவலர் அந்த ஆபத்தை நோக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

‘நான் அங்கு சென்றால் எனக்கு என்ன நேரிடும்?’ என்று ஒரு கணம்கூட எண்ணாமல், அங்கு ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும்; சட்டத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற கடமை உணர்வுடன் களத்தில் நிற்பவர்கள்தான் நமது காவலர்கள்.

காவல்துறைப் பணியில் ஏற்படும் அதிகப்படியான பணிச்சுமை, மன அழுத்தம், நீண்ட நேரப் பணி, போதிய ஓய்வின்மை மற்றும் பணிச்சூழல் தொடர்பான காரணங்களால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கவனம் செலுத்தி வருகிறது.

காவலர்களின் பணிச்சுமையைக் குறைத்தல், போதிய ஓய்வு மற்றும் விடுப்பு வழங்குதல், மனநல ஆலோசனை, மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட நலத்திட்டங்களை வலுப்படுத்தி, பணியின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை முற்றிலும் தவிர்க்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை இந்த அவையில் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு உறுப்பினர்கள் கூறியதுபோல, காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நீண்டகாலம் நிரப்பப்படாமல் இருப்பது, பணியில் உள்ள காவலர்களின் சுமையை மேலும் அதிகரிக்கிறது.

எனவே, காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களைத் துறைவாரியாகவும் மாவட்டவாரியாகவும் கணக்கிட்டு, தேவையான பணியிடங்களை முன்னுரிமை அடிப்படையில் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

‘மக்களைக் காக்கும் காவலர்களைக் காப்பது அரசின் கடமை’ என்ற அடிப்படையில், காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பான, மனிதநேயமான, நவீன பணிச்சூழலை உருவாக்க இந்த அரசு பல புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

காவல்துறையுடன் இணைந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளும் மக்களின் பாதுகாப்பில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. இந்தத் துறையில் பணியாற்றும் வீரர்களின் அர்ப்பணிப்பை இந்த அரசு மதித்து வருகிறது.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையை நவீனமயமாக்குதல், நவீன உபகரணங்களை வழங்குதல், பணியாளர்களின் தேவைகளை நிறைவேற்றுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன.

அனைத்தையும் விரைவில் பரிசீலித்து, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையை ஒரு நவீன துறையாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு, காவல்துறை, ஊழல் தடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்து இந்த அவையில் மாண்புமிகு உறுப்பினர்கள் பலரும் தங்களது கருத்துகளையும், தொகுதி சார்ந்த கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.
உறுப்பினர்கள் முன்வைத்துள்ள அனைத்து கருத்துகளும் அரசின் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒவ்வொரு கோரிக்கையும் ஆய்வு செய்யப்பட்டு, செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

சிலர் அரசின் செயல்பாடுகளைப் பாராட்டியுள்ளனர். சிலர் எங்களது குறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளனர். சிலர் ஆரோக்கியமான விவாதங்களை முன்வைத்துள்ளனர். பல உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளின் கோரிக்கைகளையும் எடுத்துரைத்துள்ளனர்.

அனைத்துக் கருத்துகளும் குறிக்கப்பட்டு, உரிய துறைகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

இந்த அரசு ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு மட்டுமல்லாமல், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கும்.

சட்டம்-ஒழுங்கு, ஊழல் தடுப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவை வெறும் அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு.

குற்றம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட, குற்றம் நடைபெறுவதற்கான காரணங்களை முன்கூட்டியே கண்டறிந்து அதைத் தடுப்பதே நமது இலக்கு.

காவல்துறை சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாகச் செயல்படும். குற்றவாளிகள் மீது எந்தவித சமரசமும் இல்லாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே நேரத்தில், குற்றத்தில் சிக்கக்கூடிய இளைஞர்களைக் குற்றவாளிகளாக மாறுவதற்கு முன்பே காப்பாற்றுவதற்கான சமூக மற்றும் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும். மக்கள் அச்சமின்றி வாழ வேண்டும். அரசு நிர்வாகம் ஊழலற்றதாகவும் வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். இதுவே இந்த அரசின் உறுதியான நோக்கம் என்பதை அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share