காங்கிரஸ் கூட்டணி விவகாரம் தொடர்பாக ஆதவ் அர்ஜூனா பேசியதற்கு கார்த்தி சிதம்பரம் விளக்கமளித்துள்ளார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, மாநிலங்களவை எம்.பி பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்,
அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு தவெகவுடன் கூட்டணி வைக்க எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விரும்பினார் . ராகுல் காந்திக்கு திமுக கூட்டணி பிடிக்கவே இல்லை. அவர்களுடன் சேர்ந்து அவர் பிரச்சாரம் செய்யவே இல்லை. மு.க.ஸ்டாலினுடன் பிரச்சாரம் செய்யவே கூடாது என்று முடிவு செய்துவிட்டார்.
ராகுல் காந்திக்கு பிடித்தது அவருடைய அம்மா. எல்லா மகன்களுக்கும் அம்மா சொல்வது பிடிக்கும். அம்மா முடிவெடுத்துவிட்டால் அவர்கள் பேச்சைத் தட்ட மாட்டார்கள். அங்கேயே எங்கள் கூட்டணி வாய்ப்பு கைநழுவிப்போனது.
பிரவீன் சக்ரவர்த்தி எவ்வளவோ போராடிப் பார்த்தார்.
இறுதியாக சோனியா காந்தி அவர்களிடம் தலைவர்கள் சென்றபோது, அவர்கள் “பழைய கூட்டணியிலேயே தொடர்வோம்” என்று கூறிவிட்டார்.
எங்கள் தலைவரால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. இதுதான் தலைமை பண்பு. அப்போது நான், தேர்தல் முடிந்த பிறகு தவெகவும், காங்கிரஸும் சேரும் என்று பிரவீண் அண்ணாவிடம் கூறினேன் என்று குறிப்பிட்டார்.
ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு தொடர்பாக இன்று (அக்டோபர் 3) சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. கார்த்தி சிதம்பரம், ”தேர்தலுக்கு முன்பாக எங்கள் கட்சியில் பலர் கலந்து ஆலோசித்து ஒரு அரசியல் முடிவை எடுத்தோம். அந்த அரசியல் முடிவு வெற்றிகரமாக அமையவில்லை. தேர்தலுக்கு பிறகு மீண்டும் கலந்து ஆலோசித்து ஒரு அரசியல் முடிவை எடுத்திருக்கிறோம். இதுதான் ரியாலிட்டி. எங்கள் கட்சிக்குள் எந்த தலைவர்கள் என்ன சொன்னார்கள் என அவர் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதுபற்றி அவர் பகுப்பாய்வு செய்யவும் அவசியம் கிடையாது” என்று பதிலளித்தார்.
