மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதல்வர் விஜய்யின் தவெக கட்சி சின்னமான விசிலுக்கு நேராக உள்ள பட்டனில் கறுப்பு மை இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளில் இன்று (அக்டோபர் 6) காலை 7 மணி முதல் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட தண்டரை புதுச்சேரி ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்குப்பதிவு திடீரென நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி வாக்காளர்கள் கூறுகையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் விசில் சின்னத்துக்கு நேராக உள்ள பட்டனில் கறுப்பு மை உள்ளது. இது விசில் சின்னத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல இருக்கிறது” என்று தெரிவித்தனர்.
இதற்கு அங்கிருந்த வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. வேறு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்ட பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்க உள்ளது.
இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் தரப்பில் அளிக்கப்படும் விளக்கத்துக்குப் பின்னரே, அந்த கறுப்பு மை எப்படி ஏற்பட்டது என்பது தெரியவரும்.
இதேபோல மதுராந்தகம் புக்கதுறை என்ற வாக்குச் சாவடியில் திடீரென வாக்குப் பதிவு இயந்திரம் பழுதடைந்தது. இதனால் வாக்குப் பதிவு சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தப்பட்டன. வாக்குப் பதிவு இயந்திரம் சரிபார்க்கப்பட்ட பின்னர் தற்போது வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
