அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது கிரிமினல் வழக்கு: ஆளுநரிடம் அனுமதி கோரிய அதிமுக!

Published On:

| By Pandeeswari Gurusamy

Aadhav Arjuna Press Meet

அதிமுக குறித்தும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து அவதூறு பரப்புவதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சருக்கு எதிரான கிரிமினல் வழக்கு என்பதால் ஆளுநரிடம் ஒப்புதல் கேட்டு அதிமுக கடிதம் அனுப்பியுள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசு அமைந்த நிலையில், சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பினர் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

மேலும், அதிமுக தரப்பில் தேர்தலில் களம் கண்டு வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தவெகவில் இணைந்தனர்.

ADVERTISEMENT

அதிமுகவிலிருந்து விலகி மேலும் பலர் தவெகவில் இணைய உள்ளனர். இதற்கு அதிமுக, திமுக இரண்டும் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்ததே காரணம் எனத் தொடர்ச்சியாக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார், செங்கோட்டையன் உள்ளிட்ட பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், “மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக நிர்வாகிகள் இரட்டை இலை அல்லது சுயேச்சை சின்னத்திற்குப் பதிலாக திமுகவின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டனர்; பதிலுக்கு திமுகவினர் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டனர். சுமார் 70 லட்சம் ரூபாய் பணம் பட்டுவாடா மூலம் வாக்குகள் பரிமாறப்பட்டுள்ளன” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார்.

ADVERTISEMENT

எந்தவித ஆதாரமும் இல்லாமல் உள்நோக்கத்தோடு அதிமுகவிற்கும் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் பேசியதற்கு எதிராகக் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கடந்த 15-ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான அவதூறு வழக்குத் தொடர வேண்டும் என்றால் ஆளுநரின் ஒப்புதல் பெறுவது அவசியம் என்ற அடிப்படையில், ஆளுநருக்கு அதிமுக தரப்பில் இதுகுறித்துக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. BNS 218 விதியின்படி உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான அவதூறு வழக்கின் தொடர் விசாரணை வரும் நவம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share