“போனால் போகட்டும் போடா.. ” விஜய் மீது நாஞ்சில் சம்பத் அதிருப்தி?

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளராகப் பணியாற்றி வரும் மூத்த அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், போனால் போகட்டும் போடா என தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நாஞ்சில் சம்பத் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “போனால் போகட்டும் போடா.. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா.. என்னுடைய பகலை யாரும் இருட்டாக்க முடியாது.. என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது.. என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது..” என வேதனை கலந்த வரிகளைப் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

முன்னதாக மதிமுக, அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளில் இணைந்து செயல்பட்ட எழுத்தாளரும், சிறந்த மேடைப் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் தலைவர் விஜய் முன்னிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதிகட்சியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் ‘பரப்புரைச் செயலாளர்’ என்ற முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டது. கட்சியில் இணைந்த போது என்னை பார்த்ததும் விஜய் “நான் உங்கள் ஃபேன் தெரியுமா?”என்றார், நான் மெய்சிலிர்த்து போனேன் என்று நெகிழ்ச்சியை நாஞ்சில் சம்பத் வெளிப்படுத்தி இருந்தார்.

தவெக சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ந்து பங்கேற்று வந்த நாஞ்சில் சம்பத்திற்கு தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு தவெக சார்பில் அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

தவெகவில் அதிருப்தியா?

இந்நிலையில் திடீரென நாஞ்சில் சம்பத் இத்தகைய விரக்தி நிறைந்த வரிகளைப் பதிவிட்டிருப்பது தவெக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அல்லது உட்கட்சிப் பூசல் காரணமாகவே அவர் இத்தகைய பதிவை வெளியிட்டுள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் நாஞ்சில் சம்பத் தவெக தலைமை மீதும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், இது குறித்து நாஞ்சில் சம்பத்தோ அல்லது தவெக தலைமையோ இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share