VIDEO: தாராபுரத்தில் அதிமுக மா.செ கைது- களமிறங்கிய டிடிவி தினகரன்… போலீஸ் ஸ்டேஷனுக்குள் ராக்கெட் விட்ட தொண்டர்கள்!

Published On:

| By Mathi

Dharapuram AIADMK

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரூ.70 லட்சம் பணம் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் அதிமுக நிர்வாகிகளிடம் போலீசார் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் சட்டசபை தொகுதிக்கு நாளை மறுநாள் (அக்டோபர் 6) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.70 லட்சம் பணம் கொண்டு செல்லப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக சுப்பிரமணி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் செல்வகுமரன் கூறியதன் பேரில் பணத்தை கொண்டு வந்ததாக அவர் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து செல்வகுமரனை தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். தாராபுரம் நகர செயலாளர் சி.ஆர்.ராஜேந்திரனும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

இந்த தகவல் பரவியதும் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் தாராபுரம் காவல் நிலையம் முன்பு திரண்டனர். செல்வகுமரன் உள்ளிட்டோரை விடுவிக்க வலியுறுத்தி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அவர்கள், தாராபுரம் – கரூர் சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் காவல் நிலையத்திற்கு வந்து போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்த கைது நடவடிக்கைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

களமிறங்கிய டிடிவி தினகரன்

இதற்கிடையே தாராபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் இருந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் இந்த தகவல் தெரியவந்தது. உடனடியாக தாராபுரம் காவல் நிலையத்திற்கு சென்ற டிடிவி தினகரன், அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து செல்வகுமரன் மற்றும் ராஜேந்திரனை போலீசார் விடுவித்தனர். அப்போது அதிமுகவினர் காவல்நிலையம் முன்பாக பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.

அப்போது அதிமுகவினர் ஏவிய சில ராக்கெட்டுகள், காவல்நிலையத்துக்குள்ளும் சீறிப் பாய்ந்தன.

காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த செல்வகுமரனை தனது பிரசார வாகனத்தில் ஏற்றிக்கொண்ட டிடிவி தினகரன், அங்கு திரண்டிருந்த அதிமுக தொண்டர்களை பார்த்து நன்றி தெரிவிக்கும்படியும் அவரிடம் கூறினார். பின்னர் விடுவிக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகளை தனது வாகனத்திலேயே டிடிவி தினகரன் அழைத்து சென்றார். இந்த சம்பவங்களால் தாராபுரம் தொகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share