தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற SIR நடவடிக்கையில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இதில், வாக்காளர்கள் அதிகமாக நீக்கப்பட்ட தொகுதிகளில் தவெக அதிக இடங்களை கைப்பற்றியிருப்பதை The Hindu BusinessLine நடத்திய தொகுதிவாரியான ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், SIR-ல் பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதும் திமுகவின் தேர்தல் தோல்விக்கு ஒரு காரணம் என்று அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், உண்மையில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் எந்தக் கட்சி அதிகமாக வெற்றி பெற்றது? என்பதை கண்டறிய The Hindu BusinessLine ஆய்வு செய்துள்ளது.
இதற்காக SIR-க்கு முன்பு ஒவ்வொரு தொகுதியிலும் இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கையையும், SIR-க்குப் பிறகு ஏப்ரல் 2026-ல் வெளியான வாக்காளர் பட்டியலில் இருந்த எண்ணிக்கையையும் ஒப்பிட்டுள்ளது. பின்னர் அந்த எண்ணிக்கையை 2026 சட்டசபை தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தது.

BusinessLine
இந்த ஆய்வின்படி
- 10,000-க்கும் குறைவான வாக்காளர்கள் நீக்கப்பட்ட 19 தொகுதிகளில் தவெக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. திமுக 7, அதிமுக 6, மற்ற கட்சிகள் 4 இடங்களில் வென்றுள்ளன.
- 10,000 முதல் 20,000 வரை வாக்காளர்கள் நீக்கப்பட்ட 80 தொகுதிகளில், தவெக 22, திமுக 20, அதிமுக 24, மற்ற கட்சிகள் 14 இடங்களில் வென்றுள்ளன.
- 20,000-க்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் தவெகவின் வெற்றி விகிதம் அதிகமாக இருக்கிறது
- 20,000 முதல் 30,000 வரை வாக்காளர்கள் நீக்கப்பட்ட 66 தொகுதிகளில் தவெக 32 இடங்களில் வென்றுள்ளது. திமுக 21, அதிமுக 11, மற்றவர்கள் 2 இடங்களில் வென்றுள்ளனர்.
- 30,000 முதல் 50,000 வரை வாக்காளர்கள் நீக்கப்பட்ட 37 தொகுதிகளில் தவெக 24 இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக 8, அதிமுக 5 இடங்களில் வென்றுள்ளன.
- 50,000 முதல் 80,000 வரை வாக்காளர்கள் நீக்கப்பட்ட 22 தொகுதிகளில் தவெக 18 இடங்களில் வென்றுள்ளது. திமுக 3, அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வென்றுள்ளன.
- 80,000-க்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்ட 10 தொகுதிகளிலும் தவெகவே வெற்றி பெற்றுள்ளது.
அதாவது,
20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்த 135 தொகுதிகளில் 84 தொகுதிகளை தவெக கைப்பற்றியுள்ளது.
மேலும், 2021-ல் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளில் சராசரியாக 26,953 வாக்காளர்களும், திமுக வெற்றி பெற்ற தொகுதிகளில் சராசரியாக 31,454 வாக்காளர்களும் SIR நடவடிக்கைக்குப் பிறகு குறைந்துள்ளனர். அதேபோல், மற்ற கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளில் சராசரியாக 23,114 வாக்காளர்கள் குறைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
