சென்னையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டதால், செவிலியர்கள் கோஷங்களை எழுப்பினர். திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜும் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருந்தார். இரவு வரை போராட்டம் தொடர்ந்ததால், போலீசார் அவர்களைக் குண்டுக்கட்டாகக் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
செவிலியர்களின் பிரதிநிதிகள், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோரை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தக் காவல்துறை அழைத்துச் சென்றது. ஆனால், பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்லாமல் காவல்துறை அவர்களை மண்டபத்தில் அடைத்து வைத்ததாகத் தகவல் வெளியானது. மேலும், போராட்டம் நடந்த இடத்தின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. எனினும், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் செவிலியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களைக் காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரவு நேரத்தில் செவிலியர்களைக் கைது செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது செவிலியர்கள் போராட்டம் அடுத்த மாதம் மூன்றாம் தேதி வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவல், கண்துடைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, முதுகில் குத்தும் த.வெ.க. அரசின் துரோகத்திற்குச் செவிலியர்கள்தான் தற்போதைய இரையா?
பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட தங்களது வாழ்வாதார உரிமைகளுக்காக அறவழியில் போராடிய செவிலியர்களைக் காவல்துறையைக் கொண்டு கைது செய்த த.வெ.க. அரசின் அராஜக நடவடிக்கைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
போராடும் செவிலியர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்திட மனம் வராத துரோக த.வெ.க. அரசுக்கு, ஈவு இரக்கமின்றி அவர்களைக் கைது செய்ய மட்டும் எப்படி மனம் வந்ததோ?
போராடிய செவிலியர்களின் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கைது செய்ததாக அவர்களது சட்ட ஆலோசகரே குற்றம்சாட்டியிருக்கிறார். தொடர்ந்து, போராட்டக் களத்திலிருந்த செவிலியர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராட்டக் களத்திற்குச் சென்று ஆதரவு;
தேர்தல் வந்தபோது பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி;
ஆட்சிக்கு வந்ததும் அதே கோரிக்கையை முன்வைத்தால் காவல்துறை நடவடிக்கை!
முரண்பாட்டு மூட்டையாக விளங்கும் முதலமைச்சர் விஜயும், அவரது நிர்வாகத் திறனற்ற துக்ளக் நடவடிக்கைகளுக்கு முட்டுக் கொடுக்கும் அதிமேதாவி அமைச்சர்களும் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?
போராட்டக் களத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த செவிலியர்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாகக் கைது செய்ததுதான் த.வெ.க. கூறும் ‘மாற்றமா’? இதுதான் அவர்கள் போற்றும் ஜனநாயகமா?
போராடிய செவிலியர்களை நோக்கி பெண் காவல் அதிகாரி ஒருவரே விரலை உயர்த்தி “வேண்டாம் உங்க உயிர் முக்கியம்” என மிரட்டியதுதான் ஜனநாயக வில்லனின் குரலா என்பதைக் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விளக்குவாரா? அல்லது, செவிலியர்களை மிரட்டி குண்டுகட்டாகக் கைது செய்த பெண் காவலர்களின் செயலை “சிங்கப்பெண் in action” என Reels செய்து தனது virtual abuser-கள் மூலம் trend செய்து விளம்பரம் தேடுவாரா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது ‘எக்ஸ்’ பதிவில், “பணி நிரந்தரம், சம ஊதியம், ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராடிவரும் செவிலியர்களை ஒடுக்க முற்படுகிறது தவெக அரசு.
தற்காலிகப் பணியில் உள்ள செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனத் தேர்தல் வாக்குறுதியில் ரீல் விட்டுவிட்டு, இப்போது அதே செவிலியர்களை ஏமாற்றியிருக்கிறது இந்த ரீல் அரசு.
செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
