உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகள் வரை கேட்டு வந்த காங்கிரஸ், தற்போது 125 தொகுதிகளைக் கேட்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஏற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் 2027-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ள இந்த மாநிலத்தில் ஆளும் பாஜகவை எதிர்த்து அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸும் கூட்டணியாகத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகின்றன.
ஆனால் காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.
கடந்த அக்டோபர் 6-ந் தேதி மின்னம்பலத்தில், ‘2022-ல் 2 இடம்… இப்போது கேட்பது 200: அன்று ஸ்டாலின்… இன்று அகிலேஷை கடுப்பேற்றும் ராகுல் காந்தி‘ என்ற தலைப்பில் விரிவாக எழுதியிருந்தோம்.
அப்போது காங்கிரஸ் தரப்பில் 150 முதல் 200 தொகுதிகள் வரை கேட்கப்பட்டு வந்தது. காங்கிரஸுக்கு அதிகபட்சமாக 40 முதல் 50 தொகுதிகள் வரை ஒதுக்குவது குறித்தே சமாஜ்வாதி கட்சிக்குள் ஆலோசிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று முன்தினம் (அக்டோபர் 19-ந் தேதி) உத்தரப்பிரதேச காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சுமார் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனையில் உத்தரப்பிரதேசத்தின் 175 சட்டசபை தொகுதிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. தொகுதிகளை ஏ, பி, சி என 3 பிரிவுகளாகப் பிரித்து காங்கிரஸ் ஆய்வு செய்துள்ளது.
இதில் சுமார் 100 தொகுதிகள் ஏ பிரிவிலும், 40 முதல் 50 தொகுதிகள் பி பிரிவிலும், 25 முதல் 35 தொகுதிகள் சி பிரிவிலும் இடம்பெற்றிருக்கின்றன.
கடந்த 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள், 2017 சட்டசபை தேர்தல் முடிவுகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளிலும் குறைந்தபட்சம் ஒரு சட்டசபை தொகுதியிலாவது காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்பது அக்கட்சியின் திட்டமாக இருக்கிறது.
இதன் மூலம் மாநிலம் முழுவதும் கட்சியின் செல்வாக்கை மீண்டும் அதிகரிக்க முடியும் என்று காங்கிரஸ் தலைமை கருதுகிறது.
மேலும், ரேபரேலி, அமேதி, சஹாரன்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொகுதிகளுக்கும் காங்கிரஸ் முக்கியத்துவம் அளித்து வருகிறது. மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், முன்னாள் தலைவர் அஜய் குமார் லல்லு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் தொடர்புடைய தொகுதிகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் 125 முதல் 150 தொகுதிகள் அடங்கிய பட்டியலை சமாஜ்வாதி கட்சியிடம் வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ஆனால் சமாஜ்வாதி கட்சியின் கணக்கு வேறாக இருக்கிறது. காங்கிரஸுக்கு 60 முதல் 65 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க சமாஜ்வாதி கட்சி தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் சமாஜ்வாதி கட்சியே போட்டியிட விரும்புகிறது.
கடந்த 2022 சட்டசபை தேர்தலில் 399 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் வாக்கு சதவிகிதமும் 2.33% ஆக இருந்தது. ஆனால் 2024 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ், போட்டியிட்ட 17 தொகுதிகளில் 6 இடங்களை வென்றது. சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளையே தற்போது அதிக சட்டசபை தொகுதிகளைக் கேட்பதற்கான முக்கியக் கணக்காக காங்கிரஸ் முன்வைத்து வருகிறது. ஆனால் மக்களவைத் தேர்தலில் கிடைத்த வெற்றி என்பது கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளால் கிடைத்தது என்றும், அதை காங்கிரஸின் தனிப்பட்ட பலமாகக் கருத முடியாது என்றும் சமாஜ்வாதி கட்சியினர் வாதிட்டு வருகின்றனர்.
மேலும், தொகுதிப் பங்கீட்டில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பையே முக்கிய நோக்கமாக வைத்து கொள்ள வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி வருகிறார். இதனால் தொகுதிப் பங்கீட்டில் இரு கட்சிகளுக்கும் இடையே இன்னமும் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில்தான் அகிலேஷ் யாதவுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதில் பிரியங்கா காந்தி முக்கியப் பங்கு வகிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் மாதத்துக்குள் சமாஜ்வாதி கட்சியுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துவிட வேண்டும் என்பதும் காங்கிரஸின் திட்டமாக இருக்கிறது.
