திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி ஏரியில் ரூ 8 கோடி அளவில் மண்ணை சட்டவிரோதமாக அள்ளியதாகவும் அந்த மண்ணை கொட்டிதான் நிலத்தை சமன்படுத்தி 2025-ல் திமுக இளைஞர் அணி மாநாடு நடத்தியதாகவும் முன்னாள் அமைச்சர் எ வ வேலு, அவர் மகன் குமரன் மற்றும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மகன் குமரன் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரரிடம் இருந்து 124 ஏக்கர் நிலத்தை எத்தனை கோடிக்கு வாங்கினார்? எப்படி வாங்கினார்? என்கிற கேள்விகளும் முன்வைக்கப்பட்டன.

இது தொடர்பாக விசாரணை நடத்த திருவண்ணாமலை மாவட்டத்துக்கு நமது மின்னம்பலம் டீம் சென்றது.
இந்த கள ஆய்வின் போது, “திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடி ஏரியில் அனுமதிபெற்ற அளவைத் தாண்டி, பொக்லைன் (Hitachi) இயந்திரங்கள் மூலம் 20 முதல் 30 அடி ஆழத்திற்கு இரவு பகலாக கனிம வளங்கள் அள்ளப்பட்டன; இந்த மண்ணை கொண்டுதான் 2025 டிசம்பர் 14-ந் தேதி நடந்த திமுகவின் இளைஞரணி மாநாட்டுக்கான நிலம் சமன்படுத்தப்பட்டது” என்கிற குற்றச்சாட்டு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் விசாரித்தோம்.
அப்போது, ”தமிழக அரசின் வண்டல் மண் திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களின் மேம்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் வண்டல் மண் திட்டத்தின் கீழ் (Tamil Nadu Minor Mineral Concession Rules, 1959 – Rule 12(2)), மலப்பாம்பாடி மற்றும் சுற்றியுள்ள சு.பள்ளியம்பாட்டு ஏரியில் அரசு அனுமதியுடன், அரசு அனுமதித்த அளவில் மட்டுமே மண் எடுத்தார்கள்.
மலப்பாம்பாடி, பள்ளியம்பட்டு கிராமங்களைச் சேர்ந்த விவசாய நிலங்களின் மேம்பாட்டிற்காக, நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுக்க அப்பகுதி விவசாயிகளுக்கு அரசு முறைப்படி அனுமதி வழங்கியுள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நபருக்கான தனிப்பட்ட அனுமதி அல்ல; ஏராளமான விவசாயிகளுக்குப் பொதுவான திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அனுமதியாகும்.

இதனடிப்படையில்தான் 31.10.2025 மற்றும் 24.11.2025 ஆகிய தேதிகளில் எ.வ.குமரன் தரப்பிற்கும் (அருணை பிராடக்ட்ஸ் மற்றும் சர்வீசஸ் நிறுவனம் சார்பாக) வட்டாட்சியர் மூலம் அனுமதி வழங்கப்பட்டது.



இதன் பிறகு, இதே ஏரியில் வண்டல் மண் எடுக்க,
13.07.2026 அன்று முனுசாமி என்பவருக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
15.07.2026 அன்று ராஜீவ் காந்தி என்பவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதே SPallaiyampattu ஏரியில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கூட கடந்த 12.08.2026-ல் பாலகிருஷ்ணன் என்பவருக்கு களிமண்/ வண்டல் மண் எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.குமரன் நிர்வாக இயக்குநராக உள்ள ‘அருணை பிராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ்’ (Arunai Products and Services Pvt Ltd) நிறுவனத்திற்குச் சொந்தமான விவசாய நிலங்களின் மேம்பாட்டிற்காக, வருவாய்த் துறை மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் முறைப்படி விண்ணப்பிக்கப்பட்டு வண்டல் மண் எடுக்க அனுமதி பெறப்பட்டது. வட்டாட்சியர் மோகனராமன் அவர்களால் 31.10.2025 மற்றும் 24.11.2025 ஆகிய தேதிகளில் வண்டல் மண் எடுப்பதற்கான செயல்முறை ஆணைகள் வழங்கப்பட்டிருந்தன.
அருணை நிறுவனத்திற்குச் சொந்தமான பல்வேறு விவசாய நிலங்களின் மேம்பாட்டிற்கும், நிலச் சீர்திருத்தப் பணிகளுக்கும் மட்டுமே இந்த வண்டல் மண் பயன்படுத்தப்பட்டது” என அதிகாரிகள் விளக்கம் தந்தனர். இந்த வண்டல் மண் அள்ளுவதற்கு யார் யாருக்கு எப்போது எல்லாம் அனுமதி தரப்பட்டது என்கிற ஆணைகளையும் நம்மிடம் காட்டினர்.
அத்துடன், ”எ.வ.வேலு தரப்பு மீது நடவடிக்கை எடுக்க புகார் தர வேண்டும் என சென்னையில் இருந்து நெருக்கடி தரப்படுகிறது” என்றும் நம்மிடம் பகிர்ந்தனர்.



இதனையடுத்து இந்த ஏரி வண்டல் மண்ணை வைத்துதான் 2025-ல் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்ற ‘கலைஞர் திடல்” சமன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து திமுக நிர்வாகிகளிடம் கேட்ட போது, ”2025 டிசம்பரில் திமுக இளைஞரணி மாநாட்டிற்காகத் தேர்வு செய்யப்பட்ட நிலம் இயற்கையாகவே சரிசமமாக (Flat terrain) இருந்த காரணத்தினால் மட்டுமே தேர்வு செய்யப்பட்டதே தவிர, மாநாட்டிற்காக ஏரியிலிருந்து எந்தவொரு வண்டல் மண்ணோ அல்லது முரம்பு மண்ணோ பயன்படுத்தப்படவில்லை. மாநாட்டிற்காக ஏரியிலிருந்து எந்தவொரு வண்டல் மண்ணோ அல்லது முரம்பு மண்ணோ ஒரு லோடு கூட எடுக்கப்படவில்லை. அதற்கான எந்த ஒரு தேவையும் அந்த நிலத்துக்கு ஏற்படவில்லை.
விவசாயப் பணிகளுக்காக எ.வ.குமரனின் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தின் மற்றொரு பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த வாகனங்களை (Hitachi, Lorries) புகைப்படம் எடுத்து, மாநாட்டுத் திடலுக்கு மண் அள்ளியதாகத் தவறாகச் சித்தரித்து வதந்தி பரப்பப்படுகிறது.


இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும் திருவண்ணாமலை மாநகராட்சி துணை மேயருமான சு.ராஜாங்கம் கடந்த 04.07.2026-ல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடத்தில் விரிவான விளக்கம் கொடுத்துள்ளனர்.
அதேபோல, அரசு முன்னாள் சிறப்பு வழக்கறிஞர் ஆர்.எஸ். கண்ணதாசன் 04.07.2026 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடத்தில் இது தொடர்பாக விளக்கமும் கொடுத்துள்ளார் “என்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, “ மாநாட்டிற்கு வருபவர்களின் வசதிக்காகவும் போக்குவரத்துக்காகவும், நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமில்லாத ஏரிப்படுகை மற்றும் ஏரிக்கரையில் முறையான அனுமதியின்றி சட்டவிரோதமாக அணுகுமுறை சாலை (Approach Road) அமைக்கப்பட்டுள்ளதாக” கூறப்படும் இடத்தை பார்வையிட்டோம்.
இந்த சாலை அமைக்கப்பட்டது தொடர்பாக அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் நாம் விசாரித்த போது, “ லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட திமுக இளைஞரணி மாநில அளவிலான மாநாடு என்பதால், பொதுமக்களுக்கும் பொதுப்போக்குவரத்திற்கும் எந்தவித இடையூறும் ஏற்படாத வகையிலும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் துறைசார் நெறிமுறைகளின் அடிப்படையில்தான் தற்காலிகப் பாதைகள் மற்றும் வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.
காவல்துறை மற்றும் அரசுத் துறைகளின் பாதுகாப்பு நிபந்தனைகள் மற்றும் அனுமதிகளின்படியே (திருவண்ணாமலை நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளரின் கடிதம் நாள்: 02.12.2025) மாநாட்டுக்கான அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன; பொதுச் சொத்துக்கள் எவையும் ஆக்கிரமிக்கப்படவில்லை.

அதாவது
காவல்துறையின் அனுமதி கடிதத்தில்,
லட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளும் மாநில அளவிலான மாநாடு என்பதால், பொதுமக்களுக்கும் பொதுப் போக்குவரத்துக்கும் எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் நிகழ்வை நடத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு வருகை தரும் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் வந்து செல்லும் வழித்தடங்கள், அவற்றுக்கான உத்தேச எண்ணிக்கை மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்கான போதிய இடங்களை (Parking spaces) முன்கூட்டியே திட்டமிட்டு ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில்தான் ஏரிக்கரையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது” என்று விளக்கம் தருகின்றனர்.

அடுத்ததாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.குமரன் பெயரில் உள்ள நிலம் சர்ச்சைக்குரிய ஒரு ஒப்பந்ததாரரிடமிருந்து வாங்கப்பட்டதில் முறைகேடுகள் உள்ளதாகவும், இந்நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.200 கோடி எனவும் குற்றம்சாட்டப்படுவது உண்மையா? என திருவண்ணாமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் விசாரித்தோம்.
அப்போது எ.வ.வேலுவின் மகன் எ.வ.குமரன் வாங்கிய நிலத்தின் ‘பூர்வோத்திரம்’ என்ன என்பதை விலாவரியாகவே நம்மிடம் விவரித்தனர்.
அதாவது, “எ.வ.குமரன் வாங்கிய நிலம் “ரூ.200 கோடி மதிப்புடைய நிலம்” என்பது முற்றிலும் கற்பனையானது மற்றும் ஆதாரமற்றது.
ஏனெனில் அருணாச்சலம் சுகர் மில்ஸ் என்ற நிறுவனம் தனது வணிகத் தேவைகளுக்காகவும், ஆலை இயக்கத்திற்காகவும் IREDA, சுந்தரம் பைனான்ஸ் போன்ற நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கடன் வாங்கியிருந்தது. ஆலை நிர்வாகம் அந்தப் பெருமளவிலான கடன்களுக்கான தவணைகளையும் வட்டியையும் முறையாகத் திருப்பிச் செலுத்தத் தவறியது.
சர்க்கரை ஆலை நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கிய காலகட்டத்திலேயே கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்துத் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கத் தொடங்கியது. இதனால் ஆலையைத் தொடர்ந்து இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பை விடக் கடன்களின் சுமை அதிகமாக இருந்ததால், நிறுவனத்திற்குப் பணம்கொடுக்க வேண்டிய கடன் வழங்குநர்கள் (Creditors) மற்றும் நிதி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் C.P. No. 229 of 2004 என்ற வழக்கைத் தொடர்ந்தனர்.

அதாவது சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘அருணாச்சலம் சுகர் மில்ஸ் லிமிடெட்’ (Arunachala Sugar Mills Ltd.) – நிறுவனத்தை மூடி, அதன் சொத்துக்களை விற்று கடன் தீர்க்கக் கோரி நிறுவன திவாலா வழக்கு (Company Winding-up Petition) தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 22.07.2005 அன்று பிறப்பித்த உத்தரவின்படி, திவாலான இந்நிறுவனத்தின் சொத்துக்களைப் பாதுகாத்து நிர்வகிக்கவும், பின்னர் அவற்றை நீதிமன்ற மேற்பார்வையில் பொது ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையைக் கடன்காரர்களுக்கு வழங்கவும் அதிகாரப்பூர்வ அதிகாரி Official Liquidator ஒருவரை நியமித்தது.
இதன் தொடர்ச்சியாக, உயர்நீதிமன்றத்தின் நேரடி அனுமதி மற்றும் மேற்பார்வையின் கீழ் C.A. No. 516 of 2022 & 54 of 2023 ஆகிய மனுக்கள் மூலம் இந்தச் சொத்துக்கள் பொது ஏலத்திற்கு விடப்பட்டன.
இந்த ஏலத்தில்தான் ‘ரிஷி எண்டர்பிரைசஸ்’ (Rishi Enterprises) நிறுவனம் முறையாகப் பங்கேற்று ஏலம் எடுத்தது. இந்நிறுவனம் அதிகபட்ச ஏலத் தொகையைக் கோரி திருவண்ணாமலை மலப்பாம்பாடி மற்றும் பள்ளியம்பட்டு கிராமங்களிலுள்ள சுமாா் 124.56 ஏக்கர் நிலப்பரப்பை ரூ.38.50 கோடிக்கு முறையாக ஏலம் எடுத்தது. அதனைத் தொடர்ந்து, அந்த நிலத்திற்கான முழு ஏலத்தொகையையும் செலுத்தி, உயர்நீதிமன்றத்தின் முறையான உத்தரவின்படி (C.A. No. 358 of 2023) அதிகாரப்பூர்வ கலைப்பாளரிடமிருந்து கிரயச் சான்றிதழைப் (Sale Certificate) பெற்று, திருவண்ணாமலை இணை சார்பதிவாளர்-2 அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்து (ஆவண எண். 2914/2024) அந்தச் சொத்தை முழு சுவாதீனத்தில் வைத்திருந்தது.
பின்னர், ஓராண்டு கழித்து 2024 ஜூன் மாதத்தில், இந்நிறுவனம் அந்த நிலத்தை எ.வ.குமரனின் ‘அருணை பிராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ்’ நிறுவனத்திற்கு ரூ.46 கோடிக்குக் கிரையம் (விற்பனை) செய்து தந்துள்ளது.
மொத்த கிரயத் தொகை: ரூ. 46,00,00,000/- (நாற்பத்தாறு கோடி ரூபாய்).
பரிவர்த்தனை செய்யப்பட்ட நாள்: 12.06.2024
அருணை பிராடக்ட்ஸ் நிறுவனம் சார்பில், வாங்குபவரின் வங்கிக் கணக்கிலிருந்து கிரயம் கொடுப்பவர்களின் வங்கிக் கணக்கிற்கு
RTGS No. KVBLR52024061200512148 என்ற எண்ணின்படி ரூபாய் 45,00,00,000/- (நாற்பத்தி ஐந்து கோடி ரூபாய்) நேரடியாக மாற்றப்பட்டுள்ளது.
மீதமுள்ள தொகைக்காக கரூர் வைசியா வங்கி (KVB) காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன:
காசோலை எண். 001973 (நாள்: 12.06.2024) – ரூ. 50,00,000/- (ஐம்பது இலட்சம் ரூபாய்).
காசோலை எண். 001974 (நாள்: 12.06.2024) – ரூ. 50,00,000/- (ஐம்பது இலட்சம் ரூபாய்)
அருணை பிராடக்ட்ஸ் மற்றும் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது வணிக விரிவாக்கம் மற்றும் சொத்து வாங்கும் தேவைகளுக்காக நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளது. இந் நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளின்படி -Balance Sheet படி,
ஹிந்துஜா லேலேண்ட் ஃபைனான்ஸ் லிமிடெட் (Hinduja Leyland Finance Ltd)
நிறுவனத்திடமிருந்து முறைப்படி கடன் பெறப்பட்டு இந்த நிதி பெறப்பட்டுள்ளது.
நிலம் வாங்குவதற்காக அரசு முத்திரைத்தீர்வு கட்டணமாக ரூ. 3,14,75,000/- (மூன்று கோடி பதினான்கு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபாய்) செலுத்தப்பட்டுள்ளது
சார்பதிவகத்தில் முறையான பதிவுக்காக ரூ. 99,06,110/- கட்டணம் செலுத்தப்பட்டு, திருவண்ணாமலை இணை சார்பதிவகம்-2 இல் ஆவண எண். 8489/2024 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, இந்த ரூ. 46 கோடி பரிவர்த்தனையானது எந்தவித ரொக்கப் பரிவர்த்தனையும் இல்லாமல், முழுமையாக வங்கிப் பரிமாற்றங்கள், காசோலைகள் மற்றும் முறைசார்ந்த நிதி நிறுவனக் கடன்கள் மூலம் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க ஆவணங்களில் உள்ள விவரங்கள்தான். ரூ200 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக எ.வ.குமரன் வாங்கினார் என்பது அப்பட்டமான, உள்நோக்கத்துடனான பொய். இதற்கு நீதிமன்ற நடவடிக்கைகள், வங்கி கணக்கு ஆவணங்கள் ஆகியவை சான்றுகளாக இருக்கின்றன. இவை அனைத்தும் சட்டப்பூர்வமான ஆவணங்கள் என்பது வெளிப்படையாக தெள்ளத் தெளிவாக குழப்பங்கள் இல்லாமல் பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ளன.
சுமார் 20 ஆண்டுகளாக இயங்கி வரும் Arunai Products and Services நிறுவனம், ரூ.50 கோடி கடன் பெற்று இந்த இடத்தை ஏற்கனவே இருந்த விலையைவிட சுமார் 20 சதவீதம் அதிகமாகக் கொடுத்து வாங்கியுள்ளது என்பதுதான் நிதர்சனமான ஆவணங்களின் அடிப்படையிலான உண்மை” என இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களை சுட்டிக்காட்டி விவரித்தனர்.
நமது மின்னம்பலம் டீம் நடத்திய விசாரணையில்
மலப்பாம்பாடி ஏரியில் எ.வ.வேலு மகன் எ.வ.குமரன் மட்டுமே வண்டல் மண் அள்ளினார் என்பது தவறான தகவல்; எ.வ.குமரனைப் போல பலருக்கும் முன்னர் அனுமதி தரப்பட்டது; இப்போதும் பலரும் வண்டல் மண்ணை அனுமதி பெற்று அள்ளி வருகின்றனர் என்பது தெளிவானது.
அதேபோல 2025 டிசம்பரில் நடந்த திமுக இளைஞரணி மாநாடு நடந்த கலைஞர் திடம், இந்த வண்டல் மண் கொண்டுதான் சமன் செய்யப்பட்டது என்பதும் தவறான தகவல்; ஏனெனில் அந்த நிலம் ஏற்கனவே சமன்படுத்தப்பட்ட இடம் ஆகும்.
அத்துடன், திமுக இளைஞரணி மாநாட்டுக்கான அணுகுசாலை என்பது தனிநபர் ஆக்கிரமிப்பு அல்ல; அது மாநாட்டுக்காக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு காவல்துறையினர் வழிகாட்டுதல்படி அமைக்கப்பட்டது என்பதும் தெளிவாகிறது.
இறுதியாக, எ.வ.வேலு மகன் எ.வ.குமரன், அருணாச்சலம் சுகர் மில்ஸை வாங்கியது முழுமையாக சட்டப்பூர்வமானது; நிலத்தின் மதிப்பை விட ‘கூடுதல் தொகை’க்கே அந்த இடம் வாங்கப்பட்டுள்ளது என்பதும் ஆவணங்களின் மூலமாக தெளிவாக தெரிய வருகிறது.
