காட்டுமன்னார்கோயில் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முருகுமாறன் இன்று அதிமுகவிலிருந்து விலகி, தாராபுரத்தில் பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் தன்னைத் தவெகவில் இணைத்துக் கொண்டார்.
அதிமுக தலைமையின் மீதான அதிருப்தியின் காரணமாக முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, செம்மலை, வைகைச்செல்வன் உட்படப் பலரும் தேர்தல் தோல்விக்குப் பிறகு தவெகவில் இணைந்துள்ள நிலையில், தற்போது அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதில், “அதிமுகவில் இன்றைய தலைமையை நம்பிக் கெட்டவர்கள் பலர் உண்டு; அவர்களில் நானும் ஒருவன். இன்று கோடிகளைக் கொண்டவர்களையே வேட்பாளர்களாகத் தேர்வு செய்ததால், தமிழகத்தில் மூன்றாவது கட்சியாகக் கடைக்கோடியில் நமது கழகம் உள்ளது. உழைத்தவர்களை விட்டுவிட்டு, கிடைத்தவர்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்தால் களத்தில் வெற்றிபெற முடியாது.
இனி நமது கழகத்தில் கோடிகள் இல்லாத, கொள்கை உரம் கொண்ட ஏழை எளியவர்கள், வறியவர்கள், உண்மையாக உழைப்பவர்கள் அரசியல் அதிகாரம் பெற முடியாது. ‘தமிழகத்தை மீட்போம் 2026‘ நிகழ்வில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் என்னை முன்னிலைப்படுத்தி, நம்பிக்கை ஊட்டி, இரவு பகலாக வேலை வாங்கிக்கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் 100% வெற்றிபெறக்கூடிய எனது சொந்தத் தொகுதியான காட்டுமன்னார்கோயில் தொகுதியை எனக்கு ஒதுக்காமல் தலைமை செய்த துரோகத்தை என் நெஞ்சம் மறக்க மறுக்கிறது.
மாணவப் பருவம் முதல் நகமும் சதையுமாக, உடலும் உயிருமாகப் பயணித்துப் பணியாற்றிய இப்பேரியக்கத்தில் இருந்து விலகிக்கொள்ள வேண்டிய சூழ்நிலையைத் தலைமை எனக்கு ஏற்படுத்திய நிலையை எண்ணி மனம் வலிக்கின்றது. ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னை வளர்த்த கட்சி’, ‘நான் வளர்த்த கட்சி’ என்ற நினைவுகள் என்றும் என் மனதில் நிலைத்து நிற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
யார் இந்த முருகுமாறன்?
என். முருகுமாறன் கடந்த 2011 மற்றும் 2016-ஆம் ஆண்டு காட்டுமன்னார்கோயில் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். கடந்த 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், காட்டுமன்னார்கோயில் தொகுதிக்குப் பதிலாகத் திட்டக்குடி (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அத்தேர்தல் முடிவில் திமுக வேட்பாளர் சி.வி. கணேசன் 63,106 வாக்குகளுடன் வெற்றிபெற்றார். தவெக வேட்பாளர் ராஜசேகர் 60,477 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். முருகு மாறன் 42,502 வாக்குகள் பெற்று 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோயிலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிமுக தலைமை மீதான அதிருப்தியில் இருந்த நிலையில், இன்று அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார்.
