தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுகன்யாவிற்கும், மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பரந்தாமனுக்கும் ஆதரவு அளிக்க கோரி முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமாக மு.க.ஸ்டாலின் வீடியா ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தாராபுரம் தொகுதி வாக்காளர் பெருமக்களுக்கு வணக்கம். தேர்தல் முடிந்து நாலு மாதம் தான் ஆகிறது. அதற்குள் உங்கள் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துவிட்டது.
இந்த இடைத்தேர்தலுக்கான அவசியம் என்னவென்று ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். இந்நேரம் எல்லா தொகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) தங்களது தொகுதிக்கான பணிகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், உங்களுக்கு உண்மையாய் இருப்பார்கள் என்று நினைத்து நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர் என்ன செய்திருக்கிறார்? உங்களிடம் மறுபடியும் ஓட்டு கேட்டு வந்து நிற்கிறார். அவருடைய இந்தச் செயலில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? கொள்கை நேர்மை இருக்கிறதா? ஒரு துளியாவது உங்களுடைய நலன் இருக்கிறதா?
வாக்களித்த உங்களுடைய தன்மானத்தை விலைபேசி, ஆளுங்கட்சியின் குதிரைப் பேரத்திற்குத் துணைபோன அவர்களுக்கு நீங்கள் என்ன பதிலடி தரப்போகிறீர்கள்? வாக்கிற்காக உங்களை மறுபடியும் ஏமாற்றுவதற்காக அவர்கள் சொல்லும் கட்டுக்கதைகளையும் பொய்களையும் நம்பப்போகிறீர்களா?
உங்கள் தொகுதியில் ஆளுங்கட்சி வேட்பாளராகப் போட்டியிடுபவர்கள், ஓட்டு வாங்கிவிட்டு சும்மா உங்களிடம் நடிக்க என்ன காரணம் சொல்கிறார்கள்? ஆளுங்கட்சியில் சேர்ந்தால் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று நடிக்கிறார்கள். அதுவா உண்மை? ஆளுங்கட்சியில் இருந்தால்தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்றால், எல்லா ஆட்சியிலும் எதிர்க்கட்சியில் இருக்கும் அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியோடு கூடியிருக்க வேண்டுமே!
எதிர்க்கட்சித் தொகுதியில் வேலை செய்யாமல் ஒரு அரசால் புறக்கணிக்க முடியாது எனும் போது, கூட உங்களுக்குத் தெரியாது என்று நினைத்து ஏமாற்றுகிறார்களா?
அடுத்து என்ன சொல்கிறார்கள்? திமுக, அதிமுக கூட்டணி அமைக்கப் பார்த்தது என்று இல்லாத ஒரு கதையைச் சொல்லி ஏமாற்றப் பார்க்கிறார்கள். உண்மையில் அவர்களை வளர்த்து ஆளாக்கிய கட்சியை ஒழிக்க ஆளுங்கட்சி வேட்பாளர் செய்திருக்கக்கூடிய துரோகம்தான் இந்த இடைத்தேர்தல்!
இங்கு பிரச்சாரத்திற்கு வந்த முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை யாராவது அவர்கள் சொன்ன மகளிருக்கான ரூ.2500 கொடுத்துவிட்டோம், 6 சிலிண்டர் உங்களுக்கு அனுப்பிவிட்டோம் என்று சொல்லி வாக்கு கேட்கிறார்களா? இல்லையே!
ஏனென்றால் தவெக ஆட்சி என்பது மக்களாகிய உங்களுக்காக நன்மை செய்ய அமைந்த ஆட்சி அல்ல; மாஃபியா கும்பல்கள் தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்க அமைந்திருக்கக்கூடிய ஆட்சி. தமிழ்நாட்டைப் பின்னோக்கி அழைத்து விட்டு போகப்போகிறார்கள்.
விலைவாசியைக் கட்டுப்படுத்தச் சொன்னால், முதலமைச்சர் ஜோசியரின் ஆலோசனையைக் கேட்டு ரூ. 1200 கோடியில் தலைமைச் செயலகம் கட்டுவார். விவசாயிகள், மீனவர்கள், அரசு ஊழியர்கள் போராடினால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் லண்டன் சென்று கார் ரேஸ் பார்ப்பார். கொத்துக் கொத்தாகக் கொலைகள் நடந்தால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் ‘சிங்கப்பெண்கள் படை’ என்று ரீல்ஸ் போடுவார். இப்போதைக்கு அவர்களின் கவனமெல்லாம் எப்படி ஆட்சியைக் காப்பாற்ற சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க வேண்டும் என்பதுதான்!
அதனால் நான் உங்களிடம் கேட்பது, பிரச்சாரத்திற்கு வந்த ஆளுங்கட்சி வேட்பாளர்களை ஊருக்குள் அனுமதிக்காமல் எப்படி விரட்டினீர்களோ, அதே மாதிரி வரும் அக்டோபர் 6-ஆம் தேதி உங்கள் வாக்கால் அவர்களுக்குத் தோல்வியைக் கொடுத்துத் துரத்தியடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மக்களுக்கு எப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் ரீல்ஸ் போட்டு, பொய்யான கதைகளைச் செய்தியாக்கி மக்களை ஏமாற்ற முடியும் என்று நினைக்கும் தவெகவிற்கு, மக்களாகிய நீங்கள் இந்தத் தேர்தலில் ஏமாற்றத்தைத் தர வேண்டும். ஆளுங்கட்சியின் ஆணவத்திற்கும் அதன் வேட்பாளரின் துரோகத்திற்கும் நீங்கள் சரியான பாடம் புகட்டினால்தான், மறுபடியும் நமது தமிழ்நாட்டில் எங்கும் இந்த அநியாயம் நடக்காது.
உங்களுக்காக, இந்தத் தொகுதியின் வளர்ச்சிக்காக, முக்கியமாக உங்களுக்கு உண்மையாய் இருந்து மக்கள் பணியாற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் உங்கள் வீட்டுப் பெண்ணாக, மிக இளம் வயதிலேயே மக்கள் பணியாற்ற வந்திருக்கும் அருமைச் சகோதரி வழக்கறிஞர் S. சுகன்யா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
வாக்குச்சாவடிக்குப் போவதற்கு முன்னால் உங்களோட கரண்ட் பில்லையும் (மின்சாரக் கட்டணம்) மளிகைக் கடை பில்லையும் பார்த்துவிட்டுப் புறப்படுங்கள். தன்மானமுள்ள தாராபுரம் மக்களே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்!” என தெரிவித்துள்ளார்.
அதேபோல் மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
