சென்னை மெரினா கடற்கரையில் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க 1985-ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் 7 பேர் உயிரிழந்த வரலாற்றை சுட்டிக்காட்டி, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கும் விவகாரத்தில் முதல்வர் விஜய் அரசுக்கு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

1985-ல் முதல்வர் எம்ஜிஆர் தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது.. நவம்பர் 4-ந் தேதி .. அப்போது மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டம் என்ற பெயரில், காலம் காலமாக அங்கு மீன்பிடித் தொழில் செய்து வந்த திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம், அயோத்திக்குப்பம், நடுக்குப்பம் ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த மக்களின் கட்டுமரங்கள் மற்றும் பல்வேறு வகையான மீன்பிடி வலைகள் அகற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் நூற்றுக்கணக்கில் திரண்டு, நள்ளிரவில் மாநகராட்சி லாரிகள் மூலம் கட்டுமரங்களையும் வலைகளையும் அப்புறப்படுத்தினர்.

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பறிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை கண்டித்து நவம்பர் 4-ம் தேதி முதலே மீனவர்கள் தொடர் போராட்டத்தில் இறங்கினர்.
சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள், மீனவ இயக்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம்
நவம்பர் 5-ம் தேதி கடற்கரை சாலையில் இருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் திரண்டனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பங்களுடன் பங்கேற்று மிகப்பெரிய உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.
அகற்றப்பட்ட கட்டுமரங்களையும் வலைகளையும் திருப்பித் தர வேண்டும்; காலம் காலமாக மீன்பிடித் தொழில் செய்து வந்த அதே இடத்தில் தொடர்ந்து தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கையாக இருந்தது.
நவம்பர் 6-ம் தேதி மெரினா காந்தி சிலை அருகே கொட்டும் மழையிலும் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் போராட்டத்தில் பங்கேற்று மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான கலைஞரும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
முதல் உயிரிழப்பு அன்னம்மாள்
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பெண்களில் நடுக்குப்பத்தை சேர்ந்த அன்னம்மாள் என்பவரும் ஒருவர். கொட்டும் மழையில் நடைபெற்ற போராட்டத்தில் அன்னம்மாள் உயிரிழந்தார். மெரினா மீனவர்களின் பாரம்பரிய உரிமையை பாதுகாக்க நடைபெற்ற அந்த போராட்டத்தின் முதல் உயிரிழப்பு அன்னம்மாள்.
அன்னம்மாள் உயிரிழந்த பிறகாவது அரசு கட்டுமரங்களையும் வலைகளையும் திருப்பித் தரும் என மீனவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது.
உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்
அப்போது அகில இந்திய மீனவர் சங்க தலைவராக இருந்த கே.சுப்பிரமணியம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். தனது கடிதத்தையே ரிட் மனுவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். அந்த கடிதத்தை தலைமை நீதிபதி ரிட் மனுவாக ஏற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
இந்த வழக்கின் விசாரணையை நேரில் பார்ப்பதற்காக ஏராளமான மீனவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சென்றனர். வழக்கு விசாரணைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதால் மீனவர்கள் உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் உயர்நீதிமன்றமே முடங்கிப் போகும் அளவுக்கு பதற்றம் ஏற்பட்டது.
தலைமை செயலகம் முன்பு தீக்குளிப்பு
உயர்நீதிமன்ற போராட்டத்தை முடித்துவிட்டு மீனவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அயோத்திகுப்பத்தை சேர்ந்த கோதண்டராமன் என்ற மீனவர் தலைமை செயலகம் முன்பு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஓரிரு நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் சென்னையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, சாதிக் பாட்சா உள்ளிட்டோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

ஒரு மாத கடற்கரை சாலை மீனவர்கள் போராட்டம்
2 உயிரிழப்புகளுக்குப் பிறகும் மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஒருபுறம் மெரினாவில் தொடர் போராட்டங்கள், மற்றொரு புறம் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. சுமார் ஒரு மாத காலம் சென்னை கடற்கரை சாலை மீனவர்களின் போராட்ட களமாகவே இருந்தது.
அயோத்திகுப்பம், நடுக்குப்பம், மாட்டாங்குப்பம், நொச்சிக்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த பலர் போராட்டத்தை முன்னின்று நடத்தினர்.

டிசம்பர் 4 துப்பாக்கிச் சூடு- பலி 7 ஆக உயர்வு
இந்த நிலையில்தான் 1985 டிசம்பர் 4-ம் தேதி போராட்டம் மிகப்பெரிய மோதலாக மாறியது. மீனவர்களை கடற்கரையில் இருந்து அகற்ற முடியாத நிலையில், நடுக்குப்பம், அயோத்திகுப்பம் பகுதிகளில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இதில்
- மனோகர்
- துலுக்கானம்
- சேகர்
- குள்ள சேகர்
- நொச்சிக்குப்பத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை ஆகிய 5 மீனவர்கள் உயிரிழந்தனர்.
ஏற்கனவே அன்னம்மாள் மற்றும் கோதண்டராமன் ஆகிய இருவர் உயிரிழந்திருந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் மேலும் 5 பேர் உயிரிழந்ததால் மெரினா மீனவர் போராட்டத்தின் மொத்த உயிரிழப்பு 7 ஆக உயர்ந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவு
5 மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததை தொடர்ந்து உச்சநீதிமன்றம்,
மெரினா கடற்கரையில் இருந்து காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சியால் அகற்றப்பட்ட கட்டுமரங்களையும் வலைகளையும் உடனடியாக மீண்டும் அதே கடற்கரைக்கு கொண்டு வந்து வைக்க வேண்டும்; பாரம்பரிய மீனவர்கள் எந்த தடையும் இல்லாமல் அதே இடத்தில் மீன்பிடி தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் அப்போது மீனவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.


இன்றைக்கும் சென்னை மெரினா கடற்கரையை ஒட்டி ஐஸ் ஹவுஸ் பகுதியில் அயோத்திகுப்பத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவர்களின் தியாகத்தை நினைவூட்டும் ‘நினைவு சின்னம்’ அமைந்துள்ளது. இன்றைக்கும் மீனவர்கள் இந்த ரத்தத்தில் உறைந்த தியாக பெருவரலாற்றை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
தற்போது பட்டினப்பாக்கத்தில் மீண்டும் போராட்டம்
1985 மெரினா போராட்டத்துக்கு பிறகும் சென்னை கடற்கரையோர மீனவர்கள் தங்களது வாழ்வாதாரம் மற்றும் பாரம்பரிய மீன்பிடி உரிமை தொடர்பாக பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.
2002-ம் ஆண்டு நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரையிலான மீனவ கிராமங்களை அகற்றும் முயற்சிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. பின்னர் கலங்கரை விளக்கம் பகுதியில் இருந்து கடற்கரையோரமாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டத்துக்கு எதிராக நொச்சிக்குப்பம் முதல் கொட்டிவாக்கம் வரையிலான மீனவ கிராமங்கள் ஒன்றிணைந்து போராடின.
2014-15 காலகட்டத்தில் மெரினா லூப் சாலை திட்டம் தொடர்பாகவும் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில்தான் தற்போது பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கும் திட்டத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமை செயலகம் அமைப்பதற்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால், காலம் காலமாக அப்பகுதியை பயன்படுத்தி வரும் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாரம்பரிய உரிமையும் பாதிக்கப்படும் என்பது அவர்களது குற்றச்சாட்டு.
இதுதொடர்பான அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் குடும்பங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1985-ஐ நினைவுபடுத்தி விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்
இந்த போராட்டத்தில்தான் 1985 மெரினா போராட்டத்தையும் அதில் ஏற்பட்ட 7 உயிரிழப்புகளையும் மீனவர்கள் மீண்டும் நினைவுபடுத்தியுள்ளனர்.
அன்றைக்கு 7 உயிர்களை இழந்த பிறகே மெரினாவில் தங்களது பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டெடுக்க முடிந்தது என்பதை சுட்டிக்காட்டும் மீனவர்கள், அதேபோன்ற சூழலை மீண்டும் உருவாக்க வேண்டாம் என முதல்வர் விஜய் அரசை தற்போது எச்சரித்துள்ளனர்.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைப்பது தொடர்பான அரசாணையை திரும்பப் பெற தமிழக அரசுக்கு காலக்கெடு விதித்துள்ள மீனவர்கள், இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவ கிராமங்களை ஒருங்கிணைத்து போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என தெரிவித்துள்ளனர்.
“1985-ல் எங்களுடைய உரிமைக்காக 7 உயிர்களை இழந்தோம். அந்த வரலாற்றை அரசு மறந்துவிடக் கூடாது. மீண்டும் 1985-ம் ஆண்டு போன்ற ஒரு சூழலை உருவாக்க வேண்டாம்” என்பதுதான் பட்டினப்பாக்கம் மீனவர்கள் முதல்வர் விஜய் அரசுக்கு முன்வைக்கும் எச்சரிக்கை.
