மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 6) காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் சத்தியபாமாவும் வெற்றி பெற்றனர். பின்னர் இருவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு முதல்வர் விஜய்யின் தவெகவில் இணைந்தனர். இதனால் காலியான இந்த இரு தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போது இருவரையும் அதே தொகுதிகளில் தவெக வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் இ.பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், சிபிஎம் சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் எஸ்.காயத்ரி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் பி.சத்தியபாமா, திமுக சார்பில் எஸ்.சுகன்யா, அதிமுக சார்பில் கே.பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் எம்.கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.லட்சுமணன் ஆகியோர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
மதுராந்தகம் தொகுதியில் 2,12,639 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிப்பதற்காக 268 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தாராபுரம் தொகுதியில் 2,22,406 வாக்காளர்கள் உள்ள நிலையில், 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவை அமைதியாக நடத்துவதற்காக இரு தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள ஆதார், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்.
இந்த இரு தொகுதிகளிலும் இன்று காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக செயல்படுகின்றனவா என வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பரிசோதிக்கப்பட்டது.
இந்த மாதிரி வாக்குப்பதிவு முடிந்ததைத் தொடர்ந்து, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் விதிமீறல்கள் மற்றும் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க பறக்கும் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்த பின்னர் நடைபெறும் முதலாவது இடைத் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் பெரும் கவனம் பெற்றுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அக்டோபர் 9-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
