தவெக: ஒரு டிரோஜன் குதிரையின் குதிரை பேரமும், கூட்டணி நாடகமும்

Published On:

| By ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன் குறை

தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்வைத்த அரசியல் என்று ஒன்று இருந்தால் அது என்ன? அது தி.மு.க தீய சக்தி; தி.மு.க-விற்கும் தவெகவிற்கும்தான் போட்டியே என்பதுதான். நடிகர் விஜயின் திரைப்பிம்ப கவர்ச்சி அதற்கு மூலதனம். இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், டிவிட்டர் ஆகிய சமூக ஊடகங்கள் அதன் பிரசார தளம். அவற்றுடன் சேர்த்து கூடுதலாக நிறைவேற்ற முடியாத மானாவாரியாக அள்ளி வீசப்பட்ட வாக்குறுதிகள். இறுதியாக சட்டங்கள், மக்களாட்சி நெறிமுறைகளுக்குப் புறம்பாக சிறுவர்கள், குழந்தைளை நோக்கிய பிரசாரம், அவர்களை பிரசாரத்திற்கு பயன்படுத்திய விபரீதம்.

தி.மு.க-வின் பிரசாரம் என்ன? ஒன்றிய அரசை தங்கள் பிடியில் வைத்திருக்கும் பாசிச மதவாத சக்தியான பாஜக-வை எதிர்த்து தமிழ்நாட்டை ஒரணியில் திரட்டி போராடுவோம் என்பதுதான். மாநில சுயாட்சிக் கொள்கையை முன்னெடுப்பது, ஒன்றியத்தில் அதிகாரங்கள் குவிவதை முழுமூச்சாக எதிர்ப்பது, சமூக நீதியின் மீது தொடுக்கப்பட்ட EWS – பொருளாதார நலிவுற்றோர் இட ஒதுக்கீடு என்ற தாக்குதலை எதிர்ப்பது, மறைமுக, நேர்முக இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்ப்பது ஆகியவை.

ADVERTISEMENT

தவெக ஒரு விநோத அரசியலைச் செய்தது. அது என்னவென்றால் பாஜக கொள்கை எதிரி, தி.மு.க அரசியல் எதிரி என்றது. இதில் நாம் முக்கியமாக என்ன கவனிக்க வேண்டும் என்றால் அரசியல் எதிரி கொள்கை எதிரியாக இல்லாமல் இருக்கலாம். பொதுவுடமை கொள்கையை ஏற்கும் இரு கட்சிகள், அரசியல் அணிகளில் முரண்பட்டு நிற்கலாம்.

ஆனால் கொள்கை எதிரி அரசியல் எதிரியாக இல்லாமல் இருக்க முடியாது. தேர்தல் முரணரசியல் கட்டாயத்தில் எதிரிக்கு எதிரி நண்பன் என்று கூட்டணியே அமைத்தாலும், கொள்கை எதிரி அரசியல் எதிரியாகவும்தான் இருக்க முடியும். ஆனால் பாஜக என்ன செய்தாலும் அதனைக் கண்டித்து தவெக ஒரு வார்த்தை பேசாது என்பதற்கு ஆயிரம் உதாரணங்கள் கூறலாம். ஜனநாயகன் பட த்தின் வெளியீட்டையே பாஜக அரசு தடுத்தபோதுகூட தவெக மெளனம் காத்தது. அது மட்டுமல்லாமல் பாஜக பாசிசம் என்றால், தி.மு.க பாயாசமா என்று கேட்டு மிக முக்கியமான அரசியல் முரணையே அர்த்தமிழக்கச் செய்ய முயன்றது.

ADVERTISEMENT

தேர்தல் பிரசாரத்தில் தவெக கட்சி அணியினர் கூட பாஜக-வை தாக்கிப் பேசவேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டதாக சமூக ஊடங்களில் காணொலிகள் பதிவு செய்யப்பட்டன. குறிப்பாக தி.மு.க எதிர்ப்பு மன நிலை கொண்ட பார்ப்பனீய சக்திகள் விஜய் வருகையை பெரும் நம்பிக்கையாகக் கருதியதையும் சமூக ஊடகங்களில், தொலைகாட்சி விவாதங்களில் பார்க்க முடிந்தது.

இதனை பொறுமையாக அலசிப் பார்த்தால் ஒரு சாத்தியம் நிச்சயம் அனைவருக்கும் புலனாகும். தி.மு.க-வை கருத்தியல் அளவில் முதற்பெரும் எதிரியாகக் கருதும் பார்ப்பனீய சக்திகள், நேரடியாக பாஜக தமிழ்நாட்டில் வெல்ல முடியாது என்பதை புரிந்துகொண்டனர். ஜெயலலிதா மறைந்தவுடன் அ.இ.அ.தி.மு.க-வை தங்கள் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்றனர். அந்த முயற்சியில் அ.இ.அ.தி.மு.க பிளவுபட்டு பலவீனப்பட்டதே தவிர அதனை பாஜக-வால் உட்செரிக்க இயலவில்லை. அதனால் அ.இ.அ.தி.மு.க-வால் தனித்தோ, பாஜக-வுடன் சேர்ந்தோ தி.மு.க-வை வெல்ல முடியுமா என்ற ஐயம் பிறந்தது.

ADVERTISEMENT

அண்ணாமலை மூலம் பாஜக தனித்தே வளர முயன்றது. அது பார்ப்பனீய ஆதரவு தளத்தை இழக்க உதவும் அளவு, கட்சியை வளர்க்க உதவவில்லை. சீமானைக் கூட கடும் தமிழ் தேசிய பெரியார் எதிர்ப்பை பேச வைத்து வளர்க்க முயற்சி நடத்தியது; அதுவும் பெருமளவு பலனளிக்கவில்லை.

ரஜினிகாந்த்தை மலைபோல நம்பினாலும், அவர் கட்சி தொடங்க அர்ஜுன மூர்த்தியை டெபுடேஷனில் அனுப்பினாலும், இறுதியில் கைவிரித்து விட்டார். விஜய்காந்த்தும் காலமாகிவிட்டார். இந்த நேரத்தில் விஜய்க்கு அரசியல் ஆர்வம் இருப்பது தெரிகிறது. அவரையும் வெள்ளோட்டம் விட்டுப் பார்க்கலாம் என்று பாஜக நினைத்து, அதற்கான தூண்டுதலை அவருக்குத் தந்திருக்கலாம் என்பதற்கான நிகழ்வுச் சான்றுகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிரப்படுகின்றன (வருமான வரி ரெய்டு இன்னபிற) அதனால்தான் தவெக பாஜக-வின் செல்லப்பிள்ளை என்று திருமாவளவன் தேர்தல் நேரத்தில் வெளிப்படையாகக் குறிப்பிட்டார்.  

தி.மு.க-வை வீழ்த்தியே ஆகவேண்டும் என அப்படியென்ன விரோதம் பாஜகவிற்கும், தி.மு.க-விற்கும்? ஆரிய திராவிட போரா? அப்படியென்றால் என்ன? இனவாதமா? பழைய கதையா? வாஜ்பேயி அரசில் தி.மு.க பங்கேற்றதே? பிறகென்ன தீராப்பகை? இதனை புரிந்துகொள்ள இந்திய மக்களாட்சியின் கருத்தாக்க வரலாற்றை கருதிப்பார்க்க வேண்டும்.

இந்திய மக்களாட்சியின் அடிப்படை முரண்: பார்ப்பனீயமும், எதிர்ப்பும்

இந்திய மக்களாட்சி அரசியலின் அடிப்படை பிரச்சினை என்ன? வர்ண தர்மம் ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வு, படிநிலை சமூக அமைப்பிலிருந்து சம வாய்ப்பு, சம நீதி என்ற அமைப்பிற்கு மாறுவதும், அதன் மூலம் சமத்துவ சமூகம் நோக்கி பயணிப்பதும்தான் மக்களாட்சி அரசியலின் உள்ளடக்கம். நில உடமை சமூகத்திலிருந்து, முதலீட்டிய உற்பத்தி முறைக்கு மாறுவது இதற்கு உதவும் என்றாலும், மக்களாட்சிக்கான அரசமைப்பு சட்டம் அதனை உத்திரவாதம் செய்ய வேண்டும்.

அப்படி செய்த பிறகும் நடைமுறையில் சுலபமாக பழைய சமூக ஏற்றத்தாழ்வுகள் சுலபமாக நீங்குவதில்லை என்பதால், தொடர்ந்து கருத்தியல் பிரசாரமும், வலியுறுத்தலும் நடக்க வேண்டும். உதாரணமாக, பள்ளிகளில் ஆசிரியர்கள் ஜாதி வேறுபாடு பார்க்கக் கூடாது. இளம் வயதினர் தங்கள் மனதிற்கு பிடித்தவர்களை ஜாதி மறுப்பு திருமணம் செய்ய அனுமதிக்க வேண்டும். இப்படி எத்தனையோ கண்ணுக்கு புலனாகாத சமூக விலக்கங்களை எதிர்த்து போராட வேண்டும். ஆனால் மீட்புவாத, பழமைவாத சக்திகள் அதற்கு சுலபமாக அனுமதிக்காது.

மக்கள் பேசும் மொழிகளில் நடக்கும் மாநில அரசியலில் இயங்கும் வெகுஜன, பிற்படுத்தப்பட்டோர், தலித் அரசியல் அணிகள்தான் அந்த முற்போக்கு பிரசாரத்தை மேற்கொள்ளும். சமஸ்கிருதமயமான இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றில் அரசியல் செய்யும் 15% ஆதிக்க வகுப்பினர் நிறைந்த தேசியக் கட்சிகள் அத்தகைய முற்போக்கு பிரசாரத்திற்கு, சமூக நீதி அரசியலுக்கு முக்கியத்துவம் தரமாட்டா.

வெளிப்படையாகச் சொன்னால் பார்ப்பனீயத்தின் உயிர் நாடி இந்திய ஒன்றிய அரசில் அதிகாரத்தைக் குவிப்பதில் அடங்கியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் முதலிலிருந்தே மாநில அடையாளங்கள், அவற்றிற்கான அதிகாரம் ஆகியவற்றை எதிர்த்து வந்தது. மாநிலங்கள் வெறும் நிர்வாக அலகுகள் என்று இன்றுவரை அவர்கள் கூறிவருகிறார்கள். காஷ்மீர் மாநில அந்தஸ்த்தையே நீக்கினார்கள். உச்ச நீதிமன்றமும் தலையாட்டியது.

காங்கிரஸ் கட்சியிலும் பார்ப்பனீய நலன் சார்ந்த பிரிவுகளும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோர் நலன் சார்ந்த பிரிவுகளும் கலந்து இயங்கும். அதனால் காங்கிரஸிலும் மாநில சுயாட்சி கோரிக்கைக்கு முழுமையான ஆதரவு இருக்காது. காங்கிரஸ் கட்சியால் தன் கருத்தியல் உள்முரண்களை என்றுமே தீர்க்க முடியாது. நேரு குடும்ப வாரிசுகள் எல்லோரையும் சரிகட்டி, தேவைக்கேற்ப முடிவுகள் எடுத்து சமன் செய்து கொண்டு போகவேண்டும்.

தமிழ்நாட்டில்தான் பார்ப்பனீய கருத்தியல் மேலாதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கம் உருவானது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் காந்தியாரால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸில் இணைந்து மக்கள் பணி செய்து வந்தார். வைக்கம் சத்தியாகிரகம், சேரன்மாதேவி குருகுல பிரச்சினை ஆகியவை அவருக்கு பார்ப்பனீய கருத்தியல் மேலாதிக்கத்தின் கோரப்பிடியை உணர்த்தின.

காங்கிரஸ் தொடர்ந்து வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் நியாயத்தை மறுத்து வந்ததால் வெகுண்டெழுந்த அவர், சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்து தமிழ்நாடெங்கும் பகுத்தறிவு பிரசாரத்தை மேற்கொண்டார். ஆர்.எஸ்.எஸ் துவங்கப்பட்ட அதே ஆண்டிலேயே, 1925-ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கமும் தோன்றியது வரலாற்றுத் தற்செயலாக இருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்தது.  இதன் தொடர்ச்சியாகத்தான் தி.மு.க தொடர்ந்து பாஜக-வின் எதிர்முனையில் அரசியல் செய்து வருகிறது என்பதை சுலபமாக புரிந்துகொள்ளலாம்.

கோட்டையில் அரைகுறையாக நுழைந்த டிரோஜன் குதிரை

எல்லோருக்கும் அதிர்ச்சியாக அமைந்த தமிழ்நாட்டு தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க தேவையான தொகுதிகளுக்கு 10 தொகுதிகள் குறைவாகவே பெற முடிந்தது. அந்த நிலையில் 47 சட்ட மன்ற உறுப்பினர்களை கொண்ட பாஜக-வின் கூட்டணி கட்சியான அ.இஅ.தி.மு.க, பாஜக-வின் டிரோஜன் குதிரை உள்ளே செல்ல உதவி செய்யவேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வராக இருந்தால்தான் எந்த கூட்டணிக்கும் உடன்பட முடியும் என்பதில் விடாப்படியாக இருந்தார். அ.இ.அ.தி.மு.க-வில் மற்ற தலைவர்கள் நீங்கள் வெளியே இருங்கள்; நாங்கள் அமைச்சரவையில் பங்கேற்கிறோம் என்று சொல்லிப்பார்த்தார்கள். அவர் கேட்பதாக இல்லை.

இந்த நிலையில்தான் காங்கிரஸிலிருந்த பார்ப்பனீய சக்திகள் உடனே பாய்ந்து சென்று டிரோஜன் குதிரையை உள்ளே தள்ளிவிட முன்வந்தன. தவெக ஒரு விநோதமான காரியத்தை செய்தது. தான் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி; ஆட்சியமைக்க அழையுங்கள் என்று ஆளுனரிடம் கேட்காமல், காங்கிரஸ் கட்சியின் ஐந்து உறுப்பினர்களுடன் சேர்ந்து கூட்டணி என்று கூறி  ஆட்சியமைக்க உரிமை கோரியது. ஆளுனர் கூட்டணி என்றால் 118 என்ற எண்ணிக்கையுடன் வாருங்கள் என்று கூறிவிட்டார். ஒரு தேவையற்ற இழுபறி உருவானது.

காங்கிரஸ் டிரோஜன் குதிரையை உள்ளே அனுப்புவதை பார்த்த பிற தி.மு.க கூட்டணி கட்சிகள் ஒருவேளை அதற்குள்ளே பாஜக இல்லையோ என்று நினைத்து அவர்களும் ஆதரவு தெரிவிக்கலாமா என்று பரிசீலிக்கத் துவங்கினர். ஆட்சி அமையாவிட்டால் ஆளுனர் ஆட்சி வந்துவிடும்; அது பாஜக ஆட்சியாக இருந்துவிடும் என்று காரணம் சொல்லி கம்யூனிஸ்டுகள், விசிக, ஐயுஎம்எல் ஆகியோரும் ஆதரவு தெரிவித்தனர். பின்னர் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றனர். ஆனாலும் ஒரு அரசியல் கூட்டணியாக அவர்கள் உருமாறவில்லை. அதே சமயம் அந்த கூட்டணி நாடகத்தையும் தவெக கைவிடவில்லை.

டிரோஜன் குதிரையின் குதிரை பேரம்

போதுமான எண்ணிக்கை கிடைத்து ஆட்சியமைத்த பிறகும் தவெக வாளாவிருக்கவில்லை. அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்தது. காரணம், தாங்கள் டிரோஜன் குதிரை என்ற உண்மை வெளிப்படும்போது கூட்டணி கலகலத்துவிடும் என்பதுதான். கட்சித்தாவல் தடைசட்டப்படி உறுப்பினர் பதவியை இழக்காமல் அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் தவெகவிற்கு வரவேண்டும் என்றால் 32 பேர் (47-இல் மூன்றில் இரண்டு பங்கு) வரவேண்டும். பிரச்சினை என்னவென்றால் 25 பேர் வரை தயாராக இருந்தாலும், 32 பேரை இழுக்க முடியவில்லை.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது அ.இ.அ,தி.மு.க கொறடாவின் உத்தரவை மீறி 25 பேர் தவெக அரசை ஆதரித்து வாக்களித்தனர். இது கட்சித்தாவலுக்கு நிகரானது. அ.இ.அ.தி.மு.க அவைத்தலைவரிடம் புகார் செய்தது. 25 பேர் பதவியும் பறிபோகும் நிலை. அவர் அவர்களுக்கு அவகாசம் அளித்தார். அவர்களால் 32 பேரை திரட்ட முடியாத நிலையில் எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்து பதவியைத் தக்கவைத்துக்கொண்டனர். ஆனாலும் அங்குமில்லாமல், இங்குமில்லாமல் திரிசங்கு போல் நடுவழியில் தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள். எப்படியாவது 25-ஐ, 32-ஆக்கிவிட்டால் தவெக-விற்கு போய்ச் சேர்ந்துவிடலாம்.

இதற்கிடையில் மூன்றுபேர் தடாலென்று தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு உடனேயே தலைமைச் செயலகத்திலேயே தவெக-வில் இணைந்து விட்டார்கள். இடைத்தேர்தலில் மீண்டும் தவெக சார்பில் நின்று வென்றுவிடலாம் என்ற நம்பிக்கை. மக்கள் செலவில் கட்சித் தாவல். புதிய வடிவில் குதிரை பேரம்.

சிறிது நாள் கழித்து புதுக்கோட்டை விஜயபாஸ்கர், கரூர் விஜய்பாஸ்கர் என்று முன்னாள் அ.இ.அ.தி.மு.க அமைச்சர்களும் பதவி விலகி தவெகவில் இணைந்துவிட்டார்கள். என்ன பிரச்சினையென்றால் எப்போது இடைத்தேர்தல் நடக்கும், எப்போது இவர்கள் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவார்கள் என்று தெரியவில்லை. ஏனெனில் பல்வேறு வழக்குகளால் இடைத்தேர்தல் தாமதாவதாகக் கூறப்படுகிறது. அந்த சிக்கலை விளக்கத் தொடங்கினால் தனி கட்டுரையே எழுத வேண்டும்.

இந்த தாமதத்தால் நொந்து போன அம்பாசமுத்திரத்தில் வெற்றி பெற்ற முன்னாள் அ.இ.அ.தி.மு.க அமைச்சர் இசக்கி சுப்பையா தன் ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுவதாக க் கூறியுள்ளார். குறைந்தபட்சம் இடைத்தேர்தல் வரை சட்டமன்றப் பணிகளை ஆற்ற அனுமதிக்க வேண்டும் என்று கூறுகிறார். அவர் நினைத்தால் பதவி துறக்கவும், மீண்டும் பதிவியேற்கவும் அரசு என்ன அவர் சொந்த நிறுவனமா என்று வியப்பாக இருக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவம் என்பதையே தவெக கேலிக்கூத்தாக மாற்றிவிட்டது. ஏனெனில் அவர்மீது தவெக எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது.

இந்த நிலையில் தவெக ஒரு அ.இ.அ.தி.மு.க குதிரை பேரப் படையை தயாராக வைத்துள்ளது. காலியாக உள்ள ஏழு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடப்பதற்கு முன் கூட்டணி கட்சிகள் விலகி நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால், திரிசங்கு சொர்க்கத்தில் உள்ள அ.இ.அ.தி.மு.க சட்ட மன்ற உறுப்பினர்கள் 25 பேரும் பதவி விலகினால், அல்லது அவைத்தலைவர் சில காரணங்களை உருவாக்கி அவர்களை தகுதி நீக்கம் செய்தால், தவெகவின் 107-ஏ பெரும்பான்மையாகிவிடும். அதனால் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, சி.பி.ஐ, சி.பி.ஐ.எம், ஐயூஎம் எல் ஆகியவற்றை நம்பித்தான் தவெக ஆட்சி தொடரவேண்டும் என்பதில்லை.

தொடரும் கூட்டணி நாடகம்

தேர்தலில் படுதோல்வி அடைந்து ஒரே ஒரு தொகுதியில் வென்றாலும், இந்த சூழலில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது பாஜகதான். தி.மு.க-வை ஆட்சியிலிருந்து அகற்றியது மட்டுமல்ல, இப்போது தி.மு.க-வின் ஆற்றலெல்லாம் தவெக எதிர்ப்பில்தான் இருக்கும் என்பது மிகப்பெரிய வசதி. இதைத்தான் 1972-இல் எம்.ஜி.ஆர் மூலம் காங்கிரஸ் செய்தது. மாநில சுயாட்சிப் பாதையில் தி.மு.க-வின் பயணத்தை பெரிதும் தேக்கமடையச் செய்தது. ஒன்றிய அரசு x தமிழ்நாடு என்ற அரசியல் வலுவடைய பார்ப்பனீயம் ஒரு போதும் அனுமதிக்காது.

கூடுதலாக காங்கிரஸ்-தி.மு.க உறவு முறிந்ததில், இந்தியா கூட்டணி சந்தித்திருக்கும் பின்னடைவு அகில இந்திய அரசியலில் பாஜக-விற்கு மிகப்பெரிய ஆதாயம். காங்கிரஸ் எந்த வெட்கமும், கூச்சமும் இல்லாமல் பாஜக எதிர்ப்பு கருத்தியலை முன்னெடுக்கும் மாநில கட்சிகள் முதுகில் அற்ப பதவி ஆசைக்காக குத்தும் என்பது பிற மாநில கட்சிகளுக்கான எச்சரிக்கை மணி.

இப்போது டிரோஜன் குதிரை தன் வேலையைக் காட்டத் துவங்கி விட்டது. விஜய் சாதனைகள் குறித்த மாபெரும் மோசடி பொய் பிரசாரம் பிற மாநிலங்களில் செல்ஃபோன் செயலிகள் மூலம் பரப்பப்படுகிறது. அதனால் அவருக்கு இந்திய அளவில் பிரதமராக 9% ஆதரவு இருப்பதாகக் கருத்துக் கணிப்பு வெளியாகிறது. விஜய் பிரதமராக வேண்டும் என்று தவெக அமைச்சர்கள் கூறுகிறார்கள். அது மட்டுமல்ல; ராகுல் காந்தியே அவரை ஆதரித்து பிரதமராக்குவார் என்றும் கூறுகிறார்கள்.

பாஜக-விற்கு மீண்டும் இரட்டை இலாபம். பாஜக அரசின் தோல்விகளுக்கு எதிராக ஜென் ஸீ என்ற அரசியல் தன்னுணர்வு கொண்ட இளைஞர் போராட்டம் அதன் 2029 தேர்தல் வெற்றியை கேள்விக் குறியாக மாற்றியுள்ளது. அந்த அரசியல் தன்னுணர்வு கொண்ட ஜென் ஸீக்கு எதிராக சினிமா கவர்ச்சி ஜென் ஸீ அலையை வீசச் செய்வது போராடும் இளைஞர்களின் தன்னிம்பிக்கையை குலைக்கும் என்ற வாய்ப்பு முக்கியமானது.

அடுத்து விஜய் ரசிகர்கள் ஆதரவில் தென் மாநிலங்களில் கணிசமான தொகுதிகளில் வெல்லலாம் என்ற காங்கிரஸ் பார்ப்பனீய பிரிவின் கணக்கில் மண்ணை அள்ளிப்போடலாம். ஏனெனில் விஜய் பிரதமர் என்று ஆசையைத் தூண்டிய பிறகு, அதனை ஏற்றுக்கொண்டால்தான் விஜய் ஆதரவாளர்கள் காங்கிரஸிற்கு, கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிப்பார்கள். இல்லாவிட்டால் விஜயே சொன்னாலும் அவர்கள் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

டிரோஜன் குதிரையின் பிற செயல்பாடுகளையும் எதிர்கொள்ள முடியாமல் கூட்டணிக் கட்சிகள் தத்தளிக்கின்றன. நீட் தேர்வு + EWS ஒதுக்கீட்டிற்கு எதிரான திராவிடர் கழக பிரசாரத்திற்கு தவெக அனுமதி மறுத்துவிட்டது. நீதிமன்ற ஒப்புதல் பெற்றுதான் பிரசாரம் நடந்தது. மாணவர்கள் இட துசாரி கட்சிகள், காக்ரோச் ஜனதா கட்சி போராட்டங்களில் ஈடுபடாமல் தடுக்கப்பட வேண்டும் என்று கல்லூரிகளுக்கு தலைமைச் செயலர் சுற்றறிக்கை அனுப்புகிறார். கேட்டால் அரசுக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாது என்கின்றனர்.

நாடே அதிர்ச்சியடையும்படி டில்லியில் போராடிய மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகளால் சுட்டுள்ளனர். ராகுல் காந்தி பொங்கியெழுந்து நீதி கேட்டு போராடுகிறார். விஜயோ, தவெகவோ பாஜக-வின் மிருகத்தனமான ஒடுக்குமுறையை கண்டித்து ஒரு வார்த்தை பேசவில்லை.

அதைவிட மிகப்பெரிய டிரோஜன் குதிரை காமெடி தொகுதி மறுசீரமைப்பு. காங்கிரஸ் தூண்டுதலில் விஜய் தீடீரென நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கூப்பிட்டு பேசினார். தொகுதி மறுசீரமைப்பே கூடாது; இன்றுள்ள தொகுதிகளே தொடர வேண்டும் என்று முடிவானது. சட்டமன்றத்தில் அந்த தீர்மானத்தை நிறைவேற்றினார். தி.மு.க-வும் ஆதரித்தது. ஆனால் தென் மாநில முதல்வர் கூட்டத்தில் அமித் ஷா எதிரே பல்டியடித்தது குதிரை. நியாயமான தொகுதி மறுவரை வேண்டும் என்றார். காங்கிரஸ் மூச்சு விடவில்லை.

டிரோஜன் குதிரை சாதனைகளை இன்னும் பட்டியல் போட்டால் நீண்டுகொண்டே போகும். டிரோஜன் குதிரை சவாரியை கூட்டணி கட்சிகள் தொடர்ந்தால் அவர்கள் அரசியல் எதிர்காலம் தமிழ்நாட்டில் நெருக்கடிக்குள்ளாகும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஏனெனில் அவர்கள் கட்சிகளின் பலம் கருத்தியல்தான் என்று நினைத்தால், அவர்கள் அதற்கு உண்மையாக இருப்பதுதானே நலம் பயக்கும்.

Photo of author
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share