வைஃபை ஆன் செய்ததும், “அட கை தட்டி கும்மாளம் போடு கொண்டாட்டம் நீ விரும்பும் வரைக்கும் நிலைக்கும்” என ஹம்மிங்குடன் டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. ’போக்கிரி பொங்கல்’ பாட்டுடன் என்ட்ரி?
ப்ரோ.. அடுத்த திருவிழா மாதிரிதான்.. தமிழ்நாட்டுல இடைத் தேர்தல் நடக்கப் போகுதுங்க..
மே 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிஞ்ச பிறகு பெரம்பூர், திருச்சி கிழக்குன்னு 2 தொகுதிகளில் ஜெயிச்ச சிஎம் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செஞ்சாரு.. அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.. ஆனா திருச்சி கிழக்கில் விஜய் ஜெயிச்சதுக்கு எதிராக திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வழக்கு போட்டாரு..

இன்னொரு பக்கம், மதுராந்தகம் மரகதம் குமரவேல்; தாராபுரம் சத்தியபாமா;
பெருந்துறை ஜெயக்குமார்; அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா; கரூர் எம்.ஆா்.விஜயபாஸ்கர்; விராலிமலை சி. விஜயபாஸ்கர் தங்களோட எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செஞ்சுட்டாங்க.. இந்த தொகுதிகளிலும் காலியாக இருக்குதுன்னு அறிவிக்கப்பட்டிருக்கு.
தமிழ்நாட்டுல மொத்தம் 7 தொகுதிகள் காலியா இருக்கு. பொதுவா ஒரு தொகுதி காலியானதா அறிவிச்சாலே 6 மாதத்துக்குள் இடைத் தேர்தலை நடத்தனும். அதே நேரத்துல தேர்தல் வழக்குகள் இருந்தால் அந்த வழக்குகள் முடியும் வரை இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை தேர்தல் ஆணையம் நடத்தாது.
இதனால வழக்குகள் போடப்பட்டிருக்கிற திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலைன்னு 5 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதிச்சுருக்கு இல்லையா?

இந்த தடைக்கு எதிராக போனவாரம் சிஎம் விஜய் ஒரு மனுத் தாக்கல் செஞ்சாரு.. அதுல, “ திருச்சி கிழக்கு தொகுதி வெற்றியை எதிர்த்து ஜூன் 17-ந்தேதி தான் வழக்கு போடப்பட்டுச்சு.. ஆனா மே 10-ந் தேதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செஞ்சுட்டேன்.. அந்த தொகுதி காலியனதாகவும் அறிவிக்கப்பட்டாச்சு. அந்த டைமில் தேர்தல் வழக்கு எதுவும் நிலுவையிலும் இல்லை. அதுக்கு பிறகுதான் வழக்கே போட்டாங்க.. அதனால திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்த கூடாது..
அதே மாதிரி இடைத்தேர்தலை நிறுத்தி வெச்சிருக்கிற தொகுதிகளில் வழக்கு போட்டிருக்கிறவங்க மட்டும்தான் போட்டியிட்டாங்கன்னு சொல்ல முடியாது.. பலரும் போட்டியிட்டாங்க.. இடைத் தேர்தல் நடத்த முடியாம இருக்கிற 5 தொகுதிகளுக்கும் எம்.எல்.ஏ. இல்லாததால் பொதுமக்களோட பிரச்சனைகளை தீர்க்க முடியலை.. மக்களுக்காக 5 தொகுதி இடைத் தேர்தல் நடத்தனும்.. தடையை நீக்கனும்”ன்னு கேட்டிருந்தாரு..
இதுக்கு இடையில ட்விஸ்ட்டா, ”அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. பதவியை நான் ராஜினாமா செஞ்சதை வாபஸ் வாங்கிக்கிறேன்.. நான் எம்.எல்.ஏ.வாகவே இருக்கிறேன்”ன்னு உயர்நீதிமன்றத்தில் இசக்கி சுப்பையா மனு போட்டாரு.. ஆனா இதை ஏத்துக்க முடியாதுன்னு உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக சொல்லிடுச்சு.. அதோட சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடமும் இசக்கி சுப்பையா கடிதம் கொடுத்திருக்கார்.. அதை ஆய்வு பண்றேன்னு சபாநாயகர் சொல்லி இருக்கிறார்..
இதை பத்தி நாம விசாரிச்சப்ப, “எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செஞ்சு எவ்வளவு நாளாச்சு? இன்னும் இடைத்தேர்தலை நடத்தலைன்னா எப்படி? இன்னும் எவ்வளவு நாள் தான் காத்திருக்கிறது?ன்னுதாம் மாஜிக்கள் புலம்புறாங்க.. அந்த கடுப்பில்தான் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா கடிதத்தையே வாபஸ் வாங்குறேன்னு இசக்கி சுப்பையா கோர்ட்டுக்குப் போனாரு”ன்னு சொல்றாங்க..

அதே நேரத்துல தலைமை தேர்தல் ஆணையம் டெல்லியில, தமிழக இடைத் தேர்தலை பத்தி சீரியசா டிஸ்கஷன் நடத்திகிட்டு இருக்காம்.. இதை பத்தி டெல்லி சோர்ஸ்களிடம் விசாரிச்சப்ப, “5 தொகுதிகளுக்கான எலக்ஷன் விவகாரம்தான் கோர்ட்டில நிலுவையில இருக்கு.. ஆனா தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. அந்த தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தலாம் என்பதுதான் நிலைமை. அதனால இந்த 2 தொகுதிகளுக்கும் முதல்ல தேர்தலை நடத்தலாமா? அப்படின்னுதான் தேர்தல் ஆணையம் டிஸ்கஷன் செஞ்சாங்க.. அனேகமாக இந்த 2 தொகுதிகளுக்குமான இடைத் தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகும்”ன்னு சொல்றாங்க ப்ரோ.

அப்படி இடைத்தேர்தல் நடந்தால்?
நீங்க கேட்கிறது புரியுதுங்க ப்ரோ.. அப்படி 2 தொகுதி இடைத் தேர்தலை முதலில் தேர்தல் ஆணையம் நடத்தினா, திமுக போட்டியிடுமா? அதிமுக ஜெயிச்ச தொகுதி அப்படிங்கிறதால திமுக போட்டியிடாமல் ஒதுங்கி நிற்குமா? அப்படி ஒதுங்கி நின்னா திமுகவினருடைய வாக்குகள் அதிமுகவுக்கு போகுமா? இல்லை அதிமுக- தவெக- திமுகன்னு 3 முனை போட்டி நிலவுவமா? அப்படிங்கிறதுதான் ரொம்பவே பெரிய எதிர்பார்ப்பா இருக்குதுங்க ப்ரோன்னு சொல்லியபடியே டைப் செய்துவிட்டு சென்ட்பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் நுழைந்தது வாட்ஸ் ஆப்.
