ஒரே வாக்கு வித்தியாசத்தில் தோல்வி.. முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிமன்றம்

Published On:

| By Pandeeswari Gurusamy

thiruppathur MLA

திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பெரியகருப்பன் 83,364 வாக்குகளையும், த.வெ.க. வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளையும் பெற்றிருந்தனர். ஒரு வாக்கு வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரியகருப்பன் அவசர வழக்கு தொடர்ந்தார். அதில், “சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்ட தொகுதிக்கு அனுப்பப்பட்டுவிட்டது. அந்த வாக்கை மீட்டு எனது தொகுதியின் கணக்கில் சேர்க்க வேண்டும். அதுவரை சீனிவாச சேதுபதி சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எல். விக்டோரியா கவுரி மற்றும் செந்தில் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கான தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கு அந்த வாக்கை தொகுதி தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார். அந்த வாக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். செல்லத்தக்க அந்த வாக்கு சரியாகச் சேர்த்திருந்தால் இரு வேட்பாளர்களும் சமமான வாக்குகளைப் பெற்றிருப்பர். பின்னர் குலுக்கல் மூலம் வெற்றி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்” என்று வாதிட்டார்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், இதுபோன்ற சூழ்நிலையில் என்ன நடைமுறை பின்பற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் விதிகள் வகுத்துள்ளதா என்று கேள்வி எழுப்பினர். பதில் அளித்த வழக்கறிஞர், “இது தொடர்பாக எந்தத் தெளிவான நடைமுறையும் இல்லை. இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு பல புகார்கள் அளித்தும் எந்தப் பதிலும் இல்லை. தவறான முகவரிக்குச் செல்லும் கடிதம் கண்டுபிடிக்கப்படும் போது சரியான முகவரிக்கு தானாக அனுப்பி வைக்கப்படும். அதுபோல இந்த வாக்கை சரியான தொகுதிக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும்” என்றார்.

த.வெ.க. வேட்பாளர் சீனிவாச சேதுபதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி “இந்த விவகாரம் தொடர்பாக பெரியகருப்பன் தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியும். சட்டமன்ற நடவடிக்கையில் பங்கேற்க தடை கோரி இந்த வழக்கைத் தாக்கல் செய்ய முடியாது. எனவே எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுவிட்டால் அவரை கடமையாற்ற அனுமதிக்க வேண்டும். சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க அவருக்கு தடை விதிக்க முடியாது. தடை விதித்தால் மக்களின் உரிமை பாதிக்கப்படும்” என்றார்.

ADVERTISEMENT

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே. தருண் இந்த விவகாரத்தில் தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியும் “தபால் வாக்குகள் இந்திய தபால்துறை மூலம் அனுப்பப்படுவதில்லை. தபால் வாக்குகளைப் பெற தேர்தல் ஆணையம் துணை தாசில்தார் அந்தஸ்துள்ள அதிகாரியை நியமிக்கும். அந்த அதிகாரி தபால் வாக்குகளைப் பெற்று சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பார். அரசியல் கட்சி பிரதிநிதிகளும் இதில் அமர்த்தப்படுவதால் எந்தத் தவறும் நடைபெறாது. தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாற்றி அனுப்பப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. தேர்தல் வழக்கு தாக்கல் செய்யும் வரை தேர்தல் தொடர்பான ஆவணங்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும்” என்றார்.

இதற்கு நீதிபதிகள், “தபால் வாக்குகள் வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டது குறித்து தி.மு.க. வேட்பாளரின் புகாருக்கு பதில் அளிக்காதது ஏன்? ஒரு வாக்காக இருந்தாலும் பதில் அளிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. இதற்கான காரணங்களை விரிவாக விளக்கி தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறி, “இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரிப்போம்” என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, “வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்ட ஒரு தபால் வாக்குச்சீட்டால் தேர்தல் முடிவுகள் மாறியுள்ளதாகவும், தபால் வாக்குச்சீட்டு தொகுதி மாறி அனுப்பப்பட்டால் என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பது தெரியாத நிலை உள்ளதாகவும்” பெரியகருப்பன் தரப்பில் வாதிடப்பட்டது. இறுதியில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட விடுமுறை கால அமர்வு நீதிபதிகள், தி.மு.க. வேட்பாளர் பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share