‘பட்டாசு லைசன்ஸ் கொடுப்பதில் ஊழல்’ – அமைச்சர் கீர்த்தனா பேச்சால் அவையில் கொந்தளித்த திமுக

Published On:

| By Pandeeswari Gurusamy

கடந்த ஆட்சியில் பட்டாசு லைசென்ஸ் கொடுப்பதில் கூட அவ்வளவு ஊழல் இருந்தது என அமைச்சர் கீர்த்தனா போச்சுக்கு திமுக தரப்பில் கடும் கண்டனம் எழுந்தது.

தமிழக சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, “பட்டாசு லைசென்ஸ் கொடுப்பதில் கூட அவ்வளவு ஊழல் இருந்தது, உண்மையாகவே இருந்தது, ஒரு லைசென்ஸ் வாங்க 5 லட்சம், 3 லட்சம் என வாங்கினார்கள்; ஆனால் தற்போது 177 பட்டாசு ஆலைகளுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காமல் லைசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு 5 அசோசியேஷன்கள் உள்ளன, அவர்கள் வந்து மிகவும் நன்றி, இது போன்ற ஒரு ஆட்சியை நாங்கள் பார்த்ததே இல்லை என்று எங்களிடம் சொல்லியுள்ளனர். அப்படிப்பட்ட பெயரை நமது முதலமைச்சர் தான் எடுத்துள்ளார்.” என்றார்.

ADVERTISEMENT

அமைச்சர் கீர்த்தனாவின் இந்தப் பேச்சுக்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதைத்தொடர்ந்து பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், “அமைச்சர் யாரையும் குறிப்பிடவில்லை; ஊழல் என்று சொன்னால் எழுந்து நின்றால் எப்படி?” என்றார். இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “நானும் சொல்லவா?” என்று கொந்தளித்துப் பேசினார்.இதனால் அவையில் சலசலப்பான சூழல் நிலவியது.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசுகையில், “அமைச்சர் லைசென்ஸ் கொடுப்பதை மிகவும் எளிமையாக செய்துவிடப் போகிறோம் என்றார். இந்த சட்டத்தைப் படித்துப் பார்த்தால் தெரியும். இவ்வளவு கடுமையாக இருந்தும் இத்தனை விபத்துகள் நடக்கின்றன. இங்கு லைசென்ஸ் வாங்குவதற்கான விதிமுறைகள் அதிகமாக உள்ளன. ஒரு தொழிற்சாலைக்கும் இன்னொரு தொழிற்சாலைக்கும் உள்ள இடைவெளி, ஒரு செட்டுக்கும் இன்னொரு செட்டுக்கும் இருக்கும் இடைவெளி என இவ்வளவு விதிமுறைகள் உள்ளன. ஆர்டிஓ, வருவாயத்துறை, ஃபயர் சர்வீஸ் என எல்லோரும் பார்த்த பிறகு கொடுத்தும் இவ்வளவு விபத்துகள் நடந்திருக்கின்றன, உயிரிழப்புகளும் நேர்கின்றன.

நாங்களாக இருந்தாலும் சரி, எங்களுக்கு முன்பு ஆட்சி செய்தவர்களாக இருந்தாலும் சரி, லைசென்ஸ் கொடுக்கும்போது கடுமையாகப் பார்த்துக் கொடுத்தும்தான் இவ்வளவு விபத்துகள் நடக்கின்றன. ஓ.எஸ். மணியன் அவர்கள் கடைகளுக்கெல்லாம் லைசென்ஸ் கொடுங்கள் என்றார், ஆனால் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடாது, மக்கள் அதிக அளவில் வாழும் பகுதியில் இருக்கக்கூடாது என்று பார்த்துப் பார்த்து நாங்கள் நிறைய கொடுத்துள்ளோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் ரெவன்யூ ரெக்கார்டை எடுத்துப் பார்த்தால் தெரியும் நிறைய லைசன்ஸ் கொடுத்துள்ளோம்; சிலர் நாக்பூரிலிருந்து லைசென்ஸ் பெற்று வருகின்றனர். இந்த மூன்று மாத காலங்களில் நீங்கள் நிறைய கொடுத்துவிட்டோம், கொடுத்துவிட்டோம் என்கிறீர்களே, எத்தனை லைசென்ஸ் கொடுத்துள்ளீர்கள்? எவ்வளவு லைசென்ஸ் உங்களால் கொடுக்க முடிந்துள்ளது?

ADVERTISEMENT

நீங்கள் ஆன்லைனில் கொடுத்தால் எப்படி? இது ஆன்லைனில் வியாபாரம் செய்வது இல்லை; ஸ்பாட்டிற்குச் சென்று பார்த்து, நேராகப் பார்க்கும் போதே நமது கண்ணைக் கட்டிவிடுகிறார்கள் பட்டாசு கம்பெனிக்காரர்கள். நாங்கள் நேராகச் சென்று பார்க்கும்போது எங்களது கண்ணைக் கட்டிவிடுகிறார்கள். இதையெல்லாம் பார்த்துத்தான் லைசென்ஸ் கொடுக்க வேண்டி இருக்கும். கொடுப்பதை வேகமாகக் கொடுக்க வேண்டும், அதற்கு உரிய நேரங்கள் காலங்கள் கழிக்காமல் கொடுப்பதற்குரிய பணிகளை நீங்கள் விரைவுபடுத்துங்கள். எங்கள் ஆட்சிக் காலத்திலும் நிறைய லைசென்ஸ் கொடுத்துள்ளோம், நிறைய பறக்கும் படை போட்டு செக் பண்ணிக்கொண்டுதான் இருந்தோம். எல்லாமே இருந்தும் தவறுகள் நடக்கிறது, அந்தத் தவறுகள் நடக்காமல் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய திமுக எம்.எல்.ஏ. எ.வ. வேலு, “தினமும் நீங்கள் ஊழல் என்று பேசாதீர்கள் என சொல்கிறீர்கள். லைசென்ஸ் கொடுப்பதில் அதிகாரிகள் மட்டத்தில் பிரச்சனை இருந்தால் அதை திருத்துங்கள், யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் பேசும்போது ஒரு வார்த்தையை இடைச்செருகல் போல் ‘ஊழல், ஊழல்’ என்று சேர்த்தால் எப்படி? நாங்கள் உங்கள் பேச்சிற்கு கட்டுப்பட்டு உட்காருகிறோம், ஆனால் நீங்கள் சொன்னாலும் இடைச்செருகல் போல் ‘ஊழல், ஊழல்’ என்று பாட்டுப் பாடிக்கொண்டு இருக்கிறார்கள். என்னவென்று எனக்குப் புரியவில்லை.

நாங்கள் சட்டசபைக்கு வரக்கூடாது என்கிறீர்களா? உங்கள் பேச்சைக் கேட்கக் கூடாது என்கிறீர்களா? நீங்கள் சொல்லும் கருத்துக்களைக் கேட்கக் கூடாது என்கிறீர்களா? உங்கள் முழுமையான பேச்சைக் கேட்கக் கூடாது என்கிறீர்களா? நீங்கள் புதிதாக அமைச்சராக வந்திருக்கிறீர்கள், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு இருக்கிறார், வருவாய் துறை அமைச்சராக இருந்தவர். பல துறைகளைப் பார்த்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். அண்ணாச்சி இருக்கிறார். இவர்கள் எல்லோரும் அந்த மாவட்டத்தைப் பார்த்து, அந்த மாவட்டத்திற்கு பல வளர்ச்சிப் பணிகளைச் செய்திருப்பார்கள். நீங்களும் அந்த மாவட்டத்திற்கு வந்து வளர்ச்சி பணிகளை செய்யுங்கள், யாரும் தடை சொல்லவில்லை.

ஆனால் இடைச்செருகல் போல் எப்போது பார்த்தாலும் ‘ஊழல், ஊழல்’ என்கிறீர்களே, எதற்கு இதெல்லாம்? நல்லது இல்லை, நான் பொதுவாகச் சொல்கிறேன். அவை முன்னவர் மிகவும் அனுபவமிக்க ஆள், உங்கள் வாயிலிருந்து இதுபோல் வருவது இல்லை. நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன், அமைச்சர்களுக்குப் பொறுப்பு அதிகம். நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கப் போகிறோம், உங்களைப் போற்றிப் போற்றி என்று பாட முடியாது என்று நாங்கள் அன்றே சொல்லிவிட்டோம். நாங்கள் ஏதாவது குறை காண முடியுமா என்றுதான் பார்ப்போம், வருவதே அதற்குத்தானே? இன்று உங்களைப் பற்றி என்ன குறை சொல்லலாம்? உங்கள் துறையைப் பற்றி என்ன குறை சொல்லலாம்? என்றுதானே நாங்கள் பார்ப்போம்? அது இல்லை என்று மறுத்துப் பேசும் ஆற்றல் உங்களுக்கு உள்ளது, பேசுங்கள்.

ஆனால் அதைவிட்டுவிட்டு நீங்கள் ஒரு வார்த்தையைச் சொல்கிறீர்கள், கிட்டத்தட்ட 15 நிமிடம் அவையை நடத்த முடியவில்லை. ஏற்கனவே ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது என்று சபாநாயகர் சொன்னார்.

உங்கள் திறமையைப் பற்றிப் பேசுங்கள். நானே இன்று காலை என்ன சொன்னேன்? நாங்கள் இப்போது உங்களைப் பற்றி குறை காண முடியாத நிலையில் இருக்கிறோம், ஒரு ஆண்டு கழித்தால் உங்களைப் பற்றி கட்டாயம் குறை காண்போம். இப்போது கடந்த ஆட்சியில் என்ன செய்தோம் என்பதைத்தான் பேச முடியும்; நாங்கள் எப்படி 100 நாட்களில் போய் உங்களை பற்றி பேச முடியும்? சபாநாயகர் விதிகளை மதிக்கச் சொல்லுங்கள்” என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, “அந்த வார்த்தையை நான் சொல்லவில்லை; அங்கு இருக்கும் ஐந்து அசோசியேஷன்களிலிருந்து அவர்களது ஓனர்கள் அதைச் சொன்னார்கள். அதற்கான ஆதாரங்களை இமெயிலில் எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அந்த ஆதாரங்களை வேண்டுமானால் நான் சமர்ப்பிக்கிறேன், இதை நான் சொல்லவில்லை” என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “இப்போதுகூட இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு நிறுத்தி வைத்திருந்த லைசென்ஸ்களை எல்லாம் நாங்கள் புதுப்பித்து செய்து கொடுத்துவிட்டோம் என்றார் அமைச்சர்.
இப்போது நான் கேட்கிறேன், நீங்கள் கொடுத்த அந்த புதுப்பித்தல் சான்று எல்லாவற்றிற்கும் நீங்கள் பணம் வாங்கிக் கொண்டதாக சில அசோசியேஷன்கள் வந்து என்னிடம் சொல்கிறார்கள். எப்படி உங்களிடம் வந்து சிலர் சொன்னார்கள் என்று சொல்கிறீர்களோ, அப்படி இப்போது நீங்கள் கொடுக்கக்கூடிய அப்ரூவல் எல்லாவற்றிற்கும் நீங்கள் பணம் வாங்கியதாக சில அசோசியேஷன்கள் எங்களிடம் வந்து சொல்கிறார்கள். இதை ஒத்துக் கொள்கிறீர்களா?” என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர், “தொழில் துறை அமைச்சர் பல விஷயங்களை விளக்கமாகச் சொன்னீர்கள்; நானே புதிய அமைச்சராக இருந்தும் இவ்வளவு தெளிவாகச் சொல்கிறீர்கள் என்று பார்த்தேன். ஆனால் நீங்கள் அந்த ஒரு வார்த்தையைத் தவிர்த்து இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். நல்ல விஷயங்களைச் சொல்கிறார்கள், அசோசியேஷன்களில் காரியம் முடியும் போது தேவையற்ற ஒரு வார்த்தையைக்கூட அவர்கள் சேர்த்து சொல்லியிருக்கலாம், அதை நீங்கள் அவையில் வந்து சொல்லாமல் இருந்திருக்கலாம் என்றுதான் நான் கருதுகிறேன்.

இதை விடுத்துவிட்டு, ‘நான்கு பேர் என்னிடம் வந்து சொன்னார்கள்’ என்று சொன்னதற்குப் பதிலாக, ’40 பேர் வந்து எங்களிடம் சொன்னார்கள்’ என்று சொல்லும்போது நம்மாலும் பதில் சொல்ல முடியாது. சவால், அதற்கு எதிர் சவால் விடுவதற்கான நேரம் இது அல்ல. நல்ல பணிகளை மிக மிக நேர்த்தியாக வேகமாக நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை விளக்கமாகச் சொல்லிவிட்டீர்கள், அது மக்களுக்குப் பயனுள்ள கருத்தாக இருக்கும்” என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “நீங்கள் நீக்குவதாக இருந்தால் அமைச்சர் ஆரம்பித்ததிலிருந்து நீங்கள் நீக்க வேண்டும். இதையும் நான் சொன்னதாகச் சொல்லவில்லை, ஒரு உதாரணத்திற்குத்தான் சொன்னேன்” என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தொழில் துறை அமைச்சர் சொன்னதையும் முன்னாள் அமைச்சர் சொன்னதையும் நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share