அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசித்தது தொடர்பாக கேபி முனுசாமி பேட்டி அளித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (செப்டம்பர் 6) சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
இந்த சூழலில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, “இது வழக்கமாக நடக்கக்கூடிய கூட்டம் தான்.
தொடர்ச்சியாக கட்சியின் ஆக்க பணிகளை எப்படி செய்வது, எதிர்வரும் தேர்தலின் போது எப்படி பணியாற்றுவது, மாவட்டச் செயலாளர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று பொதுச் செயலாளர் ஆலோசனை வழங்கினார். அவரின் ஆலோசனையை கேட்டு செயல்பட இருக்கிறோம்” என்று பதிலளித்தார்.
தொடர்ந்து வேலுமணி சி.வி சண்முகம் உள்ளிட்டோர் அதிருப்தியில் இருக்கிறார்கள்.. மீண்டும் மாவட்ட செயலாளர் பதவி கேட்கிறார்கள். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனால் கோபமடைந்த கேபி முனுசாமி, ”இது எங்களிடம் உள்ள பிரச்சனை. உங்களுக்கு ஏன் வலிக்கிறது. இதில் உங்களுக்கு என்ன கஷ்டம். இதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாத சப்ஜெக்ட். எங்களைப் பற்றி எங்களிடமே கேட்பதில் என்ன தேவை இருக்கிறது. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிடுங்க. வேற சப்ஜெக்ட் எடுத்துக்கோங்க” என்று கூறிவிட்டு புறப்பட்டார்.
