தாராபுரம் நா.த.க. வேட்பாளர் உள்ளிட்ட 9 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகா, அவரது கணவர் முருகு சந்திரகுமார் ஆகியோரை கோவையில் உள்ள அவர்களது வீட்டுக்கு சென்று போலீசார் நேற்று அதிகாலையில் கைது செய்தனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளரும், மாநில மகளிர் அணி செயலாளருமான கார்த்திகா, தேர்தலின்போது கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து, முதல்-அமைச்சர் ரோடு ஷோ சென்ற பாதையில் மறியலில் ஈடுபட்டார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ சென்ற பாதையில் அனுமதி அளிக்கப்படாத இடத்தில் இடையூறாக வைக்கப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சி பதாகையை அகற்றிய போது போலீசாரை அவதூறாக பேசி தாக்க முயன்றதாகவும், காமராஜபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் குழந்தையுடன் வீட்டுக்கு சென்ற த.வெ.க. தொண்டர் மீது தாக்குதல் நடத்தியதோடு, அவதூறு வீடியோ பதிவிட்டது உள்ளிட்ட 4 வழக்குகளில் 12-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படுள்ளது.
இந்த விவகாரத்தில் கார்த்திகா அவரது கணவர் முருகு சந்திர குமார், தென்காசியை சேர்ந்த இசை மதிவாணன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் சஞ்சய் காந்தி, தாராபுரம் தேர்தல் பொறுப்பாளர் கந்தசாமி, ஷேக்பரீத், தாராபுரம் நகர பொறுப்பாளர் சூர்யா, மாணவர் பாசறை செயலாளர் கோகுல், சோழவந்தான் இளைஞர் பாசறை செயலாளர் விக்னேஷ் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கார்த்திகா கைதுக்கு திமுக, அதிமுக, பாஜக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கார்த்திகா உட்பட 9 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதானவர்கள் நேற்றிரவு தாராபுரம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 5 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணையில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
