பிரகாஷ் ராஜ், காக்ரோச் ஜனதா கட்சியுடன் கைகோர்க்கும் நிர்மலா சீதாராமன் கணவர்!

Published On:

| By Mathi

SIR Protest

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை (அக்டோபர் 23-ந் தேதி) நடைபெறும் போராட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார வல்லுநருமான பரகலா பிரபாகர் பங்கேற்க உள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளால் தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாக எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி (Cockroach Janata Party) தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், அக்டோபர் 14-ந் தேதி உருவாக்கப்பட்ட People Against SIR என்ற கூட்டமைப்பு சார்பில் நாளை நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

‘ஒவ்வொரு கையிலும் தேசியக் கொடி.. ஒவ்வொரு தெருவிலும் ஜந்தர் மந்தர்’ என்ற முழக்கத்துடன் இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியிலிருந்து நீக்கி அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட தகுதியான வாக்காளர்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை இந்தக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.

ADVERTISEMENT

இந்தப் போராட்டத்தில் காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, நடிகர் பிரகாஷ் ராஜ், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோருடன் பரகலா பிரபாகரும் பங்கேற்க உள்ளார்.

விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத், மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி, மாணவர் இயக்கத் தலைவர்கள் உள்ளிட்டோரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்க இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக அக்டோபர் 8-ந் தேதி பெங்களூரு ஃப்ரீடம் பார்க்கில் காக்ரோச் ஜனதா கட்சி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் அபிஜித் தீப்கே, நடிகர் பிரகாஷ் ராஜ், யூடியூபர் துருவ் ரத்தி ஆகியோருடன் பரகலா பிரபாகரும் பங்கேற்றிருந்தார்.

பரகலா பிரபாகர் ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்து வருகிறார். எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை வாக்குரிமையைப் பறிக்கும் நடவடிக்கை என்று குற்றம்சாட்டிய அவர், ஒரு குடிமகனை அழிக்க முடியாதபோது, அவரது குடியுரிமையின் முக்கிய உரிமையான வாக்குரிமையை அழிக்கிறார்கள்; அதனால்தான் இதை ரத்தம் சிந்தாத அரசியல் இனப்படுகொலை என்கிறேன் என்றும் விமர்சித்திருந்தார்.

இந்தப் பின்னணியில், ஞானேஷ் குமாருக்கு எதிராக நாளை நடைபெறும் போராட்டத்திலும் காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே உள்ளிட்டோருடன் பரகலா பிரபாகர் பங்கேற்க இருப்பது கவனம் பெற்றுள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share