100 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முத்துக்குமார் உரிய நேரத்தில் திரும்புவார் என்று அவரது குடும்பத்தினரிடம் அன்பில் மகேஷ் உறுதியளித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீசார் கூறியுள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பிடி அரசகுமார் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீதும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் முன் ஜாமின் கேட்டு அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது அன்பில் மகேஷ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ‘காவல் துறையினரின் சம்மனை ஏற்று செப்டம்பர் 18ஆம் தேதி அன்பில் மகேஷ் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 240 கேள்விகள் கேட்கப்பட்டன. சுமார் 8 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே அவருக்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இப்போது 10 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை ஏற்று ஏழு ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை அவர் சமர்ப்பித்துள்ளார்.
இந்த வழக்கில் அன்பில் மகேஷ் சாட்சியை கலைக்க மாட்டார். எங்கும் தப்பிச் செல்ல மாட்டார். விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறார். இவ்வழக்கில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் இருக்கின்றனர். எனவே இதை பரிசீலித்து அன்பில் மகேஷுக்கும் முன் ஜாமின் வழங்க வேண்டும் என்று வாதங்களை முன் வைத்தார்.
காவல்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், ‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபரான முத்துக்குமார் தலைமறைவாக இருக்கிறார். 400 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே முன்ஜாமின் வழங்கக் கூடாது” என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில் இன்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், இந்த வழக்கின் இரண்டாவது குற்றம் சாட்டப்பட்ட நபரான முத்துக்குமார் உறவினர்கள் அன்பில் மகேஷை அணுகியுள்ளனர். அவர்களிடம் முத்துக்குமார் தகுந்த நேரத்தில் திரும்பி வருவார் பாதுகாப்பாக இருக்கிறார் என்று அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார். அன்பில் மகேஷுக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது. கட்சி நிதி என்ற பெயரில் லஞ்ச பணம் அன்பில் மகேஷிடம் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
