சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவுக்கு சுவாச பிரச்சனைக்காக தற்போது கழுத்தின் முன்பகுதியில் துளையிட்டு ‘ட்ரக்கியோஸ்டமி’ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு கடந்த செப்டம்பர் 9-ம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் (MGM Healthcare) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வி.எஸ். பாபாவுக்கு திடீரென சுவாச கோளாறு, மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் தீவிர அவசர சிசிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்தி குறிப்புகளின்படி, ”Respiratory Ailment” அதாவது சுவாசக் கோளாறு, மூச்சுத்திணறல்என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்த மருத்துவமனை அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை. வி.எஸ். பாபுவின் உடல்நலன் பற்றி பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
’ட்ரக்கியோஸ்டமி’ சிகிச்சை
இதனையடுத்து எம்ஜிஎம் ஹெல்த்ஹேர் மருத்துவமனை வட்டாரங்களை தொடர்பு கொண்டு நாம் விசாரித்த போது, “வி.எஸ். பாபுவுக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனையடுத்து தற்போது அவருக்கு கழுத்தின் முன் பகுதியில் துளையிட்டு ‘ட்ரக்கியோஸ்டமி’ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.
ட்ரக்கியோஸ்டமி (Tracheostomy) என்றால் என்ன?
ஒரு நோயாளியால் வாய் அல்லது மூக்கு வழியாக சரியாக மூச்சுவிட முடியாதபோது, கழுத்தின் முன்பகுதியில் சிறிய துளை ஏற்படுத்தி, நேரடியாக மூச்சுக்குழாயில் ஒரு குழாய் பொருத்துவதுதான் ட்ரக்கியோஸ்டமி.


இதன் வழியாக காற்று நேரடியாக நுரையீரலுக்கு செல்லும். தேவைப்பட்டால் வென்டிலேட்டரையும் இந்தக் குழாயுடன் இணைக்கலாம்.
எப்போது செய்வார்கள்?
- நீண்ட நாட்களுக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்படும்போது
- தொண்டை அல்லது சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்படும்போது
- தொண்டையில் கடுமையான வீக்கம் அல்லது காயம் ஏற்பட்டிருக்கும்போது
- நோயாளியால் தானாக இருமி சளியை வெளியேற்ற முடியாதபோது
- மூளை அல்லது நரம்பு தொடர்பான பாதிப்பால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்போது.


என்ன பயன்?
- நோயாளி மூச்சுவிட உதவும்
- நீண்டகால வென்டிலேட்டர் சிகிச்சையை எளிதாக வழங்க முடியும்
- சளியை எளிதாக உறிஞ்சி வெளியே எடுக்க முடியும்
- வாய் வழியாக நீண்ட நாட்கள் மூச்சுக்குழாய் வைத்திருப்பதை தவிர்க்க முடியும்
- உடல்நிலை முன்னேறும்போது வென்டிலேட்டர் உதவியை படிப்படியாக குறைக்க உதவலாம்
சில நோயாளிகள் உடல்நிலை முன்னேறிய பிறகு சிறப்பு உதவியுடன் பேசவும் முடியும்.


ட்ரக்கியோஸ்டமி செய்தால் பேச முடியுமா?
ஆரம்பத்தில் பேசுவதில் சிரமம் இருக்கலாம். ஏனெனில் காற்று வழக்கம்போல் குரல்வளை வழியாக செல்லாமல் ட்ரக்கியோஸ்டமி குழாய் வழியாக வெளியேறும். ஆனால் உடல்நிலை முன்னேறிய பிறகு, மருத்துவர்கள் அனுமதியுடன் சிறப்பு Speaking Valve பயன்படுத்தி சில நோயாளிகளால் பேச முடியும்.
சாப்பிட முடியுமா?
ட்ரக்கியோஸ்டமி செய்துவிட்டதால் சாப்பிடவே முடியாது என்று அர்த்தமில்லை. நோயாளியால் பாதுகாப்பாக விழுங்க முடியுமா என்பதை மருத்துவர்கள் பரிசோதிப்பார்கள். அதன் பிறகே வாய் வழியாக உணவு கொடுக்கலாமா என்பதை முடிவு செய்வார்கள்.
இது நிரந்தரமா?
அவசியமில்லை. நோயாளி மீண்டும் தானாக நன்றாக மூச்சுவிட ஆரம்பித்து, வென்டிலேட்டர் உதவி தேவையில்லை என்ற நிலை வந்தால் மருத்துவர்கள் குழாயை அகற்றலாம். குழாய் அகற்றப்பட்ட பிறகு கழுத்தில் இருக்கும் துளை பெரும்பாலானவர்களுக்கு படிப்படியாக மூடிவிடும்.
என்னென்ன ஆபத்துகள் இருக்கலாம்?
- இரத்தப்போக்கு
- தொற்று
- சளியால் குழாய் அடைதல்
- குழாய் இடம் மாறுதல்
- குழாயை சுற்றிய பகுதியில் வீக்கம் அல்லது எரிச்சல்
- நீண்டகாலம் குழாய் இருந்தால் மூச்சுக்குழாயில் சில பாதிப்புகள் ஏற்படுதல்
இதனால் ட்ரக்கியோஸ்டமி குழாயை முறையாக பராமரிப்பதும், மருத்துவ கண்காணிப்பில் வைத்திருப்பதும் முக்கியம்.
ட்ரக்கியோஸ்டமி என்பது நோயாளியின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது என்பதற்கான அடையாளம் மட்டுமல்ல. சில நேரங்களில் நீண்டகால சுவாச உதவியை பாதுகாப்பாகவும் வசதியாகவும் வழங்குவதற்காக மருத்துவர்கள் இதை தேர்வு செய்கிறார்கள். நோயாளியின் உடல்நிலை முன்னேறினால், ட்ரக்கியோஸ்டமி குழாயை பின்னர் அகற்றுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
முன்னாள் முதல்வர்களுக்கு..
மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் கலைஞர் ஆகியோருக்கும் ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனை கட்டணம்- கைவிரித்த தவெக?
இதனிடையே வி.எஸ். பாபுவின் மருத்துவ செலவு தொடர்பாக சில தகவல்கள் நமது மின்னம்பலத்துக்கு கிடைத்துள்ளன. அதாவது, வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 23-ந் தேதி முதல்வர் விஜய், மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தார். அப்போது தவெக தரப்பில் மருத்துவமனைக்கு ரூ.15 லட்சம் கட்டணம் செலுத்தப்பட்டது. இதன் பின்னர் கட்டணம் தொடர்பாக மருத்துவமனை மற்றும் வி.எஸ்.பாபு குடும்பத்தினர், தவெக தலைமையை தொடர்பு கொண்ட போது தற்போது வரை சரியான பதில் கிடைக்கவில்லை என்கின்றனர்.
