தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை (M.K.Stalin) தமிழ்நாடு முதல்வர் விஜய் (CM Vijay) இன்று மே 11-ந் தேதி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
17-வது தமிழக சட்டசபையின் முதலாவது கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. சட்டசபையில் புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
வாசலில் வரவேற்ற உதயநிதி
இதனைத் தொடர்ந்து பிற்பகலில் சட்டசபையில் இருந்து புறப்பட்ட முதல்வர் விஜய், சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன்சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்றார். அங்கு முன்னாள் துணை முதல்வரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், வாசலில் நின்று முதல்வர் விஜய்யை ஆரத் தழுவி வரவேற்றார்.
ஆரத் தழுவி அன்பை வெளிப்படுத்திய ஸ்டாலின்
இதன் பின்னர் வீட்டுக்குள் வந்த விஜய்யை மு.க.ஸ்டாலினும் ஆரத் தழுவி அன்பை வெளிப்படுத்தினார். இதனையடுத்து இருவரும் சால்வை அணிவித்தனர்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டார்.
விஜய்க்கு ஸ்டாலின் அட்வைஸ் என்ன?
இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின்-விஜய் சந்திப்பு படங்கள்







