“நம்பி போனவர்கள் நட்டாற்றில் நிற்கப்போகிறார்கள்” – தவெக அரசை விளாசிய ஸ்டாலின்

Published On:

| By Kavi

முதல்வர் விஜய் டெல்லியில் யாருடன் ரகசிய கூட்டணியில் இருக்கிறார் என விரைவில் தெரிய வரும் என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மதுராந்தகத்தில் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இன்று (அக்டோபர் 3) மாலை திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின், திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

ADVERTISEMENT

இந்த கூட்டத்தில் பேசிய அவர், ”இந்தத் தேர்தல் வழக்கமான தேர்தல் இல்லை. தவிர்க்க முடியாத காரணத்தால் நடக்கிற தேர்தலும் இல்லை. தவிர்த்திருக்க வேண்டிய தேர்தல். உங்கள் மேல் திணிக்கப்பட்ட தேர்தல். நான்கு மாதங்களுக்கு முன்பு நீங்கள் ஒருவரை வெற்றி பெற வைத்தீர்கள். மெஜாரிட்டி இல்லாத இந்த ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பதற்காக அவர் ராஜினாமா செய்துவிட்டு, திரும்ப வந்து வெட்கமே இல்லாமல் வேறு சின்னத்தில் இப்போது வாக்கு கேட்கிறார்.

அதுவும் ஐந்து ஆண்டுகளாக அவர் எதுவும் செய்யவில்லை என்று அவரை வைத்துக்கொண்டே அமைச்சர் சொல்கிறார். அதைச் சொல்லிவிட்டு, அவருக்கே வாக்கு கேட்கிறார். இதைவிட மதுராந்தகம் மக்களான உங்களை கேவலப்படுத்த முடியுமா? தமிழகத்தில் தேர்தல் முடிவு வந்து ஜெயித்த கையோடு, ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்வது இதற்கு முன்னால் நடந்திருக்கிறதா? இல்லவே இல்லை. அப்பட்டமாக நடந்த குதிரை பேரத்தால் இந்தத் தேர்தல் நடக்கிறது.

ADVERTISEMENT

இப்படி நாம் சொன்னால் முதல்வர் விஜய் என்ன பேசுகிறார் தெரியுமா? ‘எம்.எல்.ஏ பதவியை ரிசைன் செய்துவிட்டுத்தான் அவங்க தவெகவில் சேர்ந்திருக்காங்களாம்… பெரிய கண்டுபிடிப்பு. ரிசைன் பண்ணவில்லை என்றால், கட்சித் தாவல் தடைச் சட்டம் பாய்ந்துவிடும். அதனால்தானே பொய்யான காரணத்தைச் சொல்லி, சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்கள். அதையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாமே சி.எம் சார்.

மக்களை ஏமாற்றுகிற முதலமைச்சருக்கும், உங்களை ஏமாற்றுகிற ஆளுங்கட்சி வேட்பாளருக்கும் தக்க பாடத்தை மதுராந்தகம் மக்கள் தர வேண்டும். தினமும் நான் தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

ADVERTISEMENT

சமூக வலைதளங்களிலும் பார்ப்பதுண்டு. தவெக வேட்பாளருக்கு எதிர்ப்பு, அவர் விரட்டி அடிக்கப்படுகிறார், ஆளுங்கட்சி வேட்பாளரால் தொகுதிக்குள்ளேயே நுழைய முடியவில்லை என செய்திகள் வருகின்றன.

தவெக சார்பில் நாங்கள் ஒரு நாயை நிற்க வைத்தால் கூட மக்கள் வாக்களிப்பார்கள் என்று பேசுகிறார்கள்! என்ன கொடுமை பாருங்கள்! எவ்வளவு கேவலமான நினைப்பு! இதையெல்லாம் தமிழ்நாட்டில் கேட்கவே, பார்க்கவே அருவெறுப்பாக, அசிங்கமாக இருக்கிறது.

நாம் செய்தது ஒரே தவறுதான். தேர்தலுக்கு முன்பு, தவெகவை நாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இருந்துவிட்டோம். கொள்கை எதிரிகளோடு மோதினோம். இந்தக் கோமாளிக் கூட்டத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம்.

அதோடு சேர்த்து, எஸ்ஐஆரில்  பல லட்சம் மக்களின் வாக்குரிமையும் பறிக்கப்பட்டது. இப்படி ஒரு சில காரணங்களால்தான், நம்முடைய வெற்றி வாய்ப்பை இழந்தோம். ஆனால், ஆட்சியமைத்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதுதான் யதார்த்தம்.

தவெகவுக்கு ஆதரவு அலை வீசியிருந்தால் குறைந்தபட்சம் 150 இடங்களிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 இடங்கள் கூட  அவர்களுக்கு கிடைக்கவில்லை. 

திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற கட்சிகளின் ஆதரவில்தான், இந்த ஆட்சியே அமைந்தது. அதனால், முதல்வர் என்னதான் ஹை-பிட்ச்சில்  கத்தினாலும், இது திமுகவுக்கு மக்கள் வழங்கிய வாக்குகளின் தயவால் நடக்கிற ஆட்சிதான்.

நான் உறுதியாகச் சொல்கிறேன். பல்வேறு குதிரை பேரங்கள் நடந்திருக்கின்றன. சில நாள் முன்பு கூட, உதயசூரியன் சின்னத்தில் களம் கண்ட இரண்டு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு வந்தால் அமைச்சராகியிருக்கலாம் என்று ஒரு அமைச்சரே கூச்சமில்லாமல் இங்கே மேடையில் பேசுகிறார்.

ஆனால், பெரிய உத்தமர் போல, முதல்வர் என்ன சொல்கிறார்… குதிரை பேரம், கழுதை பேரம் எல்லாம் இல்லை  என்கிறார். அவருக்குப் பொருத்தமான பெயரை அவரே செலக்ட் செய்து கொள்ளட்டும்.

டெல்லியில் யாருடன் ரகசிய கூட்டணியில் இருக்கிறார் என விரைவில் தெரியவரும். நம்பி போனவர்கள் நட்டாற்றில் நிற்கப்போகிறார்கள். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விவகாரத்தில் ஏன் முதல்வர் விஜய் வாய் திறக்கவில்லை. இவர் அரசியல் தலைவரா?  இவருடைய முகத்திரை முழுமையாக கிழியும்” என்று குறிப்பிட்டார்.

MK Stalin Speech | கரூரில் உங்க பாச்சா பலிக்கலையா? | TVK | CM Vijay | By Election | Minnambalam
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share