அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஓணம் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. தொடர் தோல்விகளை அதிமுக சந்தித்து வரும் நிலையில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 80க்கும் அதிகமான மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் வருகின்றன.
ஆனால் முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் மாவட்ட செயலாளர் கூட்டத்தை புறக்கணித்தனர்.
இந்த கூட்டத்தில் எதிர்வரும் தேர்தல்களை சந்திப்பது, கட்சிப் பணி உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கிய கூட்டத்தில் எஸ் பி வேலுமணி கலந்து கொள்ளாதது பேசு பொருளான நிலையில், அவர் கோவையில் ஓணம் கொண்டாடியுள்ளார்.
முதலில் ஈரோட்டில் கட்சி நிர்வாகி ஒருவரது அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்றார்.
இதைத்தொடர்ந்து கோவை மாவட்டம் இடையார்பாளையத்தில் குனியமுத்தூர் மலையாளி அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற 32 வது ஓணோற்சவம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஓணம் பண்டிகையை கொண்டாடிய அவர், கோவை மாவட்டத்திற்கு அவர் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து உரையாற்றினார்.
தொடர்ந்து கோவை மக்களுடன் என்றும் இருப்பேன் என்றும் கோவை மாவட்டத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டுவர என்றென்றும் பாடுபடுவேன் என்றும் உறுதி அளித்தார்.
