தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முதலமைச்சரின் அலுவலகத்தை மாற்றுவதற்கான பணிகளுக்கு ரூ. 6.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் தெரியவந்துள்ளது.
சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை 1644-ல் கட்டி முடிக்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் வர்த்தக மையமாக இது உருவெடுத்தது. மெட்ராஸ் மாகாணமாக இருந்த காலத்தில் இருந்து அரசின் தலைமைச் செயலகமாக செயல் பட்டு வருகிறது. இங்கிருந்த இட நெருக்கடி காரணமாக தலைமைச் செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய பல்வேறுகாலகட்டங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2003-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா, சென்னை கடற்கரை சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரிக்கு தலைமைச் செயலகத்தை மாற்ற முயற்சித்தார். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெற வில்லை.
இதைத்தொடர்ந்து, திமுக ஆட்சியில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது.
இதையடுத்து, 2011-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஜெயலலிதா முதல்வரான உடன் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையை மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றினார். அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, ஓமந்தூரார் வளாகம் பின்னர் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கடந்த திமுக ஆட்சியில், 2023-ஆம் ஆண்டு புதிய சட்டப்பேரவை அமைக்கத் திட்டமிடப்பட்ட நிலையில், அதுகுறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், தற்போதைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் விஜய், 110 விதியின் கீழ் ரூ. 1,200 கோடி செலவில் புதிய சட்டப்பேரவை அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், தலைமைச் செயலகத்தில் தற்போதைய இட நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முதலமைச்சரின் அலுவலகத்தை மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில், வங்கக் கடலைப் பார்த்தவாறு முதலமைச்சரின் புதிய அலுவலகத்தை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அதிநவீன அலுவலகப் புதுப்பிப்புப் பணிகளுக்காகப் பொதுப்பணித்துறை சார்பில் ரூ. 5.54 கோடி மதிப்பீட்டில் டெண்டர் கோரப்பட்டிருந்தது.
இத்தேர்வில் கலந்துகொண்ட சென்னையைச் சேர்ந்த ராசி பில்டர்ஸ் நிறுவனம், அரசின் மதிப்பீட்டுத் தொகையை விட 32 சதவீதம் குறைவாகக் கோரி, மிகக் குறைந்த தொகையைக் கேட்ட ஒப்பந்ததாரராக (L1) தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் அலுவலக இடமாற்றப் பணிகளுக்காக மொத்தம் ரூ. 6.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் அரசு சார்புச் செயலாளர் மற்றும் பொதுத் தகவல் அலுவலர் கரிகாலன் அதிகாரப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார். மேலும், இந்த அலுவலக மாற்றத்திற்கென்று பிரத்யேகக் குழு எதுவும் தற்போது அமைக்கப்படவில்லை என்றும் அரசுத் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
