தவெகவுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரி? 1 மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்ட வாக்குபதிவு

Published On:

| By Pandeeswari Gurusamy

தாராபுரம் கொளிஞ்சிவாடி வாக்குச்சாவடி அலுவலர், ஆளும் கட்சியான தவெகவிற்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாகக் கூறி திமுக முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து திமுக முகவர் கூறுகையில், “தாராபுரம் தொகுதி பாகம் எண் 137-ல் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு வயதான மூதாட்டி ஒருவர் வாக்களிக்க வந்தார். அவரை அழைத்துச் சென்ற தேர்தல் அதிகாரி, மூதாட்டி ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு வாக்களிக்கச் சொன்னபோதிலும், அதற்கு மாறாக இரண்டாவது சின்னமான தவெகவின் சின்னத்திற்கு வாக்களித்துள்ளார். அந்தத் தேர்தல் அதிகாரி காலையிலிருந்தே தவெகவிற்குச் சாதகமாகவே நடந்து வருகிறார்.

ADVERTISEMENT

இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால், ‘நீங்கள் புகார் அளித்தால் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என அலட்சியமாகக் கூறுகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் எங்களது திமுக வேட்பாளர் பெரியகருப்பன் வெறும் ஒரு வாக்கில்தான் தோல்வியடைந்தார். தேர்தலில் ஒவ்வொரு வாக்கிற்கும் அவ்வளவு முக்கியத்துவம் உள்ளது. இப்படி அரசு அதிகாரியே தவறு செய்துவிட்டுப் போனால், நாங்கள் புகார் அளிப்பது சரிதான்; ஆனால், தவறாகப் பதிவான அந்த ஒரு வாக்கிற்கு யார் பொறுப்பு? இதற்கு இதுவரை வருவாய் ஆர்டிஓ எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இதன் காரணமாகக் கடந்த ஒரு மணி நேரமாக வாக்குப்பதிவை நிறுத்தி வைத்துள்ளோம். இருப்பினும் இதுவரை ஆர்டிஓ நேரில் வரவில்லை. அதேபோல், தேர்தல் நடைபெறும் சில பகுதிகளில் வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டருக்கு அப்பால் வாகனங்களை நிறுத்தச் சொல்கிறார்கள்; சில பகுதிகளில் 100 மீட்டர் வரையிலும் வாகனங்களை அனுமதிக்கிறார்கள். தேர்தல் விதிமுறைகள் குறித்த முறையான வழிகாட்டுதல் இல்லாததால், வாக்குப்பதிவு சதவீதம் கடுமையாகக் குறையும் சூழல் உருவாகியுள்ளது” எனக் குற்றம்சாட்டினார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share