தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் சட்டசபை தொகுதிகளில் அக்டோபர் 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் நமது மின்னம்பலம் குழு பயணம் செய்து களநிலவரத்தை கொடுத்து வருகிறோம். தாராபுரத்தில் ஆளும் தவெக, திமுக, அதிமுக ஆகிய 3 கட்சிகளும் எப்படி களத்தில் பணியாற்றுகின்றன? களத்தில் என்ன நிலவரம்? என்பதை மிக விரிவாக நமது மின்னம்பலம் நேற்று வெளியிட்டிருந்தது.
தாராபுரத்தை விட மிக கடுமையான போட்டி நிலவுகிற தொகுதி மதுராந்தகம். இந்த தொகுதியைப் பொறுத்தவரையில், சுமார் தலித் வாக்காளர்கள் 85,414 பேர்; 2-வதாக வன்னியர் வாக்காளர்கள் 77, 796. கிறிஸ்தவ ஆதி திராவிடர் 7,400; ரெட்டியார் 6,700; செட்டியார் 6,400; இதர ஜாதியினர் 27,585 பேர் உள்ளனர்.
கடந்த தேர்தலில் அதிமுகவின் மரகதம் குமரவேல் 69,284, தவெகவின் எழில் கேத்தரின் எழில்மலை 62,090, 3-வது இடத்தை பிடித்த திமுக வேட்பாளர் அமுலு பொன்மலர் 59,838 வாக்குகளையும் பெற்றிருந்தனர். கடந்த தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த திமுக 3-வது இடத்துக்கு போனது அக்கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த இடைத்தேர்தலில், கடந்த தேர்தலில் வென்ற அதிமுகவின் மரகதம் குமரவேல், தவெக வேட்பாளராக களம் காண்கிறார். அதிமுக வேட்பாளராக கணிதா சம்பத், திமுக வேட்பாளராக பரந்தாமன் மோதுகின்றனர்.
கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக இம்முறை தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டது; திமுக கூட்டணியில் இருந்த விசிக, காங்கிரஸ் தவெக கூட்டணியில் இருக்கின்றன- தற்போதைக்கு திமுக கூட்டணியில் தேமுதிக, கொமதேக இருக்கின்றன; திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தனித்து களம் காண்கிறது; சிபிஎம் வேட்பாளராக சுகந்தி போட்டியிடுகிறார்.



மதுராந்தகம் தொகுதியில் நாம் பயணித்த போது 3 கட்சிகளுமே மிக கடுமையாக தேர்தல் பணிகளை செய்து வருவதை பார்க்க முடிந்தது. ஆளும் தவெகவில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாதான் இந்த தொகுதிக்கு பொறுப்பு அமைச்சர். ஆதவ் அர்ஜூனாவின் தேர்தல் வியூக டீம் ஒட்டுமொத்தமாக மதுராந்தகம் தொகுதியில் களத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கிறது. இவர்களுடன் அமைச்சர்கள் ராஜ்குமார், தென்னரசு, வினோத், எம்.எல்.ஏ.க்கள் சோழிங்கநல்லூர் சரவணமூர்த்தி, செங்கல்பட்டு தியாகராஜன், திருப்போரூர் விஜயராஜ் ஆகியோரும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



ஆதவ் அர்ஜூனாவின் டீமைப் பொறுத்தவரைக்கும் ஒரு தொகுதி இடைத்தேர்தலாக இதைப் பார்க்கவில்லை; மாநிலம் முழுவதும் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கு என்ன உழைப்பை தர முடியுமோ அந்த உழைப்பை தந்து கொண்டிருக்கிறது. இந்த டீமின் ‘வியூக’த்தின்படிதான், டீ கடையில் முதல்வர் விஜய் டீ குடித்தது; டிராக்டர் ஓட்டியது என்ற ‘காட்சிகள்’ எல்லாம் அரங்கேறியது.


திமுகவின் மூத்த அமைச்சர் எ.வ.வேலு இந்த தொகுதிக்கு பொறுப்பு அமைச்சர். அவருடன் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் இணைந்து தீவிரமாக சுழன்று சுழன்று தேர்தல் பணியாற்றுகின்றனர். திமுக வேட்பாளர் பரந்தமானின் புயல் வேக தேர்தல் பிரசாரம் அசர வைத்து கொண்டிருக்கிறது.




அதிமுகவில் மூத்த தலைவர் கேபி முனுசாமி பொறுப்பாளர். கடந்த தேர்தலில் வென்ற தொகுதி என்பதால் இந்த முறை எப்படியாவது தொகுதியை தக்க வைத்துவிட வேண்டும் என்பதில் அதிமுகவின் முழுவீச்சில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதிமுகவின் வேட்பாளர் கணிதா சம்பத், ‘இறங்கி’ சம்பவம் செய்யக் கூடியவர்.. ‘எல்லா வேலைகளையும்’ கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு அசத்தக் கூடியவர்.. அத்துடன் சென்னை தொடங்கி அரியலூர் வரையில் செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு, வடசென்னை வடக்கு (கிழக்கு), வடசென்னை வடக்கு (மேற்கு), வடசென்னை தெற்கு (கிழக்கு), வடசென்னை தெற்கு (மேற்கு), தென்சென்னை வடக்கு (கிழக்கு), தென்சென்னை வடக்கு (மேற்கு), தென்சென்னை தெற்கு (கிழக்கு), தென்சென்னை தெற்கு (மேற்கு), திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, கிழக்கு, மத்தியம், கடலூர் கிழக்கு, வடக்கு, தெற்கு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி கிழக்கு, சென்னை புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் வடக்கு, மத்தியம், தெற்கு, கிழக்கு, மேற்கு, கிருஷ்ணகிரி மேற்கு, தர்மபுரி கிழக்கு, மேற்கு, நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் என அதிமுகவின் மாவட்ட நிர்வாகிகளையும் தேர்தல் பணிகளில் இறக்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.



மதுராந்தகம் சட்டசபை தொகுதியின் கள நிலவரத்தில் தலித்துகள்- வன்னியர் வாக்குகள்தான் மிக முக்கியம். கடந்த தேர்தலில் அதிமுக 7194 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது; 2-வது இடம் தவெகவுக்கு.. திமுக 9446 வாக்குகள் வித்தியாசத்தில் 3-வது இடத்துக்கு போனது.

மதுராந்தகம் களத்தில் திமுகவின் மூத்த நிர்வாகிகளிடம் நாம் பேசிய போது, “மதுராந்தகத்தில் ஜெயலலிதா இருந்தவரை தலித் வாக்குகள் அதிமுகவுக்கு அதிகம் கிடைத்து வந்தது; அதன் பிறகு திமுகவுக்கு தலித் வாக்குகள் அதிகமான கிடைத்தன. போன தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக இருந்த போதும், கூடுதலான தலித் வாக்குகள் திமுகவுக்கு கிடைக்கவில்லை; அந்த வாக்குகள் அப்படியே தவெகவுக்கு போய்விட்டன. அதனால் தவெகவால் எளிதாக 2-வது இடத்துக்கு வந்துவிட முடிந்தது. நாங்கள் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டோம்.
போன தேர்தலில் அதிமுக வெல்வதற்கு முக்கியமான காரணம் பாமகவின் சாலிட் ஓட்டுகள்தான். அதிமுக கூட்டணியில் பாமக இருந்ததால் பாமக வாக்குகள் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக கிடைத்தன; அதிமுகவும் வென்றுவிட்டது” என விவரிக்கின்றனர்.
சரி இந்த முறை என்ன நடந்து கொண்டிருக்கிறது என களத்தில் நாம் தவெக, திமுக, அதிமுக, பாமக தரப்பில் பேசிய போது…
மதுராந்தகம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக இருந்திருந்தால் நிச்சயம் பாமகதான் வெல்லும் என்கின்றனர். அதனால் பாமகவை எப்படியாவது அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஆளும் கட்சியான தவெகவுக்கு இருந்தது.
இதனால் முதல்வர் விஜய் உடன் இருப்பவர்கள், அன்புமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆளும் தவெகவைப் பொறுத்தவரை பாமக வாக்குகள், அதிமுகவுக்கு போகாமல் இருக்க வேண்டும் என்றால் ‘தேர்தல் புறக்கணிப்பு’தான் சரியாக இருக்கும் என அந்த பேச்சுவார்த்தையில் எதிர்பார்க்கப்பட்டது.
இதன் பின்னர் பாமக தலைவர் அன்புமணி பல கட்ட ஆலோசனைகளை நடத்தினார். இந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, ‘தேர்தலை பாமக புறக்கணிக்கும்’ என அறிவித்தார் அன்புமணி.
சரி பாமக, தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துவிட்டதாலே தலித் வாக்குகளை மட்டுமே ஜெயித்துவிட முடியும் என நினைக்கவும் இல்லை தவெக ஆதவ் அர்ஜூனா டீம். அவர்களைப் பொறுத்தவரை அதிமுகவுக்கு பாமக ஓட்டு போய்விடக் கூடாது; அந்த பாமக ஓட்டில் கணிசமான அளவுக்கு நமக்கு வர வேண்டும்; பாமக வன்னியர் பிளஸ் தலித் ஓட்டு தவெகவுக்கு கிடைத்தால் வெற்றி நிச்சயம் என்ற வியூகத்துடன் ‘ஆக வேண்டிய’ அனைத்து வேலைகளையும் பார்த்து கொண்டிருக்கிறது.. இதனால் தவெகவினர் ‘அரவணைப்பில்’ பல பகுதிகளில் உள்ளூர் பாமக நிர்வாகிகள் இணைந்து வேலை செய்வதையும் நாமும் பார்க்க முடிந்தது. அதாவது தவெகவைப் பொறுத்தவரையில் வன்னியர் ஓட்டு+ தலித் ஓட்டு இரண்டும் வரும்; வெல்வது உறுதி என மலைபோல நம்பிக் கொண்டிருக்கிறது.
தவெக மட்டும்தான் இப்படி வியூகம் வகுக்குமா? திமுகவும் தனது வித்தையை காட்டிக் கொண்டிருக்கிறது. திமுகவுடன் இப்போது விசிக கூட்டணியில் இல்லை; அந்த கட்சி கூட்டணியில் இருந்தும் கூட திமுகவுக்கு கூடுதலாக தலித் வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் தேமுதிக ஓட்டுகளை மட்டும் நம்ப முடியாது என்பதையும் திமுக தலைமை உணர்ந்திருந்தது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணியை தொடர்பு கொண்டு பேசினார்; விசிகதான் தவெக கூட்டணிக்கு போய்விட்டது. .அதனால் மதுராந்தகத்தில் இணைந்து பணியாற்ற தொடங்கி திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிக்கலாம் என அன்புமணியிடம் பேசினார் ஸ்டாலின். அன்புமணி ‘ஆணித்தரமான’ வாக்குறுதி எதுவும் தரவில்லை என்றாலும் கூட.. களத்தில் பாமக நிர்வாகிகள் பலரையும் திமுகவின் களப் பணிகளில் இணைந்தும் பார்க்க முடிகிறது.
அதிமுகவும் தேர்தல் புறக்கணிப்பை பாமக அறிவித்துவிட்டதாலே கண்டுகொள்ளாமல் இல்லை. அதிமுகவும் தம் பங்குக்கு உள்ளூர் பாமக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ‘அரவணைத்துக் கொண்டிருக்கிறது’.. இதை நாம் களத்தில் பார்த்தோம்.
இப்படித்தான் மதுராந்தகத்தில் பாமக நிர்வாகிகளை தவெக, திமுக, அதிமுக என 3 கட்சிகளுமே ‘பங்கு’ போட்டு களத்தில் இழுத்து வைத்திருக்கின்றன.
இந்த பாமக பேக்டருக்கு அப்பால், தவெகவைப் பொறுத்தவரை முதல்வர் விஜய் பிரசாரம் ஒரு பக்கம் இருந்தாலும் வாக்காளர்களிடம் ஏகப்பட்ட வாக்குறுதிகளை கொடுப்பதை நாம் பார்க்க முடிகிறது; கிராமங்களில் கோவில் கட்டி தருவது; மண்டபங்கள் கட்டி தருவது போன்றவைகளுக்கு ”நிதி” கொடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் விஜய் பிரசாரத்துக்கு எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை என சொல்லப்பட்டாலும் கூட ஆளும் கட்சி என்பதாலும் அடுத்தடுத்த வியூகங்களாலும் களம் தங்களுக்குதான் சாதகம் என்பதில் உறுதியாக இருக்கிறது.
அதிமுகவைப் பொறுத்தவரையில், மரகதம் குமரவேலுக்கு எதிராக தொகுதிகளில் பல இடங்களில் வெளிப்பட்ட ‘துரோகி’ ‘துரோகம் செய்தவர்’ என்ற முழக்கம் பெருமளவு கை கொடுக்கும் என நம்புகிறது. இதே தொகுதியில் 2011-ல் எம்.எல்.ஏ.வாக இருந்த கணிதா சம்பத்தான் அதிமுக வேட்பாளர்.. அவர் தமது பதவி காலத்தில் செய்த திட்டங்களை எல்லாம் இப்போதும் பட்டியல் போட்டு காட்டுகிறார்.. அதே மாதிரி மீண்டும் திட்டங்களை செயல்படுத்துவேன் என நம்பிக்கையோடு வாக்குறுதி தந்து வருகிறார்.
திமுகவின் சீனியரான எ.வ.வேலு தலைமையில் வேட்பாளர் பரந்தாமன் குக்கிராமங்களை கூட விட்டுவிடாமல் பிரசாரம் செய்து வருகிறார். மதுராந்தகம் களத்தில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு எதிராக பரந்தராமன் தொடங்கி வைத்த ‘சூட்கேஸ் குதிரை பேர பிரசாரம்’ தாராபுரத்திலும் எதிரொலிக்கிறது.. பரந்தாமனைப் போலவே திமுகவினரும் தவெகவின் மரகதம் குமரவேலுக்கு எதிராக ‘சூட்கேஸ்களுடன்’ பிரசாரம் செய்வதையும் பார்க்க முடிகிறது.
விஜய் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி, மரகதம் குமரவேலுக்கு எதிரான அதிருப்தி, சிதறிப் போன அதிமுக வாக்குகள் இவை எல்லாமே தமக்கு சாதகமாக அமையும்; நிச்சயம் வெல்லுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் திமுகவினர்.

மொத்தத்தில் மதுராந்தகம் யாருக்கும் எளிதான களமாக இல்லை. மூன்று கட்சிகளும் வெற்றியை உறுதியாக நம்பினாலும், கடைசி நேர வாக்கு நகர்வுகள்தான் முடிவை தீர்மானிக்கும். குறிப்பாக தேர்தலை புறக்கணித்த பாமகவின் வாக்குகள், தலித் மக்கள் அதிகம் ஆதரிக்கும் தவெக பக்கம் போகுமா? போகாதா? என்பதை பொறுத்தே மதுராந்தகம் தொகுதி தேர்தல் முடிவுகள் இருக்கும்.
