தவெக கூட்டணியின் 2-வது கூட்டம் : இடதுசாரிகள், வைகோவுக்கு அமைச்சர்கள் நேரில் அழைப்பு!

Published On:

| By Kavi

தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் இன்று கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

முதல்வர் விஜய் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவரது ஆட்சிக்கு முதலில் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. காங்கிரசைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இடதுசாரி கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

ADVERTISEMENT

இதில் இடதுசாரிகளை தவிர மற்ற கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன.

இந்த சூழலில் தமிழக வெற்றிக்கழக கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த ஜூலை 1ஆம் தேதி கோவளத்தில் நடைபெற்றது. இதில் இடதுசாரிகள் கலந்து கொள்ளவில்லை.

ADVERTISEMENT

அப்போது, கூட்டணிக்கு பெயர் வைப்பது தொடர்பாக விஜய் பேசியதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் இரண்டாம் கட்ட கூட்டத்தை நடத்துவதற்கு தமிழக வெற்றி கழகம் தயாராகி வருகிறது.

ADVERTISEMENT

அந்த வகையில் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தமிழக வெற்றி கழக ஆதரவு கட்சிகளின் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வரும் நிலையில் இன்று அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நேரில் சென்று கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து பேசினர்.

முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு சென்று அக்கட்சியின் மாநில செயலாளர் பெ சண்முகத்திடம் ஆலோசித்தனர்.

அங்கிருந்து இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் சென்று அவர்கள் மு வீரபாண்டியனை சந்தித்து பேசினர்.

அமைச்சர்களுடனான சந்திப்பு குறித்து மு வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதல் கட்டமாக நடந்தது தேநீர் விருந்து. அதில் பங்கேற்றால் கூட்டணியில் பங்கேற்றதாக ஆகிவிடும் என்பதால் முதல் நாளே முதல்வரை சந்தித்து கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறி விட்டோம். இப்போது மீண்டும் அது போன்ற ஒரு கருத்து, அதற்கான அழைப்பு எங்களிடம் முன்மொழியபட்டிருக்கிறது. கட்சியில் ஆலோசித்து முடிவெடுப்போம்.

இப்போதும் நாங்கள் கூட்டணியில் அல்லது அமைச்சரவையில் இடம்பெறுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறினார்.

இடதுசாரி கட்சிகளை தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீட்டிற்கும் சென்று அமைச்சர்கள் அழைப்பு விடுத்தனர்.

நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க உள்ளனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share