முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட தொழிலதிபர் பிரவீன் கணேசன் கைது

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக முதலமைச்சர் குறித்தும், தவெக தலைவர் விஜய் குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறப்படும் தொழிலதிபர் பிரவீன் கணேசன் (35) என்பவரைச் சென்னை சைபர் கிரைம் போலீசார் டெல்லியில் கைது செய்துள்ளனர்.

‘காமகாரட் இந்தியா’, ‘விண்ட்ராக் எனர்ஜி’, மற்றும் சீனாவில் ‘செட்டியார் கஃபே’ உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் பிரவீன் கணேசன், கடந்த ஜூன் மாதம் சீனாவில் இருந்தபோது சமூக வலைதளத்தில் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டதாகத் தெரிகிறது. இதற்கு எழுந்த கடும் கண்டனங்களை அடுத்து, அவர் உடனடியாக அந்தப் பதிவை நீக்கினார்.

ADVERTISEMENT

இருப்பினும், இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் சுஜாதா தலைமையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், பிரவீன் கணேசனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஹாங்காங்கில் இருந்து நேற்று அதிகாலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த பிரவீன் கணேசனை, குடியுரிமை அதிகாரிகள் பாஸ்போர்ட் சோதனையின்போது தடுத்து நிறுத்தினர். லுக் அவுட் நோட்டீஸ் நிலுவையில் இருப்பது தெரியவந்ததை அடுத்து, விமான நிலைய அதிகாரிகள் சென்னை சைபர் கிரைம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, சென்னை சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் துர்கா தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லி விரைந்து சென்று அவரை கைது செய்தனர். பின்னர் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னைக்கு அழைத்து வருவதற்கான ‘டிரான்சிட் வாரண்ட்’ பெறப்பட்டு, அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். சென்னைக்கு வந்தடைந்ததும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

முன்னதாக, தான் சி.ஐ.எஸ்.எஃப் மற்றும் குடியேற்றத்துறை அதிகாரிகளால் விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பதிவிட்டிருந்தார்.

ADVERTISEMENT

முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்டுள்ள பிரவீன் கணேசனிடம் விசாரணை முடிந்த பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது உள்ளிட்ட அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த இறுதி முடிவு, விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னரே தெரியவரும்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share