அமைச்சர் நிர்மல் குமார் நல்ல மனநிலையில் இருக்கிறாரா? – ஆளுநருக்கு பகீர் கோரிக்கை வைத்த இன்பதுரை எம்பி

Published On:

| By Pandeeswari Gurusamy

அமைச்சர் நிர்மல் குமார் நல்ல மனநிலையில் இருக்கிறாரா என்பதை ஆளுநர் மருத்துவரை வைத்து பரிசோதிக்க வேண்டும் என அதிமுக எம்பி இன்பதுரை சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அ.தி.மு.க. எம்.பி., இன்பதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டி வழக்கு தொடர்வது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் ,

ADVERTISEMENT

தமிழக அமைச்சர்களைப் பொறுத்தவரை, காலையில் விடிந்தால் அவர்களின் முதல் பணி அதிமுக மீது அவதூறு பேசுவதாகும். ஏதோ ஒரு வகையில் பேட்டி கொடுத்தோ, பொது மேடையில் பேசியோ அல்லது அறிக்கை விட்டோ அதிமுக மீது வன்மத்தைக் கொட்டுகிறார்கள். இதை இப்படியே விட்டுவிட முடியாது; சட்டப்படி சந்திக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா எங்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளனர். குறிப்பாக, இரண்டு அமைச்சர்கள் எடப்பாடியார் மீதும், அதிமுக மீதும் தொடர்ந்து அவதூறு பேசி வருகின்றனர்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், ஒரு அமைச்சர் மீது கிரிமினல் வழக்கு தொடரும்போது ஆளுநரிடமிருந்து அனுமதி பெற வேண்டும்; அதன்படி, ஆளுநருக்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம். மாநில அமைச்சர்களை நியமிப்பது ஆளுநர்தான். அவர்தான் அமைச்சர்களின் நடவடிக்கைகளைக் கவனிக்க வேண்டும். ‘காலையில் எழுந்தவுடன் பல் துலக்குகிறாரோ இல்லையோ, அண்ணா திமுகவை பற்றி பேசுவதையே அவர் வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளார்.’

ADVERTISEMENT

அவர் அப்படிப் பேசும் நிலையில் அவர் நல்ல மனநிலையில் இருக்கிறாரா என்பதைப் பார்க்க வேண்டும் என்று நான் கேட்கிறேன். இதை ஒரு கடுமையான குற்றச்சாட்டு என்று பார்க்கக் கூடாது; ஏனென்றால், அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். நாங்கள், ‘இவ்வாறு பேசியது தவறு’ என்று நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம்; ஆனால், அந்த நோட்டீஸ் குறித்தும் அவர் மீண்டும் அவதூறாகப் பேசுகிறார். அப்படியென்றால், அவர் நல்ல மனநிலையில் இருக்கிறாரா என்பதை ஆளுநர் மருத்துவரை வைத்து பரிசோதனை செய்ய வேண்டும்; அது ஆளுநரின் கடமையாகும்.

ஏன் நான் அப்படிச் சொல்கிறேன் என்றால், செந்தில் பாலாஜி மீது நிர்மல் குமார் அவதூறு பேசியதாக ஒரு வழக்கு தொடர்ந்தார். அப்போது நிர்மல் குமார் அதிமுகவில் இருந்தார். அந்த வழக்கில் அவர் மன்னிப்பு கேட்டார். அதுமட்டுமல்லாமல், கடந்த திமுக ஆட்சியில் மழைக்காலங்களில் மின் கசிவு ஏற்பட்டது என்று ஒரு பதிவு போட்டார், அந்தப் பதிவு பொய்யான பதிவு என்று அன்றைய திமுக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் நான்தான் நிர்மல் குமாருக்கு வழக்கறிஞர். அந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, ‘இனிமேல் அவ்வாறு செய்ய மாட்டேன்’ என்று அவர் சொன்னார்.

ADVERTISEMENT

அதனால், எதையாவது பேசிவிட்டு மீண்டும் மன்னிப்பு கூறுகிற மனோபாவம் உள்ளவர் எப்படி சரியான மனநிலை உடையவராக இருக்க முடியும் என்ற கேள்வியை வைக்கிறேன். ஆளுநர் இதில் உடனடியாகத் தலையிட்டு, அவரை அழைத்து என்னவென்று விசாரிக்க வேண்டும். மருத்துவரை வைத்து பரிசோதனைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share