தாராபுரம் அலங்கியம் சாலையில் சிபிஐ வேட்பாளர் லட்சுமணன் வாகனத்தை காவல் துறையினர் தடுத்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.
தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் வரும் அக்டோபர் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று இறுதிக்கட்டப் பரப்புரை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ சத்யபாமாவை ஆதரித்துத் தவெக தலைவரும் முதல்வருமான விஜய் இன்று ‘ரோடு ஷோ’ (Road Show) மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து தாராபுரம் – அலங்கியம் சாலையில் முதல்வர் வருகைக்காக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் லட்சுமணனின் பிரச்சார வாகனத்தைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
தங்கள் பிரச்சார வாகனம் நிறுத்தப்பட்டதை அடுத்து, சிபிஐ கட்சியினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒலிபெருக்கி வாயிலாகப் பேசிய சிபிஐ கட்சியினர், காவல்துறையைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், “சிபிஐ ஆதரவுடன் தான் ஆட்சி நடக்கிறது என்பதைக்காவல்துறை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்” என அக்கட்சி நிர்வாகிகள் ஆவேசமாகக் குரல் எழுப்பினர்.
வாக்குவாதத்தைத் தொடர்ந்து சிபிஐ வேட்பாளர் லட்சுமணனின் வாகனத்தைக் காவல்துறையினர் செல்ல அனுமதித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
முன்னதாக, தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட வீரச்சிமங்கலம் பிரிவுப் பகுதியில் தவெக தலைவர் விஜய் செல்வதால், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து நடந்த போராட்டத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது-
