திருச்சியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த திமுக செயற்குழு கூட்டத்தில், கட்சி மறுசீரமைப்பு குறித்து முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் நிர்வாகிகளிடம் விளக்கமளித்து பேசினர்.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் முன்னாள் அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தின் போது, மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்.
திமுக தலைமை மேற்கொண்ட கட்சி மறு சீரமைப்பு பணி குறித்து பேசிய அவர், ”வயது மூப்பின் அடிப்படையில் உங்களை எல்லாம் நீக்கவில்லை. புதிய நிர்வாகிகளை உருவாக்க வேண்டும், கட்சிக்குள் இளம் ரத்தத்தைப் பாய்ச்ச வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் தற்போது பொறுப்புகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
‘யாரையும் விட்டுவிட மாட்டேன், அனைவருக்கும் அவரவருக்குத் தகுந்த பொறுப்புகள் வழங்கப்படும்’ என தலைவர் கூறியுள்ளார்.
உங்களை விட்டுவிட்டு இந்தக் கட்சியை யாரும் நடத்த முடியாது. களத்தில் இருக்கும் நிர்வாகிகள் இல்லாமல் இந்த இயக்கத்தை நடத்துவது சிரமம்.
மாவட்ட, ஒன்றிய, நகர்ப்புறச் செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் உரிய பொறுப்புகள் வழங்கப்படும் என்று தலைவர் அறிவித்திருக்கிறார்” என்று கூறினார்,
தொடர்ந்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ”நாம் தான் கழகம்; கழகம் தான் நாம் என்பதை மனதில் கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் பணியாற்றுவோம்! உறுதிமிக்க தொண்டர்களால் கட்டமைக்கப்பட்ட நம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு அயராது உழைப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கட்சி நிகழ்ச்சியில் அன்பில் மகேஷ் பேசுகையில், ”77 ஆண்டுகாலம் இயக்கத்தை நடத்திவிட்டோம். இப்போது ஆட்டத்தை கொஞ்சம் கலைத்து ஆடி பார்க்க போகிறோம். ஏனென்றால் எதிரில் நிற்பவர்கள் பக்குவம் இல்லாத எதிரிகள்; பொய்யாகப் பேசி ‘லையர் பாய்ஸ்’ ஆகவும், ரீல்ஸ் போடுபவர்களாகவும் இருக்கிறார்கள். அதற்குத் தகுந்தவாறு இளைஞர்களை எப்படி வழிநடத்துவது மற்றும் நமது அரசியல் ஆட்டத்தை எப்படி அமைப்பது என்பதைத் திட்டமிடுவோம்.
கழகத் தொண்டர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரத்தை தலைமையிடம் எடுத்துச் சொல்லி நானும் அண்ணன் கே.என்.நேருவும் பெற்றுத் தருவோம்.
இடைத்தேர்தல் என்ற எக்சாம் வந்தால் அதில் திமுக வெற்றி பெற வேண்டும். அதற்கு நீங்கள் எல்லாம் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
