Minister’s ‘stunning’ Reply: தமிழக சட்டசபையில் அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கும் ஒரே ஒரு பதிலையே திரும்ப திரும்ப அமைச்சர் ஜெகதீஸ்வரி சொன்னது சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.
தமிழக சட்டசபையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களின் போது அமைச்சர் ஜெகதீஸ்வரி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பாமக எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி, தமது தொகுதிக்கான அங்கன்வாடி மையம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி பதிலளித்தார்.
இதனையடுத்து மற்றொரு எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்விக்கும், அதே பதிலை திரும்பவும் அமைச்சர் ஜெகதீஸ்வரி வாசிக்க குறுக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “உறுப்பினரின் கேள்வியை குறித்து வைத்துக் கொண்டு பின்னர் கூட பதிலளிக்கலாம்” என்றார்.
இதற்கு அடுத்ததாக பல உறுப்பினர்கள் தங்களது தொகுதியின் அங்கன்வாடி மையங்கள் குறித்து கேள்விகளை எழுப்ப அத்தனை கேள்விகளுக்கும், “ மாண்புமிகு உறுப்பினர்கள் அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று அதனடிப்படையில் விரைவாக செயல்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்ற ஒரே பதிலையே திரும்ப திரும்ப கூறினார் அமைச்சர் ஜெகதீஸ்வரி. அவரது இந்த ‘அசர’ வைக்கும் பதில் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
