சட்டவிரோதமாக ஏரியில் மண் அள்ளியதாக வழக்கு : ரத்து செய்ய கோரி எ.வ.வேலு மனு!

Published On:

| By Kavi

ஏரியில் சட்டவிரோதமாக மண் அள்ளியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

2025 டிசம்பர் 14ஆம் தேதி நடந்த திமுகவின் இளைஞரணி மாநாட்டுக்காக, திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி ஏரியில் அனுமதிபெற்ற அளவைத் தாண்டி, பொக்லைன் (Hitachi) இயந்திரங்கள் மூலம் 20 முதல் 30 அடி ஆழத்திற்கு இரவு பகலாக கனிம வளங்கள் அள்ளப்பட்டன என்றும் இதனால் அரசுக்கு 8 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்தது.

ADVERTISEMENT

இந்த புகாரின் பேரில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நமது மின்னம்பலத்தில், ‘திருவண்ணாமலையில் ரூ.8 கோடி மணல் முறைகேடு.. எ.வ.வேலு மீது குற்றச்சாட்டு- உண்மை நிலவரம் என்ன? களத்தில் இருந்து ரிப்போர்ட்!’ என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

ADVERTISEMENT

இந்த சூழலில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கை நகல் இல்லாமல் இந்த மனுவை விசாரிக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டு தாக்கல் செய்த மனுவை விரைவில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்றும் அவர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த மனுக்களை இன்று (அக்டோபர் 3) விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், எஃப் ஐ ஆர் இல்லாமல், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை எண்ணிட்டு விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share