அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா வழக்கு : இசக்கி சுப்பையா வைத்த ட்விஸ்ட் – மறுத்த நீதிபதிகள்!

Published On:

| By Kavi

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா வழக்கில் திடீர் ட்விஸ்ட்டாக அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா தனது ராஜினாமாவை திரும்ப பெறுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் இவரது கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவை தலைமை நீதிபதி அமர்வு நிராகரித்துள்ளது.

அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் அதிமுக கொறடா அக்னி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.

அதில், ”கொறடா உத்தரவை மீறி தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவளிப்பதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேருக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது, இவர்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

ADVERTISEMENT

இந்த மனுவை தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு விசாரித்து வருகிறது. 

இன்று (செப்டம்பர் 1) வழக்கு விசாரணைக்கு வந்த போது அக்னி கிருஷ்ணமூர்த்தி சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கிரி மற்றும் ராஜகோபால் ஆஜராகி, “ராஜினாமா செய்தவர்களிடம் சுயமாக பதவி விலகினார்களா என விசாரணை செய்துவிட்டு திருப்தி அடைந்த பின்னர் தான் அவர்களது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக சபாநாயகர் தனது மனுவில் குறிப்பிட்டார். இந்த விசாரணை வெறும் சம்பிரதாயம் அல்ல அரசியல் சாசன கடமை. அர்த்தமுள்ளதாக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

ADVERTISEMENT

ராஜினாமா கடிதங்களை அளித்த சில நிமிடங்களில் இவர்கள் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களை சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதுபற்றி விசாரணை நடத்தாமல் ராஜினாமாவை மட்டும் சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளார். 

அதுபோன்று ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதற்கு முன் தகுதி நீக்க புகார் அளித்த அக்னி கிருஷ்ணமூர்த்திக்கு எந்த நோட்டீசும் அனுப்பப்படவில்லை. குதிரை பேரம் நடந்துள்ளது குறித்து ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டனர். 

ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சதீஷ் பராசரன், மேனகா குருசாமி, “எம்எல்ஏவாக இருந்து சலுகைகளை பெற்றுக் கொண்டு மாற்று கட்சிக்கு ஆதரவளித்தால் தான் ஊழல் நடவடிக்கை எடுக்க முடியும். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாற்றுக் கட்சியில் இணைவது ஜனநாயக அரசியல் ஆகும். ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதால் தகுதி நீக்க நடவடிக்கை தன்னிச்சையாக செல்லாததாகிவிடும். சுய விருப்பத்தின்படி ராஜினாமா கடிதம் அளிக்கப்பட்டது” என்று தெரிவித்தனர். 

சபாநாயகர் சார்பில் வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி, “ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதால் தகுதி நீக்க நடவடிக்கை இல்லாமல் ஆகி விடாது. ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்ய விரும்பினால் பதவியில் நீடிக்கும்படி நிர்பந்திக்க முடியாது. ராஜினாமாவை ஏற்காவிட்டால் அது அரசியல் சாசன கடமையை செய்ய தவறியதாகிவிடும்” என்று தெரிவித்தார். 

சட்டப்பேரவை செயலாளர் சார்பில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘சுய விருப்பத்தின் அடிப்படையில் எம்எல்ஏக்கள் பதவி விலகல் கடிதம் கொடுத்தால் அதை சபாநாயகர் ஏற்காமல் இருக்க முடியாது’ என்றார். 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். 

இதற்கிடையே அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, இடைத்தேர்தல் வழக்கில் தீர்ப்பு வரும் வரை எம்எல்ஏவாக தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் தனது ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற விரும்பதாகவும் மனு தாக்கல் செய்தார். 

ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share