தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்டப் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.
இதன் காரணமாக அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ சத்யபாமாவை ஆதரித்துத் தவெக தலைவர் விஜய் இன்று ‘ரோடு ஷோ’ (Road Show) மூலம் வாக்கு சேகரித்து வருகிறார்.
அந்த வகையில், தாராபுரம் – கரூர் சாலையில் உள்ள வீரச்சிமங்கலம் பகுதி வழியாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்பகுதியில் தவெக தலைவர் விஜய்யின் ‘ரோடு ஷோ’வும் நடைபெற இருந்தது.
அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா அந்த வழியாகச் சென்றபோது சாலையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், நாம் தமிழர் கட்சியினரால் நகர முடியாத சூழல் நிலவியது. இதைத் தொடர்ந்து இருதரப்பினரும் மாறி மாறித் தங்கள் கட்சியின் பெயர்களைக் கூறி கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.
அப்போது பரப்புரை வாகனத்தில் ஏறி நின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, தன் கட்சியின் கொடியை எடுத்துச் சுற்றி வந்தார். அப்போது தவெகவினர் தொடர்ச்சியாக “டிவிகே… டிவிகே…” என முழக்கமிட்டனர். இதை காரணம் காட்டி காவல்துறையினர் கார்த்திகாவை முதல்வர் சென்று வந்த பிறகு பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு தெரிவித்துள்ளனர். ஆனால் அனுமதி பெற்ற நிலையில் பிரச்சாரம் செய்ய தனக்கும் உரிமை உள்ளது என்று வேட்பாளர் கார்த்திகா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்துக் காவல்துறையினர் போக்குவரத்தைச் சரிசெய்து, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோரின் வாகனங்கள் அங்கிருந்து செல்லும் வகையில் வழியை ஏற்படுத்தி கொடுத்தனர். இருப்பினும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படும் நிலையில், நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்து அழைத்துச் செல்லும் போது நாதக தொண்டர்கள் தமிழ்த்தாய் வாழ்க.. தலைவர் பிரபாகரன் வாழ்க என முழக்கமிட்டபடி சென்றனர்.
இந்நிலையில் ”முதல்வர் மட்டுமே இன்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு காவல்துறை வேட்பாளர் காத்திகாவை கைது செய்துள்ளது” என நாம்தமிழர் கட்சியின் ஐடி விங் குற்றம் சாட்டி உள்ளது.
