விவசாயிகளை சாலையில் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளது தவெக அரசு – கனிமொழி குற்றச்சாட்டு

Published On:

| By Pandeeswari Gurusamy

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை அராஜகமாகக் கைது செய்துள்ள தவெக அரசின் கொடுங்கோன்மை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனப் பகுதிக்குட்பட்ட கடைமடை நிலங்களுக்குப் பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் சரிவர வரவில்லை என விவசியிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து முழுமையான அளவில் தாமிரபரணி தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

ADVERTISEMENT

இக்கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் வடகால் கடைமடை பாய்மான விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று காலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி – நெல்லை நான்கு வழிச்சாலையில் புதுக்கோட்டை அருகே உள்ள தட்டப்பாறை விலக்கில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, குலையன்கரிசல் விவசாயிகள் சங்கத் தலைவர் ஹேம்நாத் ஜெகன், கூட்டாம்புளி தலைவர் பட்டு முருகேசன், சேர்வைக்காரன்மடம் தலைவர் தங்கதுரை, கோரம்பள்ளம் விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் சுந்தரபாண்டி மற்றும் அத்திமரப்பட்டி, முள்ளக்காடு, முத்தையாபுரம் பகுதி விவசாயிகள் சங்கப் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து கனிமொழி எம்பி தனது எக்ஸ் பதிவில்,பாபநாசம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி, நியாயமான உரிமைக்காகப் போராடிய தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை அராஜகமாகக் கைது செய்துள்ள தவெக அரசின் கொடுங்கோன்மை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தை சார்ந்துள்ள சுமார் 5,000 ஏக்கர் வாழைப் பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. பலமுறை மனு அளித்தும், தொடர் போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட நிர்வாகமும் நீர்வளத்துறையும் நடவடிக்கை எடுக்காமல், விவசாயிகளை சாலையில் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளது, இந்த அரசு.” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share