CPI, CPM to attend Vijay’s Sep.9 Meeting?: தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் கூட்டணியை உருவாக்குவதற்காக முதல்வர் விஜய் நடத்தும் செப்டம்பர் 9-ந் தேதி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது பற்றி இன்னமும் சிபிஐ, சிபிஎம் கட்சிகள் முடிவெடுக்கவில்லை என அக்கட்சித் தலைவர்கள் வீரபாண்டியன், சண்முகம் தெரிவித்தனர்.
சென்னையில் இன்று (செப்டம்பர் 5) சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஎம் பெ.சண்முகம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, செப்டம்பர் 9-ந் தேதி நடைபெறும் தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்குமா என கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பதிலளிக்கையில், “ அது குறித்து நாங்கள் இன்னும் பேசவில்லை, அந்தந்த கட்சிகள் தனித்தனியாகப் பேச வேண்டும், இதில் ஒன்றிணைந்து முடிவு எடுப்பதில் பிரச்சனை இல்லை. ஏற்கனவே சி.பி.ஐ, சி.பி.எம் தவெக அரசுக்கு வெளியே இருந்து ஆதரவு என்ற முடிவை எடுத்துள்ளோம். அவங்க ஒரு புதிய முயற்சி என்ற முறையில் அனைவரையும் அழைத்து ஒரு கூட்டணி உருவாக்குவது என்ற முறையில் செப்டம்பர் 9-ல் கூட்டம் நடக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். அது அந்தந்த கட்சியின் கமிட்டிகள் (சிபிஐ, சிபிஎம்) கூடி முடிவு எடுக்க வேண்டியுள்ளது.
தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற கட்சிகள், ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு கூட்டணியாக செயல்பட வேண்டும் என்கிறார்கள். கடந்த முறை இந்த மாதிரி வெளிப்படையாக ஒரு கூட்டணி அமைவது என்ற முறையில் கூட்டம் கூட்டப்படவில்லை, அது ஊடகங்கள் மூலமாக வந்த செய்தி. ஊடகச் செய்திகளின் அடிப்படையில் நாங்கள் அதில் கலந்து கொள்ள முடியாது என்பதை வெளிப்படையாகத் தெரிவித்தோம். ஆனால், இப்போது வெளிப்படையாக இந்த நோக்கத்திற்காகத்தான் கூட்டம் கூட்டப்படுகிறது என்பதை அமைச்சர்கள் சந்திப்பில் மாநில செயலாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அந்தந்த கட்சி கமிட்டிகள் பேசி முடிவு அறிவிப்போம்” என்றார்.
சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறுகையில், “இடதுசாரிகள் ஒரு ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியுள்ளோம், ஒரு இடது பயணத்தைத் துவக்கியுள்ளோம். நீண்ட நெடுங்காலமாக பல்வேறு ஜனநாயக சக்திகளுடன் நாங்கள் உடன்பாடு கொண்டுள்ளோம், தேர்தலிலும் எதிர்த்திருக்கிறோம். இப்போதும் பி.ஜே.பி-யை எதிர்ப்பதற்கு ஜனநாயக சக்திகளுடன் அணி சேருவோம், அது சூழல் வரும்போது அறிவிப்போம். தற்பொழுது நாங்கள் இடது ஒருங்கிணைப்புக் குழு, எங்கள் திசை இடது பக்கம், பி.ஜே.பி-யை வீழ்த்துவோம், உழைப்பாளி மக்களின் உரிமைகளுக்காக சமரசம் இல்லாமல் போராடுவோம். தவெகவை வெளியில் இருந்துதான் ஆதரிக்கிறோம், கூட்டணியில் இடம்பெறவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நிலைப்பாடு; அமைச்சரவையிலும் கூட்டணியிலும் நாங்கள் இடம் பெறவில்லை. தவெக அழைப்பு பற்றி கூடி விவாதித்து முடிவெடுப்போம்.
அரசின் அதிகாரிகள் என்பவர்கள் இந்திய அரசியல் சட்டத்தின் வேலை ஆட்கள், பணியாளர்கள். மக்களின் அதிகாரம் தான் முக்கியம், மக்களின் அதிகாரத்தின் குறியீடு முதல்வர். முதல்வரை வழிநடத்தக் கூடாது அதிகாரிகள். மக்களின் அதிகாரத்தின் குறியீடாக இருக்கக்கூடிய முதல்வரும், அமைச்சர்களும்தான் அதிகாரிகளை வழிநடத்த வேண்டும். இங்கே தலைகீழாக இருக்கிறது.
உயர் அதிகாரிகள் அரசின் திட்டங்களைச் செயல்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டுமே தவிர, கொள்கை முடிவுகளை எடுப்பதோ அல்லது அரசை இயக்குவதோ அவர்களின் பணி அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமே நிர்வாகத்தில் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் அதற்கு மாறாக அரசின் எஜமானர்கள் போல் செயல்படக்கூடாது என்பதுமே இடதுசாரி கட்சிகளின் தெளிவான நிலைப்பாடு ஆகும்.
தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலையில் இருக்கிறோம். செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள தவெகவின் 2-வது கட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் நேரில் வந்து அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து இடதுசாரி கட்சிகளின் கமிட்டிகள் தனித்தனியாகக் கூடி விவாதித்து உரிய முடிவை அறிவிப்போம்” என்றார்.
