எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.40 கோடியில் கார்கள்.. விஜய் அரசின் அரசாணை சொல்வது என்ன?

Published On:

| By Mathi

TN MLAs Car

தமிழகத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் சுமார் ரூ.40 கோடியில் புதிய கார்கள் வாங்குவதற்கான விதிகளை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு வெளியிட்டுள்ளது. இதில் கார்களின் விலை உச்சவரம்பு ஆண்டுதோறும் 5% உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழக சட்டசபையில் கடந்த ஆகஸ்ட் 19-ந் தேதி முதல்வர் விஜய், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் கார்கள் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்காக மாதம் ரூ.75,000, உதவியாளர் நியமனத்திற்காக மாதம் ரூ.25,000 வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. திமுகவைச் சேர்ந்த 59 எம்.எல்.ஏ.க்களும் அரசு வழங்கும் கார்களைப் பெறப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. பாமகவைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்களும் கார் வேண்டாம் என்று அறிவித்தனர். கார் வாங்குவதற்கான நிதியை மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், எம்.எல்.ஏ.க்களுக்கு கார்கள் வாங்குவது தொடர்பாக அக்டோபர் 1-ந் தேதி தமிழக அரசு அரசாணை எண் 603-ஐ வெளியிட்டது. இதற்கான விதிகள் தமிழக அரசிதழின் சிறப்பு வெளியீடு எண் 430-ல் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

அதன்படி, அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், அரசுத் தலைமைக் கொறடா ஆகியோருக்கு அதிகபட்சம் ரூ.26 லட்சம் மதிப்பிலும், மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகபட்சம் ரூ.15 லட்சம் மதிப்பிலும் கார்கள் வாங்கலாம்.

இந்தக் கணக்கின்படி, அமைச்சர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு தலா ரூ.26 லட்சம் வீதம் ரூ.10.40 கோடியும், மற்ற 194 எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.15 லட்சம் வீதம் ரூ.29.10 கோடியும் என மொத்தம் ரூ.39.50 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆண்டுதோறும் 5% உயர்வு

அரசாணையில் இடம்பெற்றுள்ள முக்கியமான அம்சம், கார்கள் வாங்குவதற்கான அதிகபட்ச விலை வரம்பு ஆண்டுதோறும் 5% உயர்த்தப்படும் என்பதுதான்.

இதன்படி, ரூ.26 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை உச்சவரம்பு அடுத்த ஆண்டில் ரூ.27.30 லட்சமாகவும், ரூ.15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்பு ரூ.15.75 லட்சமாகவும் உயரும்.

கார்கள் யார் பெயரில் வாங்கப்படும்?

அமைச்சர்களுக்கான கார்கள் தமிழக அரசின் பெயரில் வாங்கப்படும். சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், அரசுத் தலைமைக் கொறடா மற்றும் மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கான கார்கள் தமிழக சட்டசபை செயலகத்தின் செயலாளர் பெயரில் வாங்கப்படும்.

அனைத்துக் கார்களும் மத்திய அரசின் அரசு மின்னணு கொள்முதல் இணையதளமான GeM மூலமாக வாங்கப்பட வேண்டும். மேலும், அவை BS-VI மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும்.

பெட்ரோல், ஓட்டுநர் செலவை யார் ஏற்பார்கள்?

அமைச்சர்களுக்கான கார்களை பொதுத்துறை மூலம் அரசு வழங்கும். அந்தக் கார்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு, எரிபொருள் மற்றும் ஓட்டுநர் செலவுகளையும் அரசின் பொதுத்துறையே ஏற்கும்.

சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், அரசுத் தலைமைக் கொறடா ஆகியோருக்கான கார்களை சட்டசபை செயலகம் வழங்கும். அவர்களுக்கான கார் பராமரிப்பு, எரிபொருள், ஓட்டுநர் செலவுகளைச் சட்டசபை செயலகம் ஏற்கும்.

ஆனால், மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது. அவர்களுக்கான கார் பராமரிப்பு, பழுதுபார்ப்பு, எரிபொருள், ஓட்டுநர் செலவுகள் அனைத்தும் அவர்களுக்கு வழங்கப்படும் வாகனப் படியிலிருந்தே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி முடிந்ததும் காரை ஒப்படைக்க வேண்டும்

மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கான கார்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் வழங்கப்படும். எம்.எல்.ஏ.வின் பதவிக்காலம் முடிந்தாலோ, ராஜினாமா செய்தாலோ, பதவியிலிருந்து நீக்கப்பட்டாலோ, தகுதிநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது இறந்தாலோ, அவருக்கு வழங்கப்பட்ட கார் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும். இதுகுறித்து சட்டசபை செயலகத்திற்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதேபோல அமைச்சர்கள் தங்கள் பதவியிலிருந்து விலகும்போது காரை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். சபாநாயகர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் பதவியிலிருந்து விலகும்போது சட்டசபை செயலகத்திடம் காரை ஒப்படைக்க வேண்டும். மேலும், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இந்த விதிகளைத் தளர்த்தவோ, நிபந்தனைகளுடன் மாற்றியமைக்கவோ மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share