தமிழக சட்டசபை தேர்தலின்போது திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டு பல மாதங்களாக குடைச்சல் கொடுத்த காங்கிரஸ், இப்போது உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கும் அதேபோன்ற நெருக்கடியை கொடுத்து வருகிறது.


2026 தமிழக சட்டசபை தேர்தலின் போது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அதிக தொகுதிகளை கேட்டது. இதற்கு காங்கிரஸ் கையில் எடுத்த முக்கியமான கணக்கு 2024 மக்களவைத் தேர்தல் முடிவு.
2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை சட்டசபைத் தொகுதிவாரியாக பிரித்துப் பார்த்தபோது, காங்கிரஸ் போட்டியிட்ட பகுதிகளில் 52 சட்டசபைத் தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.
இந்தக் கணக்கை முன்வைத்துதான் 2026 சட்டசபை தேர்தலுக்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் திமுகவிடம் 60 தொகுதிகள் வரை காங்கிரஸ் கேட்டது.
ஆனால் திமுக இதை ஏற்கவில்லை. பல சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடந்தது. காங்கிரஸும் தனது கோரிக்கையை படிப்படியாக குறைத்தது. கடைசியில் 28 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் என உடன்பாடு ஏற்பட்டது.
அதாவது மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியையும், சட்டசபைத் தொகுதிவாரியாக கிடைத்த முன்னிலையையும் கணக்குப் போட்டுத்தான் திமுகவிடம் தனது பேரத்தை காங்கிரஸ் நடத்தியது. ஆனால் இப்படி வம்படியாக திமுகவிடம் இடங்களைப் பெற்று 5 தொகுதிகளில் மட்டுமே வென்றது காங்கிரஸ். அத்துடன் வாக்கு எண்ணிக்கை முடிந்த மறுநாளே திமுக கூட்டணியில் இருந்து விலகி விஜய்யின் தவெக கூட்டணிக்கும் தாவிவிட்டது காங்கிரஸ்.
தமிழக தேர்தல் முடிந்து சில மாதங்களே ஆன நிலையில், இப்போது அதே பார்முலாவையே உத்தரப்பிரதேசத்தில் கையில் எடுத்திருக்கிறது காங்கிரஸ்.

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 403 தொகுதிகள் உள்ளன. பாஜகவை எதிர்த்து அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸும் மீண்டும் கூட்டணியாக தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. ஆனால் காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்பதில்தான் இப்போதே பிரச்சினை தொடங்கிவிட்டது.
399 இடங்களில் போட்டியிட்டு 2 இடத்தில் வென்ற காங்கிரஸ்
கடந்த 2022 சட்டசபைத் தேர்தலில் 347 தொகுதிகளில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி 111 இடங்களை வென்றது. அதே நேரத்தில் 399 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய காங்கிரஸால் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அக்கட்சியின் வாக்கு சதவிகிதமும் 2.33% மட்டும்தான்.

2027 தேர்தலுக்கு 150 சீட் எதிர்பார்க்கும் காங்கிரஸ்
ஆனால் 2027 தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி 150 தொகுதிகள் வரை கேட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு சமாஜ்வாதி கட்சியிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸின் தற்போதைய பலத்தையும், கட்சி அமைப்பையும் வைத்துப் பார்த்தால் அந்த அளவுக்கு அதாவது 150 தொகுதிகளை நிச்சயமாக ஒதுக்க முடியாது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் சீறுகின்றனர்.
இந்த நிலையில்தான் உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜேந்திர பால் கவுதம் இன்னும் ஒருபடி மேலே சென்று சமாஜ்வாதி கட்சியினரை வெறுப்பேற்றிவிட்டிருக்கிறார். அதாவது, “நாங்க 150 தொகுதியா கேட்டோம்? 200 தொகுதிகள்தான் கேட்டோம்” என்கிறார்.
அத்துடன் கூட்டணியில் காங்கிரஸுக்கு சமமான மரியாதையும் பங்கும் வேண்டும் என்றும், மாநிலத்தில் உள்ள 403 தொகுதிகளிலும் காங்கிரஸ் தேர்தலுக்கான தயாராகி வருகிறது என்றும் கூறினார் ராஜேந்திர பால் கவுதம்.
இதுதான் அகிலேஷுக்கு வந்திருக்கும் புதிய தலைவலி.
403 தொகுதிகளில் கிட்டத்தட்ட பாதியை காங்கிரஸுக்கு கொடுத்துவிட்டால், 2022 தேர்தலில் 111 தொகுதிகளை வென்ற சமாஜ்வாதி கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது? என்ற கேள்வி அந்தக் கட்சிக்குள் எழுகிறது.

காங்கிரஸின் கணக்கு
ஆனால் காங்கிரஸ் தரப்பு சொல்லும் கணக்கு வேறு. 2022 தேர்தலை மட்டும் பார்க்காதீர்கள்; 2024 மக்களவைத் தேர்தலையும் பாருங்கள் என்பதுதான் காங்கிரஸின் வாதம்.
2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியும் அகிலேஷ் யாதவும் கைகோர்த்த பிறகு உத்தரப்பிரதேசத்தில் அரசியல் கணக்கு மாறியது. மாநிலத்தின் 80 மக்களவைத் தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களை வென்றது. காங்கிரஸ் 6 இடங்களை கைப்பற்றியது. இரண்டு கட்சிகளும் சேர்ந்து 43 தொகுதிகளை வென்றன. பாஜகவுக்கு 33 தொகுதிகளே கிடைத்தன.
2019 மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் 62 தொகுதிகளை வென்றிருந்த பாஜக, 2024-ல் 33 இடங்களுக்கு சரிந்தது. மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் போனதில் உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்ட இந்த பின்னடைவும் மிக முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த வெற்றியைத்தான் தற்போது காங்கிரஸ் தனது பேரத்துக்கு முக்கியமான ஆயுதமாக கையில் எடுத்துள்ளது. 2022 சட்டசபை தேர்தலில் தனியாக போட்டியிட்டபோது 2 இடங்களில்தான் காங்கிரஸுக்கு வெற்றி கிடைத்தது. ஆனால் 2024-ல் சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்த பிறகு காங்கிரஸ் 6 மக்களவைத் தொகுதிகளை வென்றது. அதனால் 2022 சட்டசபை தேர்தல் முடிவை மட்டும் வைத்து தங்களது பலத்தை முடிவு செய்யக்கூடாது; மக்களவைத் தேர்தல் வெற்றியையும் பார்க்க வேண்டும் என்பது காங்கிரஸின் வாதமாக இருக்கிறது.
தமிழகத்தில் திமுகவிடம் காங்கிரஸ் முன்வைத்த கணக்கும் இப்படியானதுதான். தமிழகத்தில் 2024 மக்களவைத் தேர்தல் முடிவை சட்டசபைத் தொகுதிவாரியாக கணக்கிட்டு அதிக தொகுதிகளை கேட்டது. இப்போது உத்தரப்பிரதேசத்திலும் 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தங்களது நிலை மாறிவிட்டதாக கூறி அதிக தொகுதிகளை கேட்கிறது.

காங்கிரஸ் வாக்கு மட்டும்தானா? அகிலேஷ் கேள்வி
ஆனால் தமிழகத்தில் திமுக எழுப்பிய கேள்வியை இப்போது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் எழுப்புகிறது. மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளும் சேர்ந்து கிடைத்த வெற்றியை, காங்கிரஸின் தனிப்பட்ட பலமாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?
ஏனென்றால் 2024 உத்தரப்பிரதேச மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனியாக போட்டியிடவில்லை. சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்து 17 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. அந்தத் தொகுதிகளில் சமாஜ்வாதி ஆதரவாளர்களின் வாக்குகளும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு கிடைத்தன.
இதனால் 2022 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெற்ற சுமார் 2.3 விழுக்காடு வாக்கையும், 2024 மக்களவைத் தேர்தலில் பெற்ற சுமார் 9.5 விழுக்காடு வாக்கையும் அப்படியே ஒப்பிட்டுப் பார்க்க முடியாது; அதையே பேரம் பேசும் அடிப்படையாக காங்கிரஸ் வைத்துக் கொள்ள முடியாது என்கிறது சமாஜ்வாதி கட்சி.

அகிலேஷின் வியூகம்
அகிலேஷிடமும் இன்னொரு வலுவான வியூகமும் கையில் இருக்கிறது. 2024 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி மட்டும் 37 தொகுதிகளை வென்றது. உத்தரப்பிரதேசத்தில் அதிக மக்களவைத் தொகுதிக ளை வென்ற கட்சியாகவும் உருவெடுத்தது. இதற்கு காங்கிரஸுடனான கூட்டணி மட்டுமே காரணமாக இருந்துவிடவில்லை; அகிலேஷ் யாதவ் கையில் எடுத்த புதிய வியூகமும் முக்கிய காரணமாக இருந்தது.

சமாஜ்வாதி கட்சி என்றாலே யாதவ் மற்றும் முஸ்லிம் வாக்குகளை அதிகமாக நம்பியிருக்கும் கட்சி என்ற பழைய பிம்பத்தை மாற்ற அகிலேஷ் முயன்றார்.
பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர் ஆகியோரை ஒன்றாக இணைக்கும் அரசியல் வியூகத்தை முன்வைத்தார் அகிலேஷ். வேட்பாளர் தேர்விலும் யாதவ் சமூகத்தை மட்டும் நம்பாமல், யாதவ் அல்லாத பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் தலித் சமூகத்தினருக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்.
2024 மக்களவைத் தேர்தலில் இந்தக் கணக்கு சமாஜ்வாதி கட்சிக்கு பல இடங்களில் கைகொடுத்தது. அதனால்தான் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்வெற்றியை முழுமையாக காங்கிரஸ் தனது பேரத்துக்கான கணக்காக மாற்றுவதை சமாஜ்வாதி கட்சி ஏற்கத் தயாராக இல்லை.
ஒரு காலத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைத்து கோலோச்சிய காங்கிரஸ், இப்போது அனேகமாக காலவதியான கணக்குக்கு வந்துவிட்டது என்கின்றர் சமாஜ்வாதி கட்சியினர்.
ஆனால் சமாஜ்வாதி கட்சி கொடுக்கும் 40 அல்லது 50 தொகுதிகளில் மட்டும் தொடர்ந்து போட்டியிட்டால், மாநிலம் முழுவதும் கட்சியை மீண்டும் வளர்க்க முடியாது என்ற கருத்து காங்கிரஸுக்குள் இருக்கிறது. இப்படித்தான் தமிழ்நாட்டிலும் பேசியது காங்கிரஸ். தமிழ்நாட்டில் காங்கிரஸை வளர்க்க அதிகமான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றெல்லாம் வாதிட்டனர்.

அகிலேஷை கடுப்பேற்றும் ராகுல் காந்தி
இதோடு ராகுல் காந்தி இன்னொரு பக்கத்திலும் காய் நகர்த்தி வருகிறார். இதுவும் கூட தமிழ்நாட்டு தேர்தலின் போது ராகுல் கையில் எடுத்திருந்த பாணிதான்..
ஒரு பக்கம் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழுவையே அமைத்திருந்த ராகுல் காந்தி, இன்னொரு பக்கம் பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்கள் மூலம் விஜய்யின் தவெகவுடன் நட்புக் கரம் நீட்டிக் கொண்டிருந்தார்.
அதே பாணியில் உத்தரப்பிரதேசத்தில் குறிப்பிட்ட சமூகங்களில் செல்வாக்கு வைத்திருக்கும் சிறிய கட்சிகளின் தலைவர்களையும் ராகுல் காந்தி சந்தித்து வருகிறார். ஸ்வாமி பிரசாத் மவுரியா, சஞ்சய் சவுகான் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவது உத்தரப்பிரதேச அரசியலில் கவனம் பெற்றிருக்கிறது.
இதுவும் அகிலேஷுக்கு இன்னொரு சிக்கலை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர் ஆகியோரை இணைத்து தேர்தல் வெற்றியை அறுவடை செய்வது என்பதுதான் அகிலேஷின் வியூகம்.
ஆனால் ராகுல் காந்தியும் அதே பாணியில் அதே சமூகங்களில் செல்வாக்கு வைத்திருக்கும் சிறிய கட்சிகளையும் தலைவர்களையும் தனது பக்கம் கொண்டு வர முயற்சிப்பது அகிலேஷ் யாதவை கடுப்பேற்றும் செயலாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் காங்கிரஸ் தலைவர்கள் 150, 200 என்று தொகுதி எண்ணிக்கையை பொதுவெளியில் பேசுவது சமாஜ்வாதி கட்சியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இதனால்தான் காங்கிரஸுக்கு எந்தெந்த தொகுதிகள் வேண்டும் என்பதை ஊடகங்களில் பேச வேண்டிய அவசியமில்லை; அகிலேஷ் யாதவிடம் நேரடியாக பேசலாம் என்று சமாஜ்வாதி எம்.பி. தர்மேந்திர யாதவ் கூறியுள்ளார்.
அகிலேஷ் யாதவும் தனது கட்சித் தலைவர்களுக்கு ஒரு அறிவுறுத்தலை வழங்கியிருக்கிறார். காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீடு தொடர்பான கருத்து வேறுபாடுகளை பொதுவெளியில் பேசாமல் தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அன்று ஸ்டாலின்.. இன்று அகிலேஷ் யாதவ்
அன்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கணக்கை வைத்து திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்ட காங்கிரஸ், இன்று அதே கணக்குடன் உ.பி.யில் அகிலேஷிடம் பேரத்தை தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் காங்கிரஸின் அந்த பேரத்தை 28 தொகுதிகளில் முடித்தார். உத்தரப்பிரதேசத்தில் 200 தொகுதிகள் என்று தொடங்கியிருக்கும் காங்கிரஸின் பேரத்தை அகிலேஷ் எத்தனை தொகுதிகளில் முடித்து வைக்கப் போகிறார் என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பு.
